சனி, 11 ஜூலை, 2026

அவனுக்குள் அவள்



 சிறுகதை #அவனுக்குள் அவள்..!! # 

படைப்பு: எழுத்தாளர் இரா .கலைச்செல்வி, 
E.mail.: rksindira@gmail.com

                —---


பேராசிரியர் அய்க்கண்  நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை (₹ 10,000)

       கண்ணாடி ஒருபோதும் பொய் சொல்வதில்லை என்பார்கள். ஆனால் என் முன் நின்ற அந்த கண்ணாடி மட்டும் ,தினந்தோறும் எனக்கு ஒரு புதிய முகத்தை காட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மாற்றத்தை என்னுள் உணர்ந்தேன்.. 

       கால்பந்தின் பின்னால் ஓடும் கால்களை விட , நொண்டி விளையாடும் கால்களைத் தான் என் மனம் விரும்பியது. என் மனத்தைக் கண்டு எனக்கே ஒரு பயம் கலந்த வியப்பு எழுந்தது .புரியாத புதிராய். இருந்தது.

எனக்குள் இருக்கும் அந்த “அவள்” மெல்ல கண்விழிக்கத் தொடங்கிய தருணம் அது . யாரிடமும் சொல்ல முடியாத அந்த ரகசியம் என் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டிருந்தது .. என் பெயரை யாராவது உறக்கக் கூப்பிடும் போது , அது என் பெயர் இல்லை என்று மனம் மறுத்த அந்த வினாடி தான் , என் புதிய பயணத்தின் தொடக்கப் புள்ளி.

        ஆம்.எனக்கு அப்போது பதிமுன்று வயசு இருக்கும். ஏனோ என் நண்பர்களுடன், கபடி விளையாடவும் ,கால்பந்து விளையாடவும் எனக்கு பிடிக்கவேவில்லை. ஏதேதோ வித்தியாசமான உணர்வுகள். நான் ஏன் இப்படி உணர்கிறேன் என எனக்கே ஓரே குழப்பம். 

          அப்பா என்னை வித்தியாசமாக பார்த்தார். அம்மா ஏன் அப்படி செய்கிறாய் ? ஏன் இப்படி நடக்கிறாய் ? ஏன் அப்படி பேசுகிறாய்? என குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் நானாக இருக்க முடியவில்லை. அவர்களுக்காக பயந்து பயந்து நிறைய நடிக்க வேண்டியிருந்தது. சமீப காலமாக எனது பெற்றோர் என்னிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

          எனது பள்ளியிலும் என்னை வித்தியாசமாக பார்க்க துவங்கினர். என் பின்புறம் மறைமுகமாக ஏதேதோ பேசிக் கொண்டனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.   

          “ஏய் ரேவதி, என்னடி உன் பையன் இப்படி இருக்கான்? அவனை கவனிச்சியா? அவனோட பேச்சு, நடை ,உடை பாவனை எல்லாம் வித்தியாசமா இருக்கே..!”

          “நான் என்னங்க பண்ணுவேன். அவன் அப்படித்தான் இருக்கிறான் . எனக்கே பிடிக்கல தான். ஆம்பளை பசங்க கூடவே விளையாட மாட்டேங்குறான். எப்ப பார்த்தாலும் பொம்பள புள்ளைங்க கூடவே விளையாடுகிறான். ஏதாவது கேட்டா அழுக ஆரம்பிக்கிறான். நான் என்னங்க செய்ய முடியும்.? நீங்க அவனை விசாரிக்க வேண்டியது தானே.”

          இது போன்ற விதவிதமான உரையாடல்கள் தினமும் எனது வீட்டில் கேட்கும். என் அம்மா தனிமையில் அமர்ந்து சில நேரங்களில் அழுது கொண்டிருப்பாள். என் அப்பா என்னை எப்போதும் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். என் அப்பா ஒரு அரசு உயர் அதிகாரி. யாராவது வீட்டிற்கு வந்தால் என்னை அவர்கள் முன் அனுமதிக்க மாட்டார். என்னை எரித்து விடுவது போல் பார்ப்பார். நான் எனது அறைக்குள் சென்று விடுவேன் .அம்மா அப்பாவின் பாசம் இன்றி நான் பரிதவித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் கழிவது எனக்கு நரக வேதனையாக இருந்தது.

