சனி, 11 ஜூலை, 2026

அவனுக்குள் அவள்



 சிறுகதை #அவனுக்குள் அவள்..!! # 

படைப்பு: எழுத்தாளர் இரா .கலைச்செல்வி, 
E.mail.: rksindira@gmail.com

                —---


பேராசிரியர் அய்க்கண்  நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை (₹ 10,000)

       கண்ணாடி ஒருபோதும் பொய் சொல்வதில்லை என்பார்கள். ஆனால் என் முன் நின்ற அந்த கண்ணாடி மட்டும் ,தினந்தோறும் எனக்கு ஒரு புதிய முகத்தை காட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மாற்றத்தை என்னுள் உணர்ந்தேன்.. 

       கால்பந்தின் பின்னால் ஓடும் கால்களை விட , நொண்டி விளையாடும் கால்களைத் தான் என் மனம் விரும்பியது. என் மனத்தைக் கண்டு எனக்கே ஒரு பயம் கலந்த வியப்பு எழுந்தது .புரியாத புதிராய். இருந்தது.

எனக்குள் இருக்கும் அந்த “அவள்” மெல்ல கண்விழிக்கத் தொடங்கிய தருணம் அது . யாரிடமும் சொல்ல முடியாத அந்த ரகசியம் என் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டிருந்தது .. என் பெயரை யாராவது உறக்கக் கூப்பிடும் போது , அது என் பெயர் இல்லை என்று மனம் மறுத்த அந்த வினாடி தான் , என் புதிய பயணத்தின் தொடக்கப் புள்ளி.

        ஆம்.எனக்கு அப்போது பதிமுன்று வயசு இருக்கும். ஏனோ என் நண்பர்களுடன், கபடி விளையாடவும் ,கால்பந்து விளையாடவும் எனக்கு பிடிக்கவேவில்லை. ஏதேதோ வித்தியாசமான உணர்வுகள். நான் ஏன் இப்படி உணர்கிறேன் என எனக்கே ஓரே குழப்பம். 

          அப்பா என்னை வித்தியாசமாக பார்த்தார். அம்மா ஏன் அப்படி செய்கிறாய் ? ஏன் இப்படி நடக்கிறாய் ? ஏன் அப்படி பேசுகிறாய்? என குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் நானாக இருக்க முடியவில்லை. அவர்களுக்காக பயந்து பயந்து நிறைய நடிக்க வேண்டியிருந்தது. சமீப காலமாக எனது பெற்றோர் என்னிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

          எனது பள்ளியிலும் என்னை வித்தியாசமாக பார்க்க துவங்கினர். என் பின்புறம் மறைமுகமாக ஏதேதோ பேசிக் கொண்டனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.   

          “ஏய் ரேவதி, என்னடி உன் பையன் இப்படி இருக்கான்? அவனை கவனிச்சியா? அவனோட பேச்சு, நடை ,உடை பாவனை எல்லாம் வித்தியாசமா இருக்கே..!”

          “நான் என்னங்க பண்ணுவேன். அவன் அப்படித்தான் இருக்கிறான் . எனக்கே பிடிக்கல தான். ஆம்பளை பசங்க கூடவே விளையாட மாட்டேங்குறான். எப்ப பார்த்தாலும் பொம்பள புள்ளைங்க கூடவே விளையாடுகிறான். ஏதாவது கேட்டா அழுக ஆரம்பிக்கிறான். நான் என்னங்க செய்ய முடியும்.? நீங்க அவனை விசாரிக்க வேண்டியது தானே.”

          இது போன்ற விதவிதமான உரையாடல்கள் தினமும் எனது வீட்டில் கேட்கும். என் அம்மா தனிமையில் அமர்ந்து சில நேரங்களில் அழுது கொண்டிருப்பாள். என் அப்பா என்னை எப்போதும் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். என் அப்பா ஒரு அரசு உயர் அதிகாரி. யாராவது வீட்டிற்கு வந்தால் என்னை அவர்கள் முன் அனுமதிக்க மாட்டார். என்னை எரித்து விடுவது போல் பார்ப்பார். நான் எனது அறைக்குள் சென்று விடுவேன் .அம்மா அப்பாவின் பாசம் இன்றி நான் பரிதவித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் கழிவது எனக்கு நரக வேதனையாக இருந்தது.

           எட்டாம் வகுப்பு வரை, படிப்பில் நான் தான் வகுப்பில், முதல் மாணவன்.‌. நான் நன்கு படிப்பதால் மாணவர்கள் மத்தியில் எனக்கு ஒரு தனி இடம் இருந்தது. நான் தான் என் வகுப்பு தலைவன் . ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. எனது நண்பர்களே என்னை கேலியாய் பார்க்கத் தொடங்கினர்.

            வீட்டுக்கு வந்தால் எனது நிலை இன்னும் மோசமாய் இருந்தது. என் அம்மா எப்போதும் என்னை திட்டிக் கொண்டே இருந்தாள். எனது மனது முழுவதும் எப்போதும் ஒரு குழப்பத்திலேயே இருந்தது. பலவிதமான உணர்ச்சிகளை உணர்ந்தேன். என் உணர்வுகளை யாருடன் பகிர்ந்து கொள்வது எனத் தெரியாமல் குழம்பித் தவித்தேன்.

            நான் யாருமற்ற அனாதையாய் உணர்ந்தேன். என் குரல் தற்போது மாறியுள்ளது எனக்கே தெரிகிறது. ஏன் என் குரல் இப்படி மாறிவிட்டது என யாரை கேட்பது.? என் அம்மா ஏன் இப்படி பொம்பள புள்ள மாதிரி பேசுகிறாய்..? என திட்டுகிறார்களே ஒழிய, டாக்டரிடம் போய் காண்பிக்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. 

           என் அம்மா என்னுடன் வந்து பாசமாய் பேசி ,உனக்கு என்ன பிரச்சனை என்று ஒரு நாளும் கேட்டதில்லை. என்னை ஏன் இவர்கள் பெற்றார்கள் .? நான் என்ன தவறு செய்தேன். ? என் பெற்றோர்களே , இப்படி காயப்படுத்தி, என்னை கொன்று கொண்டிருக்கிறார்களே என்ற கேள்வி என்னுள்.

            என் அண்ணாவை மட்டும் எப்போதும் கொண்டாடுகிறார்கள். என்னை மட்டும் புழுவை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். நான் ஏன் இருக்க வேண்டும் இவ்வுலகில்.? இதே கேள்வி என்னுள் எப்போதும். 

           எனது பள்ளியில் கால் ஊனமாகிவிட்ட சுந்தரை கூட, அவன் பெற்றோர் எவ்வளவு அன்பாக நடத்துகிறார்கள். நிறைய பேர் என் பள்ளியில் உடல் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் என்னை போல் பள்ளியில் யாருமே இல்லை. 

           பெண்களைப் போல உடை உடுத்திக் கொள்ள ஆசை வருகிறது. 
ஒரு நாள், நான் எனது அம்மாவின் சேலையை உடுத்தி, கண்ணாடியின் முன் நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்ததை ,அப்பா பார்த்து விட்டார். எனக்கு கை கால் எல்லாம் நடுங்கியது. அவமானத்தால் கூனி குறுகிப் போனேன் . அப்பா ருத்ர தாண்டவம் ஆடினார். என்னை தீண்டத்தகாதவன் போல் பார்க்க தொடங்கினார்.

            அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அதிகாலை நான்கு மணிக்கு யாரும் எழுந்திருப்பதற்கு முன்னால் எழுந்து , சாலையில் நடந்தேன். போகிறேன் போகிறேன் வழி தெரியாமல் போகிறேன். எனது வீட்டை விட்டு வெகுதூரம் சென்று விட்டேன். பரந்த பச்சை பசேல் என்ற வயல்வெளி. அங்கு யாருமே இல்லாத இடத்தில் ஒரு பெரிய கிணறு இருந்தது. சட்டென்று அந்த யோசனை வந்தது. குதித்து விட்டேன் . எனக்கு நீச்சல் தெரியாது. இருந்தாலும் கிணற்றில் குதித்த பிறகு, ஐயோ நாம் சாகப் போகிறோமா என்று உணர்வு என்னுள் வந்து, கையும் காலையும் ஆட்டி ,நீச்சல் அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்த ஒரு விவசாயி, என்னை பார்த்து கிணற்றில் குதித்து, என்னை காப்பாற்றி விட்டார். 

            என்னை காப்பாற்றிய அவர் , என்னுடன் அன்போடு பேசினார். அவரின் அன்பில் நான் நெகிழ்ந்து போனேன். என்னைப் பற்றியும், எனது பெற்றோர் நடந்து கொள்வதைப் பற்றியும் , எடுத்துக் கூறி ஐயா நான் உங்களுடனே வந்து விடட்டுமா.? . என் வீட்டாரிடம் என்னை சேர்த்து விடாதீர்கள். நான் மறுபடியும் தற்கொலை செய்து கொள்வேன் என்றேன். அவரும் முழு மனதோடு என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பள்ளி படிப்பு அத்துடன் நின்றுவிட்டது. அவருக்கு வயல்வெளிகளில் சிறு சிறு உதவிகள் செய்தேன். என்னை உண்மையில் மிகவும் அன்போடு பார்த்துக் கொண்டார். அவருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே. அவள் என்னை அண்ணா அண்ணா என அன்போடு அழைத்தாள். அந்த அன்பில் நான் அகம் மகிழ்ந்து போனேன்.

           அவளுடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியோடு விளையாடினேன். அவளின் தோழிகளும் விளையாட வந்தார்கள். எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த விவசாயி அப்பா என்னை அருவருப்பாய் பார்க்கவில்லை. என்னைப் புரிந்து கொண்டு உன் விருப்பப்படி இரு என கூறிவிட்டார். இரண்டு வருடம் இப்படியே நன்கு ஓடியது. என் வீட்டில் என்னைத் தேடி இருப்பார்களா? தேடி இருக்கக்கூடும். 

          இந் நிலையில் தான் என் வாழ்வில் ஒரு திருப்பம். எனது எதிர்காலம் என்ன என கேள்வி எழுந்தது. அந்நிலையில் என்னை போல் உள்ள ஒரு ஆண்மகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. விவசாயி அப்பா தான் அவனை அறிமுகப்படுத்தினார். அவனிடம் இருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் .அப்போது எனக்கு என்று ஒரு இனம் இருப்பது புரிந்தது .அவர்களுடன் பேசுவதற்கு நிறைய இருந்தது. பரிமாறிக் கொள்ள அத்துணை விஷயங்கள் .அது ஒரு தனி உலகமாய் இருந்தது. அந்த உலகம் எனக்கு ஆனந்தத்தை தந்தது.

           அதனால், நான் அந்த விவசாயி அப்பாவிடம் கூறிவிட்டு ,அந்த தனி உலகத்திற்கு செல்ல தீர்மானித்தேன் .நான் அவர்களோடு சென்றாலும் அடிக்கடி வந்து அவரை பார்த்து செல்வதாக உறுதியளித்தேன். நான் சென்னை வந்து என் இனத்தோடு சேர்த்த பிறகு, எனக்கு அங்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். . ஆனால் வயிற்றுப் பிழைப்புக்கு தான் என்ன செய்வது என தெரியவில்லை. எத்தனை நாள் இலவசமாக உணவு கொடுப்பார்கள்.?   

           அங்கு நான் ஒரு பெண்ணைப் போல உடை அணிந்து கொண்டேன். அது எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. முதன் முதலில் நான் நானாக இருப்பதாய் உணர்ந்தேன்.

          இரண்டு மாதங்கள் கழித்து, எனது இனம் என்னை கைதட்டி பிச்சை எடுக்க அழைத்தது. அப்போது என் அடுத்த கட்ட சோதனை ஆரம்பமானது. எனது அப்பா பெரிய அரசு அதிகாரி. நான் போய் கைத்தட்டி பிச்சை எடுப்பதா.? மனதிற்குள் பல தயக்கங்கள், போராட்டங்கள். 

         என் வீட்டை விட்டு வந்து விட்டேன். என் வீட்டை விட இங்கு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஆனால் வயிற்றுக்கு என்ன செய்வது..?
 பாத்ரூம் கழுவ கூட தயார் .ஆனால் பிச்சை எடுக்க வரமாட்டேன் என அழுதேன். “உனக்கு யார் அந்த வேலை கொடுப்பார்கள் ? பாத்திரம் கழுவும் வேலையும் கிடைக்காது. பாத்ரூம் கழுவும் வேலையும் கிடைக்காது. கிளம்பு போகலாம்” என்றாள் ஒருத்தி. “ஏன் சித்தாள் வேலை கூட யாரும் தர மாட்டார்கள்” என்றாள் மற்றொருத்தி. வேறு வழியின்றி கைத்தட்ட கிளம்பினேன். 

           ஒரு ஆறு மாதம் அப்படியே சென்றது. வசூல் அவ்வளவாக இல்லை. மீண்டும் பிரச்சினை தொடங்கியது. இரவு வேலைக்கு கூப்பிட்டார்கள். முழுமையாய் மறுத்துவிட்டேன். அப்போது ஒரு முடிவு செய்தேன். நானும் ,என்னை போல் சுயமரியாதை கொண்ட இன்னொருத்தியும், தனியே சென்று வாழ திட்டமிட்டோம்.

             இந்தப் பரந்த பூமியில் எங்களுக்கு வாழ வழி தெரியவில்லை. இருவரும் பிச்சை எடுக்கும் தொழில் செய்து, கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு வீடு வாடகைக்கு பார்க்க திட்டமிட்டோம். யாரும் வாடகைக்கு வீடு கொடுப்பதாக இல்லை. கெஞ்சி கூத்தாடி ,என் குடும்ப பின்னனி நிலவரம் எடுத்துக் கூறி, ஒரு வழியாய் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரே ஒரு அறை கிடைத்தது.

            இந்த இடத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என மனதில் உறுதி கொண்டு, இருவரும் உழைக்க தொடங்கினோம். தினமும் ரேஷன் அரிசி கஞ்சியும் ஊறுகாயும் தான். அந்த வீட்டின் உரிமையாளருக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தோம். அந்த வயதான தம்பதியினர் அகமகிழ்ந்து போனார்கள். அவரின் உதவியால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ,எங்கள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் கொண்டனர். நாங்களும் பண்போடு நடந்து கொண்டோம்.

           பாத்திரம் கழுவவும். பாத்ரூம் கழுவவும் சிலர் அனுமதித்தனர். அந்த தெருவில் உள்ள அனைவருக்கும், எங்களால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்தோம். ஒரு வழியாய் ஒரு விடுதலை கிடைத்தது போல ஒரு உணர்வு. நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் மகிழ்ச்சியாய் வாழ ஆரம்பித்திருந்தோம்.

             படிப்பதில் எனக்கு இருந்த ஆர்வத்தை தெரிந்து கொண்ட, எனது தோழி என்னை தொலைதூரக்கல்வியில் சேர்ந்து படிக்கும் படி, வேண்டிக் கொண்டாள். நானும் எனது பள்ளி இறுதி தேர்வினை தனித்தேர்வராக விண்ணப்பித்து வெற்றி பெற்று ,+2 முடித்து , பட்டப்படிப்பையும் துவங்கினேன். 

              எந்தக் காதல் வலையிலும் சிக்கக் கூடாது என நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். எத்தனையோ பிரச்சனைகள் வரத்தான் செய்தன. சமாளித்தோம். மிகக் கடினமாய் உழைத்தோம். ஓரளவு கையில் பணம் புரண்டது. 

             பட்டப்படிப்பை படித்துக் கொண்டே ,எனக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என முயற்சித்தேன். மாதம் பத்து ஆயிரம் சம்பளத்திற்கு ஒரு பெரிய துணிக்கடையில் வேலை கிடைத்தது. எனது தோழி வீட்டு வேலைகள் செய்து சம்பாதித்தாள். நான் ஜவுளிக்கடைக்கு சென்று வந்தேன் .வாழ்க்கை மகிழ்ச்சியாய் ஆனந்தமாய் சென்று கொண்டிருந்தது.

          ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அந்த நிகழ்வு நடந்தது. அந்த ஜவுளி கடைக்கு என் அம்மா வந்திருந்தாள். எதற்காக சென்னை வந்தாள். ஏன்? என்பதெல்லாம் எனக்கு தெரியாது .நான் அவளை அடையாளம் கண்டு கொண்டேன் .ஆனால் என் அம்மாவால் என்னை அடையாளம் காண முடியவில்லை. என் மனதிற்குள் உணர்வுகள் கடல் அலைகளாய் பொங்கி எழுந்தன. கண்ணீர் மள மளவென கொட்டியது. என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. என் அம்மா என்னை பார்த்து…. யாரோ என நினைத்து சென்று கொண்டிருந்தாள். நான் ,அவள் வழி மீது…விழி வைத்து…. கண்ணீர் மல்க நின்றிருந்தேன்.

           வேண்டுமென்றே யாரோ ஒரு அம்மாவை, அம்மா… இங்கே வாங்க, இந்த புடவையை பாருங்க என கூப்பிட்டேன். அப்பொழுதாவது என் அம்மா என் குரலை கேட்டு திரும்பி பார்ப்பாள் என. அவளும் திரும்பிப் பார்த்து, நான் யாரையோ கூப்பிடுகிறேன் என நினைத்து வேகமாக சென்றுவிட்டாள். சில ஜவுளிகள் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தாள்.

          பெற்ற பிள்ளையை தாய்க்கு தெரியவில்லை. அப்படி ஒரு இனத்தில் நான் பிறந்து விட்டேன். .. என்ன செய்ய.?. அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அழுது தவித்து என் தோழியிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். என் மனதிற்குள், இன்னும் நாம் எதையாவது சாதித்து ,உலகிற்கு நான் யார் என காட்ட வேண்டும் என திடமாய் முடிவு செய்தேன்.
    
        ஆண், பெண் இனம் போல , நாங்களும் ஒரு மனித இனம் தானே.! நாங்கள் இந்த பரந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாமல், எவ்வளவு அலைக்கழிக்கப்படுகிறோம் என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். ‌ இதுவரை எங்களுக்கென்று அரசு வேலைவாய்ப்பில், ஒரு இட ஒதுக்கீடு கூட தரப்படவில்லை. எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த போதிலும், இன்னும் மாநில அரசுகள் யோசித்துக் கொண்டே இருக்கின்றன. பெண்களுக்கான பொதுவான ஒதுக்கீட்டிலும் , பொதுவான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் எங்களை சேர்த்துள்ளார்கள்.

             பரவாயில்லை. எங்களின் உடல் அமைப்பில் தான் கோளாறு. மூளையில் கோளாறு இல்லை. இந்த மூளையை பயன்படுத்தி நிச்சயம் என் அப்பாவை விட ஒரு உயர் பதவியில் அமர வேண்டும் என முடிவு செய்தேன். அவனுக்குள் புதைந்திருந்த அவள் , யார் என உலகிற்கு காட்டப் போகிறேன். 

          வெற்றிகரமாக எனது பட்டப் படிப்பை முடித்து, இரண்டு வருடங்கள் கடினமாக உழைத்து , பல அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தேன். இந்திய ஆட்சிப்பணி தேர்வு உட்பட. எனது ஜவுளிக்கடை வேலையையும் விட்டுவிட்டு ஒரு வருடம் , எப்போதும் படிப்பு ,எப்போதும் அதே நினைவு என்று இருந்து, பல தேர்வுகளை எழுதினேன். அதில் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, பயிற்சி முடிந்து, இரண்டு வருடங்களில் டிஎஸ்பி பதவி கிடைத்தது. என்னுள் மட்டற்ற மகிழ்ச்சி. ஏதோ சாதித்து விட்ட ஒரு மன நிறைவு என்னுள்.

              இரண்டு வருடங்கள் கழித்து நான் பிறந்த ஊருக்கே டி.எஸ்.பியாக பதவி ஏற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதவியேற்ற இரண்டு வாரத்தில் என்னை பிரபல டிவியில் பேட்டி காண வந்தார்கள். வழக்கமான கேள்விகள். அத்தனைக்கும் பதில் அளித்தேன். எனது பெற்றோர் எங்கே இருக்கிறார்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு தெரியாது என்ற பதிலையும் ,அவர்களின் பெயரையும் சொல்ல மறுத்துவிட்டேன். நான் பிறந்த ஊர் இது என்பதை மட்டும் கூறினேன்.
எதற்காக என் பெற்றோரைப் பற்றி சொல்ல வேண்டும்.? நான் காணவில்லை என்றதும் போய் தொலையட்டும் என அப்படியே விட்டுவிட்டவர்கள் அல்லவா அவர்கள். 

           “ரேவதி நம்ம ஊருக்கு ஒரு திருநங்கை டி.எஸ்.பியா வந்திருக்காளாம். அவதான் பேட்டி கொடுக்கிறாள். வந்து பாரேன். அவள் பிறந்த ஊர் இந்த ஊர் எனக் கூறுகிறாள். தொலைந்து போன நமது பையன் போல் தோன்றுகிறது. நம்ம பையன் சாயல்ல இருக்கிறாள். உண்மையில் அவனாக இருக்குமா.? அவன் அப்பவே பெண் பிள்ளை போல் சேலை கட்டி பார்த்துக் ரசித்துக் கொண்டிருந்தானே? ‌ அவன் திருநங்கையாக மாறியிருப்பானோ.! இதை எப்படி உறுதிப்படுத்துவது..?”