           எட்டாம் வகுப்பு வரை, படிப்பில் நான் தான் வகுப்பில், முதல் மாணவன்.‌. நான் நன்கு படிப்பதால் மாணவர்கள் மத்தியில் எனக்கு ஒரு தனி இடம் இருந்தது. நான் தான் என் வகுப்பு தலைவன் . ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. எனது நண்பர்களே என்னை கேலியாய் பார்க்கத் தொடங்கினர்.

            வீட்டுக்கு வந்தால் எனது நிலை இன்னும் மோசமாய் இருந்தது. என் அம்மா எப்போதும் என்னை திட்டிக் கொண்டே இருந்தாள். எனது மனது முழுவதும் எப்போதும் ஒரு குழப்பத்திலேயே இருந்தது. பலவிதமான உணர்ச்சிகளை உணர்ந்தேன். என் உணர்வுகளை யாருடன் பகிர்ந்து கொள்வது எனத் தெரியாமல் குழம்பித் தவித்தேன்.

            நான் யாருமற்ற அனாதையாய் உணர்ந்தேன். என் குரல் தற்போது மாறியுள்ளது எனக்கே தெரிகிறது. ஏன் என் குரல் இப்படி மாறிவிட்டது என யாரை கேட்பது.? என் அம்மா ஏன் இப்படி பொம்பள புள்ள மாதிரி பேசுகிறாய்..? என திட்டுகிறார்களே ஒழிய, டாக்டரிடம் போய் காண்பிக்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. 

           என் அம்மா என்னுடன் வந்து பாசமாய் பேசி ,உனக்கு என்ன பிரச்சனை என்று ஒரு நாளும் கேட்டதில்லை. என்னை ஏன் இவர்கள் பெற்றார்கள் .? நான் என்ன தவறு செய்தேன். ? என் பெற்றோர்களே , இப்படி காயப்படுத்தி, என்னை கொன்று கொண்டிருக்கிறார்களே என்ற கேள்வி என்னுள்.

            என் அண்ணாவை மட்டும் எப்போதும் கொண்டாடுகிறார்கள். என்னை மட்டும் புழுவை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். நான் ஏன் இருக்க வேண்டும் இவ்வுலகில்.? இதே கேள்வி என்னுள் எப்போதும். 

           எனது பள்ளியில் கால் ஊனமாகிவிட்ட சுந்தரை கூட, அவன் பெற்றோர் எவ்வளவு அன்பாக நடத்துகிறார்கள். நிறைய பேர் என் பள்ளியில் உடல் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் என்னை போல் பள்ளியில் யாருமே இல்லை. 

           பெண்களைப் போல உடை உடுத்திக் கொள்ள ஆசை வருகிறது. 
ஒரு நாள், நான் எனது அம்மாவின் சேலையை உடுத்தி, கண்ணாடியின் முன் நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்ததை ,அப்பா பார்த்து விட்டார். எனக்கு கை கால் எல்லாம் நடுங்கியது. அவமானத்தால் கூனி குறுகிப் போனேன் . அப்பா ருத்ர தாண்டவம் ஆடினார். என்னை தீண்டத்தகாதவன் போல் பார்க்க தொடங்கினார்.

            அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அதிகாலை நான்கு மணிக்கு யாரும் எழுந்திருப்பதற்கு முன்னால் எழுந்து , சாலையில் நடந்தேன். போகிறேன் போகிறேன் வழி தெரியாமல் போகிறேன். எனது வீட்டை விட்டு வெகுதூரம் சென்று விட்டேன். பரந்த பச்சை பசேல் என்ற வயல்வெளி. அங்கு யாருமே இல்லாத இடத்தில் ஒரு பெரிய கிணறு இருந்தது. சட்டென்று அந்த யோசனை வந்தது. குதித்து விட்டேன் . எனக்கு நீச்சல் தெரியாது. இருந்தாலும் கிணற்றில் குதித்த பிறகு, ஐயோ நாம் சாகப் போகிறோமா என்று உணர்வு என்னுள் வந்து, கையும் காலையும் ஆட்டி ,நீச்சல் அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்த ஒரு விவசாயி, என்னை பார்த்து கிணற்றில் குதித்து, என்னை காப்பாற்றி விட்டார். 