        “ஆமாங்க எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. மனசு படபடன்னு வருது.”

         “ஒரு நாள் அவளின் அலுவலகத்திற்கு யாரோ போல் சென்று பார்க்கலாமா..?”‌ 

      “என்ன காரணம் சொல்லி போய் பார்ப்பாய்.” 

        “ஒரு யோசனை . 20 வருஷத்துக்கு முன் எனது பையனை காணவில்லை என புகார் கொடுக்கப் போகலாம். நமது மகனாய் இருந்தால் பேசும் போது நிச்சயம் தெரிந்துவிடும்.”

        “இருபது வருடங்கள் கழித்து இப்போ…”

         “நாம என்ன தேடாமலா இருந்தோம்?. அப்பவே போலீஸில் புகார் கொடுக்க தான் செய்தோம். அவர்களும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. நாமும் பெரிய அளவில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இப்போ 20 வருடங்கள் கழித்து புகார் அளிக்க கூடாதா என்ன .? புகார் கொடுக்கிற சாக்கில் எதற்கும் போய் பார்த்து வருவோமே..! எனக்கு 70 சதவிகிதம் அவள் நம்ம பையன் தான் என தோன்றுகிறது. நீங்கள் அவனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தீர்கள். அவனிடம் முகம் கொடுத்து அன்பாய் பேசுவதில்லை. அந்த வலி தாங்காமல் தான் விட்டை விட்டு சென்று விட்டான்.”

        “சரி அதைப் பேசி இப்ப என்ன செய்ய . தப்புதான் ரேவதி .அடுத்த வாரம் சென்று பார்ப்போம். புகார் கடிதம் ஒன்று ரெடி செய்ய வேண்டும். மேலும் நம்ம பையனின் போட்டோ , இருந்தால் எடுத்துக்கொள்.”

         மறுவாரத்தில் டி .எஸ். பி இந்திராவை பார்க்க ஆயத்தமானார்கள். “ஏங்க…. பேரு கூட ஒத்துப் போகுதுங்க. நம்ம பையன் பேரு சந்திரன். சந்திரா என்று இருக்க வேண்டாம் என்று இந்திரா என்று மாற்றி இருப்பாளோ..!”

        “இருக்கலாம் .”

         அடுத்த வாரம் டி.எஸ்.பி இந்திராவின் அலுவலகத்தை அடைந்தனர். 
இந்திராவின் நேர்முக உதவியாளரை சந்தித்து, டி.எஸ். பி அம்மாவை பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டனர்.  

         “என்ன விஷயம்? எதற்காக பார்க்க வேண்டும்.?”

          “20 வருடங்களுக்கு முன் எனது மகன் காணாமல் போய் விட்டான். அவனைப் பற்றி ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இப்போது அதற்கு மனு கொடுக்க வந்துள்ளோம்.”  

          “அப்படியா.? இந்த பேப்பரில் உங்களின் பெயர் எழுதிக் கொடுங்கள். கேட்டு வருகிறேன்” எனக்கூறி உள்ளே சென்றார். 

        “வணக்கம் மேடம். ரேவதி என்ற ஒரு அம்மா அவரின் கணவருடன் வந்திருக்கிறார். உங்களை பார்க்க வேண்டுமாம் .”

        “என்ன ரேவதியா..?” என்றவள் சமாளித்துக் கொண்டு, “என்ன விஷயமா பார்க்கணுமாம்” எனக் கேட்டாள். 

        “மேடம் அவர்கள் பையனை 20 வருடத்திற்கு முன் காணவில்லையாம் .ஏற்கனவே புகார் கொடுத்து ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். அதனால் அதுபற்றி உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளார்கள்.”

       ‌”அப்படியா.? ஒரு அரை மணி நேரம் ஆகும் .எனக்கு முக்கிய கோப்புகளை பார்க்க வேண்டி உள்ளது. அரை மணி நேரம் கழித்து கூப்பிடுகிறேன் எனக் கூறுங்கள்.”

       “சரிங்க மேடம்” என்று கூறி திரும்பிய நேர்முக உதவியாளர், இவர்களிடம் “மேடம் அரை மணி நேரத்தில் உங்களை அழைப்பதாக கூறியுள்ளார்” என்றார்.

         ரேவதிக்கு இருப்பு கொள்ளவில்லை. பலவிதமான மனப்போராட்டங்கள். என்ன பேசுவது.? எப்படி பேசுவது .?என பல்வேறு கேள்விகள் ரேவதியின் இதயத்தை பதம் பார்த்தன. 

         உள்ளே இந்திராவின் மனதும் அதே நிலைதான். எப்படி இவர்களைப் பார்ப்பது.? என்ன சொல்லுவது.? எப்படி பேசுவது.? மனது சட்டென்று இறுக்கமானது. இந்திராவின் மனதிற்குள் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது. பழைய நினைவுகள் வந்து கண்களில் நீர் முட்டியது. தான் பெற்ற பிள்ளை என்று கூட பார்க்காமல் எப்படி எல்லாம் என் மனதை வாட்டி எடுத்தார்கள். சிறையில் இருப்பது போல் அல்லவா அங்கு இருந்தேன். எப்படி அவர்களை நேருக்கு நேர் பார்ப்பது என தவிர்த்துக் கொண்டிருந்தாள் இந்திரா. 

         அந்நேரத்தில் எஸ். பி. (காவல் கண்காணிப்பாளர்) அவளைப் பார்க்க வந்திருந்தார். நேர்முக உதவியாளர், “மேடம் உங்களை பார்க்க எஸ்.பி சார் வந்திருக்காரு மேடம்.”

         “அப்படியா உடனே அனுப்புங்க. அப்புறம் அந்த அம்மாவை போயிட்டு நாளைக்கு வர சொல்லுங்க.”. எனக் கூறி விட்டு மனதை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

      எஸ்.பி உள்ளே நுழைந்தார்.  

      “எஸ் சார்” என எழுந்து நின்றாள் இந்திரா. 

        “உக்காருங்க இந்திரா .எப்படி இருக்கீங்க.? இந்த ஊர் உங்களுக்கு பிடிச்சிருக்கா. ‌ ஓ.. சாரி இது உங்கள் சொந்த ஊர் என்று பேட்டியில் சொன்னீர்களே. உங்களுக்கு தெரிந்தவர்கள் இங்கு உள்ளனரா.”  

       “நான் பதிமூன்று வயதிலேயே இந்த ஊரை விட்டு சென்று விட்டேன் சார்.”

        நேர்முக உதவியாளர் திரும்பி வந்து , “எஸ்.பி. வந்திருக்காங்க. மீட்டிங் முடிய நேரமாகும். உங்கள நாளைக்கு வர சொல்றாங்க மேடம்…”எனக் கூறிவிட்டு தனது வேலையை பார்க்கத் துவங்கினார் .

        “தம்பி நாங்க வெயிட் பண்றோம். மதியம் பார்க்க முடியுமா”எனக் கேட்டாள் ரேவதி.  

        “இல்லம்மா. மேடம் உங்களை போக சொல்லிட்டாங்க. நீங்க உங்க அப்ளிகேஷனா குடுங்க . நான் அப்புறமா அம்மாவிடம் கொடுத்து விடுகிறேன். அதுல காணாம போன உங்க பையனோட போட்டோ இருக்கு இல்லையா.”

        “இருக்கு தம்பி.”  

        “சரி நான் கொடுத்துடறேன். நீங்க நாளைக்கு வாங்க. கவலைப்படாதீங்க. மேடம் எப்படியும் உங்க பையனை கண்டு பிடிச்சு கொடுத்துடுவாங்க..!”

         ரேவதி தனது கணவரைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.

முற்றும்.

_______   


திங்கள், 29 ஜூன், 2026

நவசமாஜ் மகளிர் மேடையின் சாதனை பெண் விருது வழங்கும் விழாவில் ஒரு விருது பெற்ற ஒரு மாணவியின் தந்தையின் கருத்து.

காலை வணக்கம் மேடம்

27/6/2026 வரலாற்று சிறப்புமிக்க அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் மகளிர் மேடை சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழா

திருமதி இரா கலைச்செல்வி 
நிர்வாகத் தலைவர் 
மகளிர் மேடை
அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது 

இந்நிகழ்ச்சி தொடர்பான என்னுடைய பார்வை மற்றும் கருத்துக்கள் ....

இந்நிகழ்ச்சியில் 
நிர்வாகத் தலைவர் மகளிர் மேடை திருமதி இரா கலைச்செல்வி ஆகிய தங்களின் இந்த சமுதாயத்தின் மீதான உணர்வுபூர்வமான ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் அதில் முக்கியமாக பெண் குழந்தைகள் மீதான நலன் வெளிப்பட்டது. தங்களின் இந்த சமூகப்பணி மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது தங்களின் இந்த பணி மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்...

விழா மிக நேர்த்தியாக சிறப்பாக நடைபெற்றது நிகழ்வை அருமையாக தங்களுடன் இணைந்து நடத்திய நிர்வாக குழு மிகச் சிறப்பாக செயல்பட்டது அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் மெய்சிலிர்க்க வைத்தன பாராட்டுக்கள்....

இந்த அற்புதமான நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் இருந்தது. இந்த இடத்தை தேர்வு செய்யப்பட்டதற்கும் தேர்வு செய்யப்பட்ட இடத்தை நிகழ்ச்சிக்காக பெற தாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் ஈடுபாட்டிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்....

விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றிகள்...

இந்த சாதனை பெண் பாராட்டு விழா நிச்சயமாக எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் அவர்கள் வாழ்வில் வெற்றி பெற இந்நிகழ்ச்சி அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஆர்வத்தையும் வழங்கும்
முதல் படிக்கட்டாகவும் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை...

நன்றிகள் பல கோடி 
இந்த அற்புதமான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியமைக்கு....

தங்களின் சமுதாய நோக்கம் சமுதாய பணி என்றென்றும் தொடர எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 

💐💐💐💐💐💐

ஞாயிறு, 28 ஜூன், 2026

என் மனதை கசக்கிய மரணங்கள்.

என் மனதை கசக்கிய மரணங்கள்: 


இந்திரா காந்தி ,ராஜீவ் காந்தி என்ற பெரிய ஆளுமைகளின் மரணத்தை தொடர்ந்து ,கொரோனா காலத்தில் நடிகர் விவேக், பாடகர் பாலசுப்ரமணியன் அவர்களின் மரணங்கள் நம்ப முடியாத அதிர்ச்சியும் வேதனையையும் அளித்தது.


அந்த வரிசையில் நடிகர் ,இயக்குனர், தயாரிப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட பாக்கியராஜ் அவர்களின் திடீர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் தவிக்கிறது. 