            என்னை காப்பாற்றிய அவர் , என்னுடன் அன்போடு பேசினார். அவரின் அன்பில் நான் நெகிழ்ந்து போனேன். என்னைப் பற்றியும், எனது பெற்றோர் நடந்து கொள்வதைப் பற்றியும் , எடுத்துக் கூறி ஐயா நான் உங்களுடனே வந்து விடட்டுமா.? . என் வீட்டாரிடம் என்னை சேர்த்து விடாதீர்கள். நான் மறுபடியும் தற்கொலை செய்து கொள்வேன் என்றேன். அவரும் முழு மனதோடு என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பள்ளி படிப்பு அத்துடன் நின்றுவிட்டது. அவருக்கு வயல்வெளிகளில் சிறு சிறு உதவிகள் செய்தேன். என்னை உண்மையில் மிகவும் அன்போடு பார்த்துக் கொண்டார். அவருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே. அவள் என்னை அண்ணா அண்ணா என அன்போடு அழைத்தாள். அந்த அன்பில் நான் அகம் மகிழ்ந்து போனேன்.

           அவளுடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியோடு விளையாடினேன். அவளின் தோழிகளும் விளையாட வந்தார்கள். எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த விவசாயி அப்பா என்னை அருவருப்பாய் பார்க்கவில்லை. என்னைப் புரிந்து கொண்டு உன் விருப்பப்படி இரு என கூறிவிட்டார். இரண்டு வருடம் இப்படியே நன்கு ஓடியது. என் வீட்டில் என்னைத் தேடி இருப்பார்களா? தேடி இருக்கக்கூடும். 

          இந் நிலையில் தான் என் வாழ்வில் ஒரு திருப்பம். எனது எதிர்காலம் என்ன என கேள்வி எழுந்தது. அந்நிலையில் என்னை போல் உள்ள ஒரு ஆண்மகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. விவசாயி அப்பா தான் அவனை அறிமுகப்படுத்தினார். அவனிடம் இருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் .அப்போது எனக்கு என்று ஒரு இனம் இருப்பது புரிந்தது .அவர்களுடன் பேசுவதற்கு நிறைய இருந்தது. பரிமாறிக் கொள்ள அத்துணை விஷயங்கள் .அது ஒரு தனி உலகமாய் இருந்தது. அந்த உலகம் எனக்கு ஆனந்தத்தை தந்தது.

           அதனால், நான் அந்த விவசாயி அப்பாவிடம் கூறிவிட்டு ,அந்த தனி உலகத்திற்கு செல்ல தீர்மானித்தேன் .நான் அவர்களோடு சென்றாலும் அடிக்கடி வந்து அவரை பார்த்து செல்வதாக உறுதியளித்தேன். நான் சென்னை வந்து என் இனத்தோடு சேர்த்த பிறகு, எனக்கு அங்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். . ஆனால் வயிற்றுப் பிழைப்புக்கு தான் என்ன செய்வது என தெரியவில்லை. எத்தனை நாள் இலவசமாக உணவு கொடுப்பார்கள்.?   

           அங்கு நான் ஒரு பெண்ணைப் போல உடை அணிந்து கொண்டேன். அது எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. முதன் முதலில் நான் நானாக இருப்பதாய் உணர்ந்தேன்.

          இரண்டு மாதங்கள் கழித்து, எனது இனம் என்னை கைதட்டி பிச்சை எடுக்க அழைத்தது. அப்போது என் அடுத்த கட்ட சோதனை ஆரம்பமானது. எனது அப்பா பெரிய அரசு அதிகாரி. நான் போய் கைத்தட்டி பிச்சை எடுப்பதா.? மனதிற்குள் பல தயக்கங்கள், போராட்டங்கள். 

         என் வீட்டை விட்டு வந்து விட்டேன். என் வீட்டை விட இங்கு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஆனால் வயிற்றுக்கு என்ன செய்வது..?
 பாத்ரூம் கழுவ கூட தயார் .ஆனால் பிச்சை எடுக்க வரமாட்டேன் என அழுதேன். “உனக்கு யார் அந்த வேலை கொடுப்பார்கள் ? பாத்திரம் கழுவும் வேலையும் கிடைக்காது. பாத்ரூம் கழுவும் வேலையும் கிடைக்காது. கிளம்பு போகலாம்” என்றாள் ஒருத்தி. “ஏன் சித்தாள் வேலை கூட யாரும் தர மாட்டார்கள்” என்றாள் மற்றொருத்தி. வேறு வழியின்றி கைத்தட்ட கிளம்பினேன். 

           ஒரு ஆறு மாதம் அப்படியே சென்றது. வசூல் அவ்வளவாக இல்லை. மீண்டும் பிரச்சினை தொடங்கியது. இரவு வேலைக்கு கூப்பிட்டார்கள். முழுமையாய் மறுத்துவிட்டேன். அப்போது ஒரு முடிவு செய்தேன். நானும் ,என்னை போல் சுயமரியாதை கொண்ட இன்னொருத்தியும், தனியே சென்று வாழ திட்டமிட்டோம்.

             இந்தப் பரந்த பூமியில் எங்களுக்கு வாழ வழி தெரியவில்லை. இருவரும் பிச்சை எடுக்கும் தொழில் செய்து, கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு வீடு வாடகைக்கு பார்க்க திட்டமிட்டோம். யாரும் வாடகைக்கு வீடு கொடுப்பதாக இல்லை. கெஞ்சி கூத்தாடி ,என் குடும்ப பின்னனி நிலவரம் எடுத்துக் கூறி, ஒரு வழியாய் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரே ஒரு அறை கிடைத்தது.

            இந்த இடத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என மனதில் உறுதி கொண்டு, இருவரும் உழைக்க தொடங்கினோம். தினமும் ரேஷன் அரிசி கஞ்சியும் ஊறுகாயும் தான். அந்த வீட்டின் உரிமையாளருக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தோம். அந்த வயதான தம்பதியினர் அகமகிழ்ந்து போனார்கள். அவரின் உதவியால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ,எங்கள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் கொண்டனர். நாங்களும் பண்போடு நடந்து கொண்டோம்.

           பாத்திரம் கழுவவும். பாத்ரூம் கழுவவும் சிலர் அனுமதித்தனர். அந்த தெருவில் உள்ள அனைவருக்கும், எங்களால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்தோம். ஒரு வழியாய் ஒரு விடுதலை கிடைத்தது போல ஒரு உணர்வு. நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் மகிழ்ச்சியாய் வாழ ஆரம்பித்திருந்தோம்.

             படிப்பதில் எனக்கு இருந்த ஆர்வத்தை தெரிந்து கொண்ட, எனது தோழி என்னை தொலைதூரக்கல்வியில் சேர்ந்து படிக்கும் படி, வேண்டிக் கொண்டாள். நானும் எனது பள்ளி இறுதி தேர்வினை தனித்தேர்வராக விண்ணப்பித்து வெற்றி பெற்று ,+2 முடித்து , பட்டப்படிப்பையும் துவங்கினேன். 

              எந்தக் காதல் வலையிலும் சிக்கக் கூடாது என நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். எத்தனையோ பிரச்சனைகள் வரத்தான் செய்தன. சமாளித்தோம். மிகக் கடினமாய் உழைத்தோம். ஓரளவு கையில் பணம் புரண்டது. 

             பட்டப்படிப்பை படித்துக் கொண்டே ,எனக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என முயற்சித்தேன். மாதம் பத்து ஆயிரம் சம்பளத்திற்கு ஒரு பெரிய துணிக்கடையில் வேலை கிடைத்தது. எனது தோழி வீட்டு வேலைகள் செய்து சம்பாதித்தாள். நான் ஜவுளிக்கடைக்கு சென்று வந்தேன் .வாழ்க்கை மகிழ்ச்சியாய் ஆனந்தமாய் சென்று கொண்டிருந்தது.

          ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அந்த நிகழ்வு நடந்தது. அந்த ஜவுளி கடைக்கு என் அம்மா வந்திருந்தாள். எதற்காக சென்னை வந்தாள். ஏன்? என்பதெல்லாம் எனக்கு தெரியாது .நான் அவளை அடையாளம் கண்டு கொண்டேன் .ஆனால் என் அம்மாவால் என்னை அடையாளம் காண முடியவில்லை. என் மனதிற்குள் உணர்வுகள் கடல் அலைகளாய் பொங்கி எழுந்தன. கண்ணீர் மள மளவென கொட்டியது. என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. என் அம்மா என்னை பார்த்து…. யாரோ என நினைத்து சென்று கொண்டிருந்தாள். நான் ,அவள் வழி மீது…விழி வைத்து…. கண்ணீர் மல்க நின்றிருந்தேன்.