அவரின் பெருமைகளை பேசவோ அவர் நடிப்பின் திறமையை பாராட்டவோ எனக்குத் தகுதி இல்லை. எனக்கு அவரின் மனிதம் பிடிக்கும். அவரின் பேச்சு பிடிக்கும். அவரின் நகைச்சுவை பிடிக்கும். அவரின் அந்த சிரிப்பு பிடிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர்  என்ற  ரீதியில்  ஏதோ ஒரு இனம் புரியாத  உணர்வு அவரின் மறைவை நம்ப மறுக்கிறது. 


திரைப்படத் துறையில்  நடிகர் சிவகுமாரை அடுத்து ஒரு நல்ல குடும்பத் தலைவன். அவரின் மனைவி நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் என் மனதை தொட்ட நடிகை. இந்தப் பெரும் இழப்பை தாங்கிக்  கொள்கிற சக்தியை அவருக்கு இந்தப் பிரபஞ்சம் வழங்க வேண்டும்.



போன வாரம் எனக்கு அறம் விருதுகள் வழங்கப்பட்டபோது அவர் கையால் விருது வாங்குகிற அதிர்ஷ்டம் நமக்கு இல்லையே என்று பெரிதும் நினைத்தேன்.  ஏனெனில் கடந்த வருடம் அறம் விருதுகளை அவர்தான் வழங்கினார்.



கனத்த இதயத்துடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 



எழுத்தாளர் இரா. கலைச் செல்வி

செவ்வாய், 9 ஜூன், 2026

தானத்தில் சிறந்த தானம்

#தானத்தில் சிறந்த தானம்#


ஆக்கம்: கவிஞர் இரா .கலைச்செல்வி 

        -----
தானத்தில் சிறந்த சீர்மிகு தானம் இது .
தன் உறுப்பைத் தந்து உதவுவது.!

மறைந்த பின்னரும் வாழ்வதற்கு - இது
மண்ணுலகில் மக்கள் தந்த வரமிது..!

மனிதம் போற்றும் மாண்பிது - நீ
மரணத்தை வெல்லும் வழி இது..!

முடிந்து போனது வாழ்வென்று - நீ
முடிவை எண்ணிக் கலங்காதே!

காலம் உன்னை அழைத்தாலும் - நீ
கலங்கி நின்று போகாதே..!

விடைபெற்றுப் போகும் வேளையிலும் - நீ
விதையாய் மாற வழியுண்டு..!

உறுப்பைத் தந்து உயிர்வாழு - நீ
உலகை விட்டுப் பிரியாதே..!

இறந்த பின்னும் உன் இதயம் ,
இன்னொரு உயிரில் துடித்திடலாம்.!

உறங்கப் போகும் கண்களை - பிறர்
உலகைப் பார்க்கத் தந்திடலாம்!

உதிரம் தந்து பிறஉயிர் காப்பவர் போல் -
உன் உறுப்பைத் தந்து உயிர் காத்திடலாம்..!

மண்ணுக்குள் மடியும் உடல் உறுப்பினை ,
மனிதன் உயிர் வாழ கொடுத்திடலாம்..!

கண்ணீர் சிந்தும் குடும்பத்தில் - நீ
புன்னகை பூக்கச் செய்திடலாம்!

மரணத்திற்குப் பின்பும் வாழ்வதற்கு- இங்கே 
உன்னத தானம் தானம் உறுப்பு தானமே ..!

வாழும் போதே முடிவெடுப்போம் - நாம்
வள்ளல் ஆகிப் நிலைத்திடுவோம்..!




முற்றும்.




ஞாயிறு, 7 ஜூன், 2026

அமெரிக்காவில் கல்யாணம்


 சிறுகதை : #அமெரிக்காவில் கல்யாணம் #

படைப்பு இரா. கலைச் செல்வி.

  ‌‌ ******
        சென்னை மயிலாப்பூரில், கபாலீஸ்வரர் கோயில் அருகில் ரங்கராஜன் அய்யரின் வீடு இருந்தது. ரங்கராஜன் அய்யர், ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். மிகவும் கண்டிப்பானவர், பாரம்பரிய பழக்கவழக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்று கொண்டவர். அவருடைய மனைவி ஜானகி மாமி, பாரம்பரியத்தில் பற்று கொண்டிருந்தாலும் அன்பானவர், ஆனால் கணவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர். 
        அவர்களின் ஒரே மகள் கௌரி, பி.இ. முடித்து ,ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் புத்திசாலிப் பெண். 28 வயது கௌரி இந்தக் காலத்து யுவதிகளைப் போல, நவீன எண்ணங்கள் கொண்டவளாக இருந்தாலும், பெற்றோருக்கு மிகவும் மரியாதை கொடுப்பவள். 
         தற்போது கௌரியின் திருமணம் தான் ரங்கராஜன் அய்யரின் ஒரே இலக்கு. தனது குலம், கோத்திரம், இவைதான் அவருடைய ஒரே கோட்பாடு. 
         "கௌரிக்கு 28 வயதாகிறது. எந்தப் பையனைப் பார்த்தாலும் பிடிக்க வில்லை என்கிறாளே. இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்..?" என்று ஒரு நாள் மாமியிடம் கோபமாகக் கேட்டார் ரங்கராஜன்.
         ஜானகி மாமி பயந்துகொண்டே, "அவளுக்கு நல்ல சம்பளத்தில், சென்னையில் செட்டில் ஆகும் மாப்பிள்ளை ஆக பாருங்கள் என்கிறாள் , அய்யர்வாள். வேறென்ன?" என்றார்.
         "நானும் ஒரு ஐம்பது வரன்களைப் பார்த்தாகிவிட்டது. என் நண்பர் மாதவனின் மகன், ராமச்சந்திரன் நல்ல பையன். அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறான். சம்பளம் மாதம் பதினைந்தாயிரம் டாலராம். ஜாதகம் அமோகமா பொருத்தி இருக்கு. அவனையும் போட்டோவை பார்த்தே , எனக்கு இவனைப் பிடிக்கவில்லை' என்கிறாள். இவளுக்கு என்னதான் வேண்டும்?" என்று மாமியிடம் சீறினார் அய்யர். 
         மூன்று மாதங்களுக்கு பின் , ஒருநாள் அய்யர் அவசரமாக வீட்டிற்கு வந்தார். "ஜானகி, ராமச்சந்திரன் இன்று அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டான்! அவன் குடும்பத்தினர் நாளை நம் வீட்டிற்குப் பெண் பார்க்க வருகிறார்கள். எல்லாம் முடிந்துவிட்டது, நீ எதுவும் பேசாதே! கௌரியும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதித்தாக வேண்டும்" என்று கண்டிப்புடன் கூறினார்.
        கௌரிக்கு அதிர்ச்சி. ஆனால், அப்பா இவ்வளவு உறுதியாகச் சொல்வதைப் பார்த்ததும், செய்வதறியாது திணறிப் போனாள். கௌரியால் ஏதும் எதிர்த்துப் பேச முடியவில்லை.
          மறுநாள், ராமச்சந்திரன் மற்றும் அவனது குடும்பத்தினர் கௌரியை பார்க்க வந்தனர். ராமச்சந்திரன், இதமான நிறத்தில் உடை உடுத்தியிருந்தான். பெரிய அதிகாரியின் தோரணை இருந்தது. அவன் குடும்பத்தார் பேசி முடித்ததும், ராமச்சந்திரன் கௌரியிடம் தனியாகப் பேச சம்மதம் கேட்டான். ரங்கராஜன் அய்யர் முழு மனதுடன் சம்மதித்தார். கௌரியும் ராமச்சந்திரனும் மொட்டை மாடிக்குப் பேசச் சென்றனர்.
         கௌரி தயக்கத்துடன், "நான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்... அமெரிக்காவில் இருந்தாலும் நமது கலாச்சாரத்தை மிகவும் நேசிப்பவர் என்று . உண்மையா? நான் இக்காலத்து நவீன பெண். எனக்கு பாரம்பரியம், பழைய கலாச்சாரம் எதுவும் ஒத்து வராது. என் மனதிற்கு எது சரி எனப் படுகிறதோ அதைத்தான் செய்ய விரும்புவேன். பாரம்பரிய பழக்க வழக்கங்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க மாட்டேன். அதனால் நம் இருவருக்கும் ஒத்து வருமா என தெரியவில்லை. " என்று நேரடியாகக் கேட்டாள்.
          ராமச்சந்திரன் அமைதியாகச் சிரித்துவிட்டு, “ நானும் அப்படிப்பட்டவன் இல்லை. இருந்தாலும் எனது பெற்றோர் அப்படி கூறியிருப்பார்கள் .ஆனால் உங்களைப் பொறுத்தவரை உங்கள் மனதிற்கு வேறு ஒருவரை பிடிக்கும் போது இப்படித்தான் தோன்றும்” என்றான்.
         கௌரி அதிர்ச்சியாகி, " என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டாள்.
          அவன் சிரித்துக்கொண்டே, "உங்களுக்குப் பிடித்த பையன் யார் என்று எனக்குத் தெரியும். உங்களுடன் வேலை பார்க்கும் “ ஜான்” என்பவரைத் தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதும் , அவர் கிறிஸ்தவர் என்பதால் உங்கள் தந்தையிடம் கூறுவதற்கு தயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் தெரியும்.
           கௌரியின் முகம் வெளிறியது. அவள் அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்று நினைத்து நடுங்கினாள். "உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள்.
          ராமச்சந்திரன் ஒரு உண்மையை உடைத்தான். உங்க நிறுவனத்தில் வேலை பார்க்கும் மனோகர் எனது நண்பர். அவன் மூலம் நான் உங்களைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டேன்‌ கௌரி. மேலும் , நானும் உங்களைப் போலவே, ஒரு அமெரிக்கப் பெண்மணியை விரும்புகிறேன் என்றான் .
       கௌரிக்கு தலை சுற்றியது. "என்ன சொல்கிறீர்கள்?"
         " எனக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. ஆனால், என் குடும்பமும் உங்கள் குடும்பத்தைப் போலவே பாரம்பரியத்தைப் பிடித்துத் தொங்குகிறது. அதனால்தான், இந்தப் பொய் சம்பிரசாயத்திற்கு ஒத்துக்கொண்டேன். நான் வந்ததே, உங்களின் சம்மதத்தைப் பெறத்தான். நீங்கள் சம்மதித்தால், நாம் இருவரும் நம் விருப்பம் போல் ,அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டு, நமக்கு பிடித்த வாழ்க்கை வாழலாம். எனக் கூறி , தனது யோசனையையும் தெரிவித்தான். நான் உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டேன். உங்கள் வாழ்க்கையில் எந்த வகையிலும் தலையிட மாட்டேன். நல்ல நண்பனாக இருப்பேன். " என உறுதியுடன் தெரிவித்தான்.
         கௌரிக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்தது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் உணர்ந்தாள். ராமச்சந்திரனின் யோசனை மிகவும் பிடித்திருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! தான் விரும்பிய ஜானையும் இழக்கத் தேவையில்லை, அதேசமயம் தந்தையின் கோபத்திலிருந்தும் தப்பிக்கலாம்!. பெற்று வளர்த்தவர்களின் மனம் கஷ்டப்படக் கூடாது அல்லவா. பிறகு ஒரு குழந்தையை பெற்றுக் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். இது உலகறிந்த உண்மை. கௌரி தன் மனதை இவ்வாறு சமாதானம் செய்து கொண்டாள். 
          இருவரும் கீழே இறங்கி வந்தனர். ரங்கராஜன் அய்யர் ஆவலுடன், "என்ன முடிவெடுத்தீர்கள்?" என்று கேட்டார். கௌரி அமைதியாக, ஆனால் உறுதியுடன் சொன்னாள்:
          "அப்பா, எனக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் இருப்பதால், இப்போதே நிச்சயதார்த்தம் உங்கள் விருப்பம் போல் செய்துவிடலாம். நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இவருடன் அமெரிக்கா போகிறேன். அங்கேயே எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியுள்ளார். அதனால் அங்கேயே பதிவு திருமணம் எளிய முறையில் செய்து கொள்கிறோம். அங்கேயே திருமணம் செய்து கொண்டால் சில சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் யாரும் வரவேண்டியதில்லை! அதனால் நிச்சயதார்த்தத்தை உங்களது விருப்பம் போல் இங்கே நடத்திக் கொள்ளுங்கள்" என்றாள்.
          ரங்கராஜன் அய்யருக்கு மகிழ்ச்சியில் கண்கலங்கிவிட்டது. "அடடா! எத்தனை நல்ல முடிவு! எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவெடுத்திருக்கிறாய்!" என்று மகளை உச்சி முகர்ந்தார். 
        ராமச்சந்திரனும், கௌரியும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டனர். கௌரி இந்தத் திட்டத்திற்கு, ஜானை எப்படி சம்மதிக்க வைப்பது என யோசிக்க தொடங்கி இருந்தாள். ஜானுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க வேண்டும். அவனுக்கு அங்கு வேலை கிடைத்துவிட்டால் ஜானை அங்கு திருமணம் செய்து கொள்ளலாம். இரண்டு மூன்று வருடங்கள் கழித்து உண்மை தெரிந்தால் பெற்றோர்கள் சமாதானம் ஆகி விடுவார்கள் என நம்பினாள். 
         ரங்கராஜன் அய்யர், 'தன் மகளின் நிச்சயதார்த்தத்தை ஒரு குட்டி திருமணம் போல் நடத்தினார். தனது மகளின் திருமணம் அமெரிக்காவில் நடக்கப் போவதாக பெருமையுடன் ஊரெங்கும் சொல்லிக்கொண்டார்.
         ஜானும் இந்தத் திட்டத்திற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்து இருந்ததால், அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்து, பதினைந்து நாட்களில் , இருவரும் விமானம் ஏறினர். ராமச்சந்திரனின் உதவியால் ஜானுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. கௌரியும் ,ராமச்சந்திரனும் தாங்கள் முடிவு செய்தது போல் அமெரிக்காவில் ,அவர்களின் மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்துகொண்டு, … ஆனந்தமாக வாழப் போகிறார்கள். 
         பெற்றோர்களின் விருப்பத்திற்காக , போலியான உறவினர்களுக்காக, மூடத்தனமான பாரம்பரியத்திற்காக , எங்கள் மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளாமல், பிடிக்காத திருமணத்தை செய்து கொண்டு , காலம் முழுவதும் நிம்மதி இழந்து வாழ வேண்டுமா..? என்பதே இந்த இளைய தலைமுறையினரின் நியாயமான கேள்வி.

முற்றும்.







#மௌனத்தின் மரணம்#


                 சிறுகதை  #​மௌனத்தின் மரணம் #



ஆக்கம் : எழுத்தாளர் இரா. கலைச்செல்வி 



       ​இருபது வருடங்களாக அண்ணன் மாணிக்கமும் , தம்பி முத்துவும் பேசிக் கொள்வதே இல்லை.  அவர்களுக்கு இடையில் ஒரு பெரிய‌ சுவர்  இல்லாத மௌனம் நிலவிக் கொண்டிருந்தது. அன்று ஒரு சிறு பண விஷயத்தில் வந்த தவறான புரிதல், இருவர் மனங்களிலும் ஈகோவாக வளர்ந்து, பெரும் சுவராக நின்றிருந்தது. ஏதேனும் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டால் கூட, அவர்கள்  நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்து வந்தனர்.

       ​அன்று முத்துவின் பேத்திக்கு முதல் பிறந்தநாள். விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்கள்.  தன் அண்ணன் மாணிக்கம் வரமாட்டார் என்று தெரிந்தும், முறைக்காக  வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வைத்து விட்டு வந்தார். விழா மேடையில் முத்து தன் பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலில் தன் அண்ணன் மாணிக்கம் வருவது தெரிந்தது.  

       கீழே இறங்கி தன் அண்ணனை வரவேற்க சென்ற முத்து,  தன் அண்ணன் கூட்ட நெரிசலில் தடுமாறுவதை கண்டு , முத்து பதறி ஓடி  போய் , அவரைத் தாங்கினான்.

       ​மாணிக்கம் நிமிர்ந்து பார்த்தபோது தன் தம்பி முத்து.  வயது முதிர்வால் கண்கள் சோர்வடைந்திருந்தன. தம்பியின் கைகள் அண்ணனை இறுகப் பற்றியிருந்தன. இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

        ​"ஏன்டா முத்து... இன்னமும் என் மேலே கோவமா தான் இருக்கியா ?" என்ற மாணிக்கத்தின் குரல் தழுதழுத்தது.

       " இல்லண்ணே. நான் உங்ககிட்ட பேசத்தான் ஆசைப்படுகிறேன்.  ஆனா நீங்க... என் முகத்தைக் கூட பார்ப்பதில்லை" என்று முத்துவும்  தழுதழுத்த குரலில் இழுத்தான்.

        ​அப்போதுதான் இருவருக்கும் புரிந்தது — இருவருமே ஒருவருக்கொருவர் பேசுவதற்கு  மனதிற்குள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை.  ஆனால் "யார் முதலில் பேசுவது?" என்கிற ஒற்றை ஈகோதான் இத்தனை ஆண்டுகளாக அவர்களின் இதயத்தை‌ தின்று தீர்த்திருக்கிறது. யார் முதலில் பூனைக்கு மணி கட்டுவது என்று ரீதியில் ,இருவரும் மனதிற்குள்ளே வெதும்பி  கொண்டிருந்தார்கள்.

       ​மாணிக்கம் தன் மடியிலிருந்து ஒரு பழைய, நைந்துபோன டைரியை எடுத்தார். அதில் முத்துவின் சிறுவயது புகைப்படமும், அவன்  விளையாட்டில் சாதித்த செய்தித்தாள் வெட்டுகளும் இருந்தன.  அதைக் காட்டி "இது நினைவிருக்கா உனக்கு " என்று கேட்ட அந்த நொடி , முத்து நிலை குலைந்து போனான். "உன்மேல எனக்கு எப்பவும் கோவம் இருந்ததில்லையப்பா.‌ ஆனால் ஏதோ ஒரு இது. என்னன்னு சொல்ல தெரியலப்பா.  நீ சின்னவன் தானே இறங்கி வந்து பேச கூடாதா என்று நினைப்போ என்னவோ.! சின்ன வயசுல நாம எப்படி பேசி சிரிச்சு ஒன்னா இருந்தோம்."  என்றார்.

         முத்துவின் கண்கள் கலங்கின.  வயசான மட்டும் ஏன் இப்படி சுயகௌரவம் வந்து  மனதை ஆட்டி படைக்குதுன்னு தெரியல. இருபது வருட மௌனச் சுவர் ஒரு நொடிப் பார்வையில், ஒற்றைக் கட்டியணைப்பில் நொறுங்கிப் போனது. இருபது வருட   மௌனம் அந்த ஒரு நொடியில்  மரணித்துப் போனது. 

        உறவுகளின் புரிதலுக்குத் தேவை, நீண்ட வாதங்கள் அல்ல, "நான் இருக்கிறேன்" என்கின்ற ஒற்றை அன்பு கலந்த விட்டுக்கொடுத்தல் மட்டுமே!.




                ------




வெள்ளி, 22 மே, 2026

கௌரவம்




#கௌரவம் #    சிறுகதை  



படைப்பு : எழுத்தாளர் இரா. கலைச்செல்வி ,



                       *****

     

       சங்கரிக்கு கோவம் கோவமாய் வந்தது.  அந்த மாலை பொழுதிலும் , கோடைகால உச்சி வெயிலின்  சூரியக் கதிர்களால், பூமி தாய் கொதிப்பது போல சங்கரியின்   உள்ளம் கொதித்தது. மறுபடியும் கேட்டால் தாம் தூம்..ன்னு  கத்துவார். பக்கத்து வீட்டுக்கெல்லாம் கேட்கும். குடும்ப கௌரவம் போயே  போச்சு. அவர் கத்த ஆரம்பிச்சா பத்து வீட்டுக்கு கேட்கும். என்ன செய்றது  மேலும் பேசாமல் மௌனமானாள் சங்கரி.  அவள் தன் கணவரிடம் கேட்டது இதுதான்.!


         “ ஏங்க …ஒரு விசயம்.”


           “என்ன..? “


           “எங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து,   மகளிர் தினம் அன்று,  ஒரு பிக்னிக் மாதிரி, வேன் ஏற்பாடு பண்ணிட்டு, குற்றாலத்திற்கு , போயிட்டு வரலாம்ன்னு   இருக்கோம். இங்கே இருந்து பக்கம் தானே.  அதான் உங்ககிட்ட , ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன்னு சொன்னேன்.  நானும் போயிட்டு வரவா” என்றாள் சங்கரி.


 ‌       “என்ன… மகளிர் தினத்துக்கு பிக்னிக் போறீங்களா? என்ன காலேஜ் ஞாபகமா.? சின்ன பொண்ணுன்னு நினைப்பா உனக்கு.? நாற்பது வயசாகுது. உனக்கு பிக்னிக் கேக்குதா..? புள்ளைங்களை எல்லாம் விட்டுட்டு   நீ பிக்னிக்  போறியா..? ஊர் சுத்துற வேலையை விட்டுட்டு புள்ளைங்கள பாக்குற வேலைய பாரு.”


       “ஒரு நாள் தானே. காலை பத்து மணிக்கு போயிட்டு மாலை ஆறு  மணிக்குள்ள  வீடு திரும்பிருவோம். என்ன  ரொம்ப சின்ன பிள்ளைங்களா.? பத்து ,பதினைந்து  வயசு பிள்ளைங்க.  பிரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க..ஒரு நாள் பிரண்ட்ஸ் கூட போயிட்டு வரேன். காலையில  சமையல் எல்லாம் செய்து முடிச்சுட்டு, எல்லாம் டேபிள்ல எடுத்து வச்சுட்டு போறேன். மத்தியானம்  ஒருவேளை மட்டும் தானே. குழந்தைங்க  சாப்பிட்டுப்பாங்க. நான் சொல்லிட்டு போறேன்.”