           வேண்டுமென்றே யாரோ ஒரு அம்மாவை, அம்மா… இங்கே வாங்க, இந்த புடவையை பாருங்க என கூப்பிட்டேன். அப்பொழுதாவது என் அம்மா என் குரலை கேட்டு திரும்பி பார்ப்பாள் என. அவளும் திரும்பிப் பார்த்து, நான் யாரையோ கூப்பிடுகிறேன் என நினைத்து வேகமாக சென்றுவிட்டாள். சில ஜவுளிகள் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தாள்.

          பெற்ற பிள்ளையை தாய்க்கு தெரியவில்லை. அப்படி ஒரு இனத்தில் நான் பிறந்து விட்டேன். .. என்ன செய்ய.?. அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அழுது தவித்து என் தோழியிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். என் மனதிற்குள், இன்னும் நாம் எதையாவது சாதித்து ,உலகிற்கு நான் யார் என காட்ட வேண்டும் என திடமாய் முடிவு செய்தேன்.
    
        ஆண், பெண் இனம் போல , நாங்களும் ஒரு மனித இனம் தானே.! நாங்கள் இந்த பரந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாமல், எவ்வளவு அலைக்கழிக்கப்படுகிறோம் என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். ‌ இதுவரை எங்களுக்கென்று அரசு வேலைவாய்ப்பில், ஒரு இட ஒதுக்கீடு கூட தரப்படவில்லை. எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த போதிலும், இன்னும் மாநில அரசுகள் யோசித்துக் கொண்டே இருக்கின்றன. பெண்களுக்கான பொதுவான ஒதுக்கீட்டிலும் , பொதுவான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் எங்களை சேர்த்துள்ளார்கள்.

             பரவாயில்லை. எங்களின் உடல் அமைப்பில் தான் கோளாறு. மூளையில் கோளாறு இல்லை. இந்த மூளையை பயன்படுத்தி நிச்சயம் என் அப்பாவை விட ஒரு உயர் பதவியில் அமர வேண்டும் என முடிவு செய்தேன். அவனுக்குள் புதைந்திருந்த அவள் , யார் என உலகிற்கு காட்டப் போகிறேன். 

          வெற்றிகரமாக எனது பட்டப் படிப்பை முடித்து, இரண்டு வருடங்கள் கடினமாக உழைத்து , பல அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தேன். இந்திய ஆட்சிப்பணி தேர்வு உட்பட. எனது ஜவுளிக்கடை வேலையையும் விட்டுவிட்டு ஒரு வருடம் , எப்போதும் படிப்பு ,எப்போதும் அதே நினைவு என்று இருந்து, பல தேர்வுகளை எழுதினேன். அதில் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, பயிற்சி முடிந்து, இரண்டு வருடங்களில் டிஎஸ்பி பதவி கிடைத்தது. என்னுள் மட்டற்ற மகிழ்ச்சி. ஏதோ சாதித்து விட்ட ஒரு மன நிறைவு என்னுள்.

              இரண்டு வருடங்கள் கழித்து நான் பிறந்த ஊருக்கே டி.எஸ்.பியாக பதவி ஏற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதவியேற்ற இரண்டு வாரத்தில் என்னை பிரபல டிவியில் பேட்டி காண வந்தார்கள். வழக்கமான கேள்விகள். அத்தனைக்கும் பதில் அளித்தேன். எனது பெற்றோர் எங்கே இருக்கிறார்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு தெரியாது என்ற பதிலையும் ,அவர்களின் பெயரையும் சொல்ல மறுத்துவிட்டேன். நான் பிறந்த ஊர் இது என்பதை மட்டும் கூறினேன்.
எதற்காக என் பெற்றோரைப் பற்றி சொல்ல வேண்டும்.? நான் காணவில்லை என்றதும் போய் தொலையட்டும் என அப்படியே விட்டுவிட்டவர்கள் அல்லவா அவர்கள். 