      “இந்தாடி… ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு…?”


        ருக்மணி போன் செய்தாள். “என்ன சங்கரி பிக்னிக் வர்ற தானே.உன்  வீட்டுக்காரர் ஓகே சொல்லிட்டாரா?  ரூபாய் 300 வந்து குடுத்துட்டு போ. நல்ல ஏசி வேன்  முன்னாடியே புக் பண்ணனும்.”


         “இல்ல ருக்மணி நான் வரல. எனக்கு வேற வேலை இருக்கு. அவரோட தங்கச்சி ஊர்ல இருந்து வராங்க. அதனால வீட்டில நிறைய வேலை இருக்கு.  வீடு எல்லாம் கிளீன் பண்ணனும் .அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்.”


         “இத பாரு சங்கரி ..அடுத்த வருஷம் போறோமோ என்னமோ. இப்ப ஏதோ பிளான் பண்றோம். போயிட்டு வருவோம் .ஒரு நாள் ஜாலியா. இந்த சந்தோஷம் அப்புறம் உனக்கு திரும்ப கிடைக்காது.”


         இவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வீட்டுக்காரர் அனுமதி தரவில்லை என எப்படி  கூறுவது. என்ன நினைத்துக் கொள்வார்கள் அவரைப்பற்றி. “இல்ல ருக்மணி வரல. அடுத்த வருஷம் பாத்துக்கலாம்.” 


       “வீட்டுக்குள்ளேயே இப்படி நாள் முழுதும் சமையல்  கட்டே  கதின்னு கிடக்குற நீ. பாத்திரம் கழுவுறதும் ,  வீடு கிளீன் பண்றதும்,  இது தான் உனக்கு தினம் வேலை. மகளிர் தினம் அன்றைக்கையாவது  ஒரு நாள் சந்தோஷமா வரக்கூடாதா..? சரி உன் இஷ்டம்.”போனை வைத்தாள் ருக்மணி. 


        சங்கரிக்கு மனசுக்குள் மறுபடியும் ஒரு நெருடல். மறுபடியும் கேட்டு பார்க்கலாமா..?  இந்த சாதாரண விஷயத்திற்காக இந்த மனுஷனுடன் சண்டை போடுவதா? என்ன வாழ்க்கை இது? வருஷம் முழுவதும் காபி போடுவதும் ,சமையல் பண்ணுவதும், பாத்திரம் கழுவுவதும், வீடு துடைப்பதும்  இதே வேலை. ஒரு நாள் தோழிகளுடன் வெளியே போய் வருவதற்கு ஆசையாய் கேட்டா இப்படி கத்துகிறாரே.  பொண்டாட்டி  என்றால் கிள்ளுக்கீரை  என்ற நினைப்பு அவருக்கு.  அவர் கிழித்த கோட்டை  மனைவி தாண்டக்கூடாது என்ற  ஈகோ. சில  விஷயத்திற்கு சொன்னால் சரி என  ஏற்றுக் கொள்ளலாம் .இதுக்கு கூடவா..? மனதிற்குள் வெதும்பி போனாள் சங்கரி.


          வேறு வழி இல்லாத நிலையில், மறுபடியும் கேட்டாள். மறுபடியும் கத்தினார். முறைத்தார்.  விட்டால்  வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும்  என்பதால்,  அமைதியானாள்.. இது முதல் தடவை அல்ல. எத்தனையோ தடவை எதற்கு அனுமதி கேட்டாலும் ,எதையாவது சொல்லி தட்டிக் கழிப்பார். ஒண்ணுமே சொல்லாமல் வேலையை பாரு என்பார் .திருப்பி கேட்டால் கத்துவார். பக்கத்து வீட்டுக்கு கேட்கும் என்பதால், குடும்ப கௌரவம்  பார்த்து அமைதியாவாள். இப்படியே பதினெட்டு  வருட தாம்பத்திய வாழ்க்கை முடிந்து விட்டது. 


         எதற்காக  திருமணம் செய்தோம் ..? குழந்தையை கவனித்துக் கொள்வது நம் கடமை தான் .வருடம் பூராம் தானே கவனித்துக் கொள்கிறோம். ஒரு நாள் என் மனசுக்கு சந்தோஷமாக, என் கோவில்  தோழிகளுடன் ,போய் வரக்கூடாதா ..?  சாகும்வரை நமக்கு இது போன்ற வாழ்க்கை தானா..? . எப்போது இவர் மனது மாறி என்னை சந்தோஷமாக போய் வா எனச் சொல்லப் போகிறார்.  கேட்டு கேட்டு வெறுத்து விட்டது.  எனக்கு எப்போது தான் சுதந்திரம் கிடைக்கும்..? அறுபது வயசுல.. இல்ல  எழுபது வயசுல..? சமீபகாலமாக வயசானவங்க தான் விவாகரத்து செய்றாங்களாம். நானும்  கூட விவாகரத்து செய்து விடலாமா..? அதுதான் தீர்வா…? மனதிற்குள்  இந்த எண்ணம் கூட வந்தது சங்கரிக்கு.


          அம்மாடி …சொந்தக்காரர்கள் என்ன  சொல்வார்கள்.?. பக்கத்து வீட்டில் என்ன நினைப்பார்கள்.?. குழந்தைகளின் கதி என்ன..?  பெரிய பிரச்சனை வரும். குழந்தைகள் அம்மாவுடன் இருப்பதா..? அப்பாவுடன் இருப்பதா..? என பிரச்சனை வரும். அதையும் மீறி குழந்தைகளின் படிப்பு செலவிற்கு  பணம்..?? விவாகரத்து வாங்க கோர்ட் படியேற வேண்டும் .கோர்ட்டில் ஒரு பத்து வருடம் இழுத்தடிப்பார்கள். வக்கீலுக்கு  ஃபீஸ் கொடுத்து மாளாது.  என்ன செய்ய…? யாரிடம் சொல்லி அழுவது. நடுத்தர குடும்பத்துப் பெண்களின் நிலைமை  பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறதோ..!!  யோசித்து யோசித்து சங்கரிக்கு தலைவலி வந்தது மட்டும்தான் மிச்சம்.



         இரண்டு மாதங்கள் கழித்து “ஏங்க இந்த வருஷம்  ஸ்கூல் லீவுக்கு குழந்தைகளை கூட்டிட்டு, எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்.”


      “என்ன… உங்க அம்மா வீட்டுக்கா. அப்புறம் யார் எனக்கு சமைச்சு கொடுக்கிறது .நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன் என்பதை பத்தி உனக்கு கவலையே இல்லையா?. அந்த நினைப்பு உனக்கு எங்கே இருக்கும் ..? இருந்தா இப்படி கேப்பியா. .?”


        அவள் தோழிகள் எல்லாம் விடுமுறைக்கு குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்கள். ஆனால் நான் மட்டும்  இந்தப் பதினெட்டு வருடத்தில் ஒரு நாளும் சென்ற தில்லை. குழந்தைகளுக்கும்  ஒரு மாற்றம் வேண்டாமா..? ‌ தாத்தா பாட்டியை பார்க்க வேண்டாமா..?  குழந்தைகளைப் பார்ப்பதில் அவர்களுக்கும் சந்தோஷம். குழந்தைகளுக்கும் சந்தோசம். ஏன் எனக்கும் தான். அவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக எங்களின் சந்தோஷத்தை இழக்க வேண்டுமா..?


        “ ஏன் நீங்களும் வாங்களேன்.”


         “அங்கே எல்லாம் என்னால வர முடியாது. உங்க அப்பா எனக்கு லீவு வாங்கி தருவானா..?” வீட்ல சும்மாவே இருக்க இல்ல .அதான் அங்க போகலாம் இங்கே போகலாம்ன்னு. என் டிரஸ் எல்லாத்தையும் எடுத்து அயன் பண்ணி வை.  அம்மா வீட்டுக்கு போறாளாம் . கால வெட்டிடுவேன்.


     ‌‌  ஏன்  எனக்கு மட்டும் இப்படி..? என் தலை எழுத்து. இந்த சாதாரண விஷயத்திற்கு கூட இவரிடம் கெஞ்ச வேண்டுமா..?  எத்தனை தடவை சண்டை போடுவது..? பேசத் தெரியாது என்று இல்லை. அமைதியாக பேசினாலும் கேட்பதில்லை. அன்பாக பேசினாலும் கேட்பதில்லை.  அவள் பேசுவதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற நினைப்பு.  பொண்டாட்டினா அப்படித்தான் இருக்கணும் என்ற  நெனப்பு. இந்த ஜெனரேஷன் பொண்ணுங்க எப்படி இருக்காங்கன்னு அவருக்கு தெரியும். இருந்தாலும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை. என்ன செய்வது எனத்  தெரியாமல் குடும்பத்தின், பிள்ளைகளின் நலன் கருதி ,அவள் தன்னில் ஒடுங்கி ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருந்தாள்.


         காலை ஐந்து மணிக்கு எழுந்தவளுக்கு இரவு பத்து மணி வரை வேலை ஓயாது. மதியம் ஒரு மணி நேரம் தான் அவளுக்கு ஓய்வு கிடைக்கும். அன்று அப்படித்தான் காலை 5 மணிக்கு எழுந்து கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் சங்கரி, அன்று கிச்சனில் இல்லை.. 


       “ஏய் சங்கரி எங்கே இருக்க..? மணி  ஆறு ஆச்சு. கிச்சனில்  ஆளையே காணோம் .எங்கே போயிட்டா…?”


        ஒரு பதிலும் இல்லை. “ஏய் சங்கரி.. சங்கரி..” என கூவிக்கொண்டே அவளின் அறைக்கு சென்றான். சென்றவன் அவள் அறையில் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து, “எருமை மாடு இன்னும் தூங்கிட்டு இருக்கியா, மணி  ஆறு ஆச்சு எழுந்திரு..”


         ஒரு சத்தமும் இல்லை. அசைவும் இல்லை. பக்கத்தில் போய் பார்த்தால் , மூடிய கண் திறக்கவேவில்லை. அசைத்துப் பார்த்தான்.. அவள் படுத்திருந்த விதம் வித்தியாசமாய்ப்பட்டது .பிடித்து உலுக்கினான். கண் திறக்கவே இல்லை .அவனை  பயம் பற்றிக் கொண்டது .கண்களை திறந்து பார்த்தான். உடனே மூடிக்கொண்டது .மூக்கின் மேல் கை வைத்தான். ஒன்றுமே இல்லை. 


        ஏதோ விபரீதம் நடந்து விட்டது என தனக்குள் உணர்ந்தவன், மறுபடியும் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தான். ஒரு அசைவும் இல்லை .ஆஹா போய்விட்டாளே. விக்கித்து நின்றான்.  கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர். என்ன செய்வது என்றே புரியவில்லை. 


          பக்கத்தில் இருந்த ஒரு டாக்டருக்கு போன் செய்தான். விஷயத்தை சொன்னதால் டாக்டர் வந்தார். பரிசோதித்து விட்டு “எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர். நள்ளிரவே அவர் உயிர் போய் இருக்க வேண்டும். ஹார்ட் அட்டாக்கா இருக்கலாம்.. மனதை தேற்றிக் கொள்ளுங்கள் பாஸ்கர்..” எனக் கூறிவிட்டு சென்றார். 


          குழந்தைகள் எழுந்து விட்டனர். கிச்சனுக்கு சென்ற கடைக்குட்டி பையன்,  அம்மாவை காணவில்லை என்றதும், அவள் அறைக்கு  வந்தான். அப்பா பக்கத்தில் நின்று கண்ணீர் சிந்து கொண்டிருந்தார். அவனுக்கு  ஒன்றும் புரியவில்லை 


          “ஏப்பா அழறீங்க..? அம்மா என்ன… இன்னும் தூங்கிட்டு இருக்காங்க.?”


          ஐயோ மகனே செந்தில், அம்மா நம்மளை விட்டுப் போய்விட்டாளடா.!  கதறினான்.


        விஷயம் அறிந்து பக்கத்து வீட்டிலிருந்து பெண்மணிகள் வந்து துக்கத்துடன் விசாரித்தனர். “என்ன ஆச்சு எப்படி …? நேற்று கோயில் வந்த போது  கூட , நல்லா தான் பேசிகிட்டு இருந்தாங்க .எப்படி ஆச்சு இப்படி ..?” என புலம்பி தீர்த்தார்கள். 


         தோழிகள் அனைவரும், மூக்கின் மேல் விரலை வைத்து ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். “எப்ப பாத்தாலும் குடும்பம் குடும்பம்னு சொல்லி அதுக்காகவே உழைச்சுகிட்டு இருந்தா ..இப்ப இப்படி .. எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போயிட்டாளே.” 


          அவள் தோழி  மங்கைக்கு மட்டுமே அவளின் சோகம் புரியும். சங்கரி தன்  மன வருத்தங்களை மங்கையிடம் மட்டுமே அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.


          சங்கரி இப்படி போய் விட்டாயே..,!! குடும்பத்துக்காகவே  வாழ்ந்து  எந்த சந்தோஷமும் இல்லாமல் இப்படி வாழ்க்கையை தொலைத்து விட்டாயே…! எனக் குமுறிய மங்கை   வெளியே  ஏதும் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல், தனக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தாள். 


         அன்று மாலை எல்லாம் முடிந்து விட்டது. சங்கரி போய்விட்டாள்.   குடும்ப கௌரவம் என பார்த்து பார்த்து,  மனதுக்குள்ளையே ,வெந்து  வெந்து, அவள் இதயம் நின்று விட்டது.. உயிருள்ள சடலமாய் வாழ்ந்து கொண்டிருந்த சங்கரி, இப்போது உயிரற்ற சடலமாய் போய்விட்டாள்.


         சங்கரியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல. அவளது மன உளைச்சலின் உச்சம்.  வடிகால் இல்லாத மன வேதனை . விடுதலைக்கு ஏங்கிய  மனசு.  அந்த துக்கம் அவளது இதயத்தை பிளந்தது. ஆகவே இது பாஸ்கர் செய்த கொலை என்று நினைத்தபடி,  மங்கை தன்  வீட்டிற்குச் சென்றாள்.



         இருபது நாட்கள் கழித்து , ஒருநாள்  மங்கை  சங்கரியின் குழந்தைகளை பார்த்து வரலாம் என வந்திருந்தாள். “என்ன சார் எப்படி இருக்கீங்க.. ? சங்கரி இல்லாம எப்படி  வீட்டை மேனேஜ் பண்றீங்க.? அவளே எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு இருந்தா.  அவளோட உழைப்பை  யாராலும்  ஈடுகட்டமுடியாது .இப்போ எப்படி சமாளிக்கிறீங்க சார்.”


         “ஒரு சமையக்கார அம்மா வந்து  சமைச்சிறாங்க.  மற்ற வேலைக்கு ஒரு  வேலைக்கார பொண்ணு வரும்.. வீடு எல்லாம் கிளீன் பண்ணி, வேலைய முடிச்சுட்டு போறாங்க . பிள்ளைங்க அவங்க வேலையை அவங்களே  பார்த்துக்கிறாங்க. நானும்  கொஞ்சம் கவனிச்சிக்கிறேன் ஓடுது.‌” சாதாரணமாச் சொன்னார் சங்கரியின் கணவர்.. 


         மங்கை தன் மனதிற்குள் சமையல்காரம்மா சமைப்பதற்கும், மனைவி சமைப்பதற்கும் , உள்ள வித்தியாசம் இவருக்கு தெரியுமா..?

திரும்பி… பக்கத்தில் நின்று கொண்டிருந்த சங்கரியின் 16 வயது மகள் ரம்யாவை கவனித்தாள்.  அவள் கண்கள் கலங்கி, கடலாகி எப்போது பொங்கும் என்ற நிலையில் இருந்தது.   மங்கை ரம்யாவை அணைத்துக் கொண்டாள்.‌ கண்ணீர் மலமலவெனக் கொட்டியது… அந்தக் கண்ணீரின் உள் அர்த்தம் மங்கையால் முழுவதும் உணர முடிந்தது.  


        “அடிக்கடி வாங்க ஆன்ட்டி” என ரம்யா கேட்டுக்கொண்டாள்.


       மங்கையை வழி அனுப்ப வாசலுக்கு வந்த  ரம்யா, மங்கையை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது ஆன்ட்டி.  அம்மா இறந்ததிலிருந்து நான் ஒரு நாள் கூட நல்லா தூங்கல. ஏதோ திடீர்னு அனாதையாகி விட்டது போல ஒரு உணர்வு.   எனக்கு யாருமே இல்ல அப்படிங்கிற ஒரு உணர்வு தான் நாள் முழுவதும் என் மனசுக்குள்ள இருக்கு.     


        ரம்யாவை எப்படி ஆறுதல் படுத்துவது என தெரியாமல் விக்கித்து நின்றாள் மங்கை.


          இந்த பெண்ணின் மனநிலை அவள் அப்பாவுக்கு புரியுமா..? அம்மாவை இழந்த பதினாறு வயது  பெண் குழந்தையின் மனநிலையை  மங்கையால் புரிந்து கொள்ள முடிந்தது.  


         அம்மா இத்தனை வருஷத்துல எங்களை விட்டுட்டு ஒரு நாள் கூட எங்கேயும் போனதில்ல ஆன்ட்டி .அப்பா விடவும் மாட்டாங்க . எங்க அம்மா கடைசியா.. ஆசையா  ஒரு நாள் உங்களோட,  எல்லாரும் சேர்ந்து பிக்னிக் போறேன்னு கேட்டாங்க .அதுக்கு கூட அப்பா விடல. இப்போ ஒரேயடியா எங்களை விட்டு போயிட்டாங்களே ஆன்ட்டி. 


         இந்த வேலைக்காரம்மா மொத்த மொத்தையா தோசை ஊத்துறாங்க ஆன்ட்டி .தோசையை  ஊத்தி அடுக்கி வைத்து விடுகிறார்கள்.  ஆறிப்போய்விடுகிறது . எங்க அம்மா கையால , சுட சுட மெல்லிசா தோசை சுட்டு  சாப்பிடணும்னு ஆசையா இருக்கு ஆன்ட்டி. எங்க அம்மா மடியில தலை வச்சு படுக்கணும் என  தோணுது. ரம்யா கேவி கேவி அழுவதை பார்க்க முடியவில்லை மங்கையால். எப்படி இந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்வது .? யாரால் ஆறுதல் சொல்ல முடியும்..?


       தினம் தினம் இப்படி செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல சங்கரிகளின் இதயம்,   இப்படி ஒருநாள்  , பாரம்  தாங்காமல் நின்று விடுகிறது. பாஸ்கரன்கள்  தாங்கள் கொலைகாரர்கள் என்பது கூட தெரியாமல்,  உலகில்  வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நினைவோடு  வீடு வந்து சேர்ந்தாள் மங்கை.


          மறுநாள் “அப்பா… அப்பா.. ரம்யா சாப்பிடவே இல்லப்பா .சாப்பிடாம ஸ்கூலுக்கு கிளம்புற…” என்றான் ரம்யாவின் தம்பி. 


           “ஏய் என்ன ரம்யா.. ஏன் சாப்பிடல.?  போய் உட்கார்ந்து சாப்பிடு.” 


           “எனக்கு சாப்பிட பிடிக்கலப்பா. அந்த தோசையை  யாரு சாப்பிடுவா? வறட்டி மாதிரி இருக்கு.” 


           “இருக்கிறதை சாப்பிட்டு தான் ஆகணும். வேற வழி இல்ல. பொம்பள புள்ள இப்படி வாய்ருசி எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க கூடாது. உங்க அம்மா எப்படி இருந்தா  தெரியும்ல.” 


          அதைக் கேட்டவுடன் ரம்யாவிற்கு கோபம் கோபமாய் வந்தது.


           “எங்க அம்மாவ பத்தி ஏதாவது பேசினீங்க எனக்கு கெட்ட கோபம் வரும் . அம்மாவை மாதிரி என்னையும்  இருக்க சொல்றீங்களா..? அம்மா இறந்ததே உங்களால்தான். எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கல.  ஏன் அம்மா மாதிரி நீங்க எங்களுக்கு… தோசை சுட்டு கொடுங்களேன் .நான் சாப்பிட்டு போறேன்.”


           முறைத்தான் பாஸ்கர்.


          “என்னப்பா முறைக்கிறீங்க. என் ஃப்ரெண்டோட அம்மாவும்  வேலைக்கு தான் போறாங்க . அவங்க தான் வீட்ல  சமைச்சுட்டு எல்லாருக்கும் எல்லாம் பண்ணிட்டு ஆபீசுக்கு போறாங்க. இப்பதான் அம்மா போய் சேர்ந்துட்டாங்களே. நீங்க தானே  இருக்கீங்க. அப்ப அம்மாவுக்கு பதில் நீங்க எங்களுக்கு சமைச்சு கொடுக்க கூடாதா? மெல்லிசா தோசை சுட்டு கொடுக்க கூடாதா..?  ஏன் உங்களுக்கு தோசை சுட தெரியாதா ..?”