           “ரேவதி நம்ம ஊருக்கு ஒரு திருநங்கை டி.எஸ்.பியா வந்திருக்காளாம். அவதான் பேட்டி கொடுக்கிறாள். வந்து பாரேன். அவள் பிறந்த ஊர் இந்த ஊர் எனக் கூறுகிறாள். தொலைந்து போன நமது பையன் போல் தோன்றுகிறது. நம்ம பையன் சாயல்ல இருக்கிறாள். உண்மையில் அவனாக இருக்குமா.? அவன் அப்பவே பெண் பிள்ளை போல் சேலை கட்டி பார்த்துக் ரசித்துக் கொண்டிருந்தானே? ‌ அவன் திருநங்கையாக மாறியிருப்பானோ.! இதை எப்படி உறுதிப்படுத்துவது..?”

        “ஆமாங்க எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. மனசு படபடன்னு வருது.”

         “ஒரு நாள் அவளின் அலுவலகத்திற்கு யாரோ போல் சென்று பார்க்கலாமா..?”‌ 

      “என்ன காரணம் சொல்லி போய் பார்ப்பாய்.” 

        “ஒரு யோசனை . 20 வருஷத்துக்கு முன் எனது பையனை காணவில்லை என புகார் கொடுக்கப் போகலாம். நமது மகனாய் இருந்தால் பேசும் போது நிச்சயம் தெரிந்துவிடும்.”

        “இருபது வருடங்கள் கழித்து இப்போ…”

         “நாம என்ன தேடாமலா இருந்தோம்?. அப்பவே போலீஸில் புகார் கொடுக்க தான் செய்தோம். அவர்களும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. நாமும் பெரிய அளவில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இப்போ 20 வருடங்கள் கழித்து புகார் அளிக்க கூடாதா என்ன .? புகார் கொடுக்கிற சாக்கில் எதற்கும் போய் பார்த்து வருவோமே..! எனக்கு 70 சதவிகிதம் அவள் நம்ம பையன் தான் என தோன்றுகிறது. நீங்கள் அவனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தீர்கள். அவனிடம் முகம் கொடுத்து அன்பாய் பேசுவதில்லை. அந்த வலி தாங்காமல் தான் விட்டை விட்டு சென்று விட்டான்.”

        “சரி அதைப் பேசி இப்ப என்ன செய்ய . தப்புதான் ரேவதி .அடுத்த வாரம் சென்று பார்ப்போம். புகார் கடிதம் ஒன்று ரெடி செய்ய வேண்டும். மேலும் நம்ம பையனின் போட்டோ , இருந்தால் எடுத்துக்கொள்.”

         மறுவாரத்தில் டி .எஸ். பி இந்திராவை பார்க்க ஆயத்தமானார்கள். “ஏங்க…. பேரு கூட ஒத்துப் போகுதுங்க. நம்ம பையன் பேரு சந்திரன். சந்திரா என்று இருக்க வேண்டாம் என்று இந்திரா என்று மாற்றி இருப்பாளோ..!”

        “இருக்கலாம் .”

         அடுத்த வாரம் டி.எஸ்.பி இந்திராவின் அலுவலகத்தை அடைந்தனர். 
இந்திராவின் நேர்முக உதவியாளரை சந்தித்து, டி.எஸ். பி அம்மாவை பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டனர்.  

         “என்ன விஷயம்? எதற்காக பார்க்க வேண்டும்.?”

          “20 வருடங்களுக்கு முன் எனது மகன் காணாமல் போய் விட்டான். அவனைப் பற்றி ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இப்போது அதற்கு மனு கொடுக்க வந்துள்ளோம்.”  

          “அப்படியா.? இந்த பேப்பரில் உங்களின் பெயர் எழுதிக் கொடுங்கள். கேட்டு வருகிறேன்” எனக்கூறி உள்ளே சென்றார். 

        “வணக்கம் மேடம். ரேவதி என்ற ஒரு அம்மா அவரின் கணவருடன் வந்திருக்கிறார். உங்களை பார்க்க வேண்டுமாம் .”

        “என்ன ரேவதியா..?” என்றவள் சமாளித்துக் கொண்டு, “என்ன விஷயமா பார்க்கணுமாம்” எனக் கேட்டாள். 

        “மேடம் அவர்கள் பையனை 20 வருடத்திற்கு முன் காணவில்லையாம் .ஏற்கனவே புகார் கொடுத்து ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். அதனால் அதுபற்றி உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளார்கள்.”