        மகளின் கேள்விக்கு பதில் சொல்ல  முடியாமல் பாஸ்கரன் மௌனமாய் இருந்தான்.


         “அம்மா ஒருநாள் மொத்தையா தோசை சுட்டதற்கு அந்த கத்து கத்துனீங்க.  சமையக்காரி செய்த வரட்டு  தோசையை இப்போ சாப்பிட்டு போறீங்க. ஒரு நாளாவது அம்மா சமையலை நல்லா இருக்குன்னு பாராட்டி இருப்பீங்களா.? குறை மட்டும் நல்லா சொல்வீங்க. ஒரு நாளும் அம்மா ஓய்வா உட்கார்ந்து பார்த்ததில்லை. ஆனா எப்ப பாத்தாலும் சும்மா தானே இருக்க.. சும்மா தானே இருக்க … வேலைய பாரு. இதே பேச்சு.  எத்தனை தடவை அவர்கள் யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?”


         “அம்மா இருக்கும்வரை  ஒரு நாள் கூட ,அவர்களை அவங்க விருப்பப்படி  வெளியே எங்கேயும் போக விடல . ஏதாவது கேட்டா வேலைய பாரு.. வேலைய பாரு.. அப்படின்னு ஒரு டயலாக். இப்போ ஒரேயடியா வேலைய பாக்க போய்  சேர்ந்துட்டாங்க. அம்மா இல்லாம நாங்க தான் இப்ப கஷ்டப்படுறோம்.   அம்மா இல்லாத வீடு வீடாவே இல்லை. ஒரே வெறுப்பா இருக்கு.” 


         இப்ப சமையல்காரிக்கு ஒரு சம்பளம்.  மேல் வேலை பார்க்கும்  வேலைக்காரிக்கு ஒரு சம்பளம் . டிரஸ் அயர்ன் பண்ண தனியா கொடுக்குறீங்க.  எவ்வளவு காசு செலவு செய்கிறீர்கள். இவ்வளவு செலவு செய்தும் வீடு வீடா இல்ல.   அம்மா இருக்கும் போது வீட்டுக்குள்ள நுழையும் போதே அப்படி ஒரு சந்தோஷமா இருக்கும் . அவ்வளவு நீட்டா வீட்டை வச்சிருப்பாங்க . எல்லாமே இருக்க வேண்டிய இடத்துல கரெக்ட்டா இருக்கும்.  இப்ப வீடே  அலங்கோலமாக கிடக்கு.     துவைத்த  துணிய மடிக்க கூட ஆள் இல்லை.  இப்ப அந்த வேலை எல்லாம்  நான் பார்த்து கிட்டு இருக்கேன். இனிமே உங்க துணியை நீங்க தான் மடிச்சு வச்சுக்கணும்.  தம்பி  டிரஸ்ஸை  அவனே மடித்துக் கொள்ளட்டும்.  வீட்டுக்கு வரும்போது என் ஸ்கூல்  விஷயங்கள சொல்றதுக்கு கூட ஒரு ஆள் இல்ல. என்னை ஹாஸ்டல்ல போய் சேர்த்துருங்கப்பா.”


           “என்ன ரம்யா  ரொம்ப ஓவரா பேசுற .எங்கே இருந்து வந்தது இந்த வாய்”


           “அப்படி தாம்ப்பா பேசுவேன். அப்படிதான் பேசுவேன். அம்மா மாதிரி இருக்க மாட்டேன்”

   

              “அன்றைக்கு  என்னவோ பாட்டி கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க. ரம்யாவுக்கு கல்யாணம்  செய்து கொடுத்த பிறகு இவ  போயிருந்தா கூட நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்னு .எனக்கு கல்யாணம் அப்படிங்கற விஷயத்தை ….சுத்தமா மறந்துடுங்க.  நான்  எவனையுமே கல்யாணமே பண்ணிக்க போறதில்லை. உங்களை மாதிரி ஆம்பிளைகிட்ட, அம்மா மாட்டிகிட்டு முழிச்ச மாதிரி,  நான் யார்கிட்டயும் மாட்டிகிட்டு வாழ தயாரா இல்லை.   இங்க அம்மாவை மாதிரி, என்னைய  எதற்கும்  அடிபணிய வைக்கலாம்ன்னு  நினைக்காதீங்க.   அப்படி நீங்க ஏதாவது செஞ்சீங்க. நானும் அம்மா கூட போயிருவேன். அம்மா ஹார்ட் அட்டாக் - ல இறந்திருந்தாங்கன்னா அதுக்கு நீங்க தான் காரணம்.  அம்மா மாதிரி குடும்ப கௌரவம்  அது இது என பார்த்துக்கொண்டு ,அமைதியாக இருக்க மாட்டேன்.   நினைவு இருக்கட்டும்” என்று கூறிவிட்டு,  பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள் ரம்யா.



         மகள் பேசியதை கேட்டு அதிர்ந்து போனான் பாஸ்கரன். மகள் ரம்யா பேசிய பேச்சு அவர்  காதுகளில்  ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது . என்னால் தான் சங்கரி இறந்தாளா.! அவள் இறப்புக்கு நான் தான் காரணமா.? நான் இவ்வளவு தவறுகளா செய்து இருக்கிறேன்.? இதுவரை புரியாதது  மகள் சொல்லி புரிகிறது.  ஆம் அவளை நான் மனுஷியாய்   நடத்தியதில்லை .  ஏன்  எனக்கு  இதுவரை  புரியவில்லை.   ஆண் என்ற ஆணவம் அதை மறைத்து விட்டது.   பாவம் சங்கரி.  எனது கத்தலுக்கு பயந்து, குடும்ப கௌரவம்  கருதி, குழந்தைகளின் நலன் கருதி தனக்குள்ளேயே செத்துக் கொண்டிருந்தவள், இப்போது ஒரேடியாய் போய் விட்டிருக்கிறாள். இறைவா என்னை மன்னித்துவிடு. சங்கரி என்னை மன்னித்துவிடு என மானசீகமாய் மன்னிப்பு கேட்டான்.


           அடுத்த நாள் ரம்யா பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். கிச்சனில் சமையல்கார அம்மா இல்லை. அப்பா கரண்டியோடு நின்று கொண்டிருந்தார்.  ரம்யா சாப்பிட வா என அழைத்தார். டைனிங் டேபிளில் சூடாய் மெல்லிதாய் ,தோசை நெய் விட்டு, மொருமொருவென  இருந்தது.


         “என்னப்பா சமையல்கார அம்மா வரலையா.?”


        “  இனி வர மாட்டாங்க.” 


            ரம்யா ஆச்சரியத்தோடு அப்பாவை நோக்கினாள். அப்பா புன்முறுவலோடு ரம்யாவின் தலையினை கோதி , அப்பா சுட்ட தோசை எப்படிம்மா  இருக்கு.?  


         நல்லா இருக்குப்பா.! இன்னொரு தோசை வேணும்ப்பா. ஆனா அம்மா சுட்ட தோசைக்கு ஈடாகாதுப்பா. ரம்யா அப்பாவின் தோள்களின் சாய்ந்து கொண்டாள்.


            “சாரிம்மா ரம்யா.”


             “என்னப்பா… நீங்க போயி…!” ரம்யாவின் கண்கள் கலங்கின.


முற்றும். 
















புதன், 25 பிப்ரவரி, 2026

ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்

#ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்#


​            மாலை  அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்..

​         மாமி,  மாதுவைப் பார்த்து, “ ஏண்டி இன்னிக்கு காலேஜ் லீவ்-னா, கொஞ்சமாவது ஆத்திலே எனக்கு ஒத்தாசை பண்ணப் படாதா?”ன்னு  கத்தினாள். அச்சமயம் பார்த்து, சுந்தரம் மாமா  கூப்பிட்டார், “ஏண்டிமா! லலிதா இங்க வா, ஆத்துக்கு யாரோ வந்திருக்கா போல இருக்கு!”

​          மாமி,  எட்டி பார்த்தாள்.  வாசல்லே  ஒரு ஆசாமி...கூட ஒரு  மாமி.

​          எழுந்து வந்த சுந்தரம் மாமா, “ இவா தான் நம்ம  கணேஷ் அய்யர் சொன்னவா.”

​          மாமிக்கு ‘பகீர்’ன்னு ஆயிடுத்து. “அடடா! ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லக் கூடாதா?  ஆத்திலே பால்கூட  இல்லையே! ” 

​​          “வாங்கோ, வாங்கோ! உள்ளே வாங்கோ!”

           “இல்ல. நாங்க  வந்து​.....” கூறுவதற்குள்.   “எல்லாம் தெரியும். வாங்கோ.  மாது ஆத்துல தான் இருக்கா.”

​​           மாமி, மெதுவா ஹாலுக்கு வந்து, “மாது, நன்னாவே  பாடுவா.  பையன் வரலையோ . மாது நீ அந்தச் பாட்டை பாடிக்காட்டிண்டே இரு, நான் வந்துடுறேன்!”ன்னு சொல்லி, பக்கத்து வீட்டிற்கு பால் வாங்க சென்றாள்.  

           வந்தவாளுக்கு மாமியோட பாவனையும், மாதுவோட பாட்டும் ஒண்ணும் புரியலை. “

          அய்யர்வாள்  நாங்க இன்னும் நிறைய வீட்டுக்கு போகணும் எனக்கூறி ,நன்கொடை வசூல்  புத்தகத்தை  நீட்டியவுடன் , சுந்தரம்   மாமா திடுக்கிட்டார்.

          “நீங்க… மாதுவை பெண் பார்க்க வரலையோ.”

முற்றும்.

திங்கள், 9 பிப்ரவரி, 2026

#சுதந்திர காற்று#

#சுதந்திர  காற்று # (கலையின் ஹைக்கூ கவிதைகள்)


படைப்பு கவிஞர் இரா .கலைச்செல்வி

#எனது உயிர் மூச்சாய்....
 சுதந்திர காற்று .
சுகமாய் சுவாசிக்கிறேன்.


#சிறகு  முளைத்த பறவை .
எல்லைகளற்ற  வானம்.
விடுதலை காற்றில் பறப்பதை 
 யாராலும் தடுக்க முடியாது.


#மூச்சைவிட்ட தியாகிகளின் 
சுவாசம் நின்று போனது ..! எதனால்.?
விடுதலை காற்று கிடைக்காததால் .


#மூவர்ணம் தாங்கி ,
தியாகம், அமைதி, செழிப்பு  ஓங்கி ,
அசோகச் சக்கரத்தில் சுழன்று ,
விடுதலைக் காற்று 
சுதந்திர தேவியாய் பவனி வருகிறாள்.

#பல நூற்றாண்டாய் ...
பாரம் சுமக்கிறாள் பெண்.
நாடு விடுதலை பெற்றது தெரியாமல் .

#ஆண்டாண்டு காலமாய் பெண்ணை ...
அடக்கி ஆள்கிறான் ஆண் .
நம் நாட