       ‌”அப்படியா.? ஒரு அரை மணி நேரம் ஆகும் .எனக்கு முக்கிய கோப்புகளை பார்க்க வேண்டி உள்ளது. அரை மணி நேரம் கழித்து கூப்பிடுகிறேன் எனக் கூறுங்கள்.”

       “சரிங்க மேடம்” என்று கூறி திரும்பிய நேர்முக உதவியாளர், இவர்களிடம் “மேடம் அரை மணி நேரத்தில் உங்களை அழைப்பதாக கூறியுள்ளார்” என்றார்.

         ரேவதிக்கு இருப்பு கொள்ளவில்லை. பலவிதமான மனப்போராட்டங்கள். என்ன பேசுவது.? எப்படி பேசுவது .?என பல்வேறு கேள்விகள் ரேவதியின் இதயத்தை பதம் பார்த்தன. 

         உள்ளே இந்திராவின் மனதும் அதே நிலைதான். எப்படி இவர்களைப் பார்ப்பது.? என்ன சொல்லுவது.? எப்படி பேசுவது.? மனது சட்டென்று இறுக்கமானது. இந்திராவின் மனதிற்குள் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது. பழைய நினைவுகள் வந்து கண்களில் நீர் முட்டியது. தான் பெற்ற பிள்ளை என்று கூட பார்க்காமல் எப்படி எல்லாம் என் மனதை வாட்டி எடுத்தார்கள். சிறையில் இருப்பது போல் அல்லவா அங்கு இருந்தேன். எப்படி அவர்களை நேருக்கு நேர் பார்ப்பது என தவிர்த்துக் கொண்டிருந்தாள் இந்திரா. 

         அந்நேரத்தில் எஸ். பி. (காவல் கண்காணிப்பாளர்) அவளைப் பார்க்க வந்திருந்தார். நேர்முக உதவியாளர், “மேடம் உங்களை பார்க்க எஸ்.பி சார் வந்திருக்காரு மேடம்.”

         “அப்படியா உடனே அனுப்புங்க. அப்புறம் அந்த அம்மாவை போயிட்டு நாளைக்கு வர சொல்லுங்க.”. எனக் கூறி விட்டு மனதை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

      எஸ்.பி உள்ளே நுழைந்தார்.  

      “எஸ் சார்” என எழுந்து நின்றாள் இந்திரா. 

        “உக்காருங்க இந்திரா .எப்படி இருக்கீங்க.? இந்த ஊர் உங்களுக்கு பிடிச்சிருக்கா. ‌ ஓ.. சாரி இது உங்கள் சொந்த ஊர் என்று பேட்டியில் சொன்னீர்களே. உங்களுக்கு தெரிந்தவர்கள் இங்கு உள்ளனரா.”  

       “நான் பதிமூன்று வயதிலேயே இந்த ஊரை விட்டு சென்று விட்டேன் சார்.”

        நேர்முக உதவியாளர் திரும்பி வந்து , “எஸ்.பி. வந்திருக்காங்க. மீட்டிங் முடிய நேரமாகும். உங்கள நாளைக்கு வர சொல்றாங்க மேடம்…”எனக் கூறிவிட்டு தனது வேலையை பார்க்கத் துவங்கினார் .

        “தம்பி நாங்க வெயிட் பண்றோம். மதியம் பார்க்க முடியுமா”எனக் கேட்டாள் ரேவதி.  

        “இல்லம்மா. மேடம் உங்களை போக சொல்லிட்டாங்க. நீங்க உங்க அப்ளிகேஷனா குடுங்க . நான் அப்புறமா அம்மாவிடம் கொடுத்து விடுகிறேன். அதுல காணாம போன உங்க பையனோட போட்டோ இருக்கு இல்லையா.”

        “இருக்கு தம்பி.”  

        “சரி நான் கொடுத்துடறேன். நீங்க நாளைக்கு வாங்க. கவலைப்படாதீங்க. மேடம் எப்படியும் உங்க பையனை கண்டு பிடிச்சு கொடுத்துடுவாங்க..!”

         ரேவதி தனது கணவரைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.

முற்றும்.

_______   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவனுக்குள் அவள்

 சிறுகதை #அவனுக்குள் அவள்..!! #  படைப்பு: எழுத்தாளர் இரா .கலைச்செல்வி,  E.mail.: rksindira@gmail.com                 —--- பேராச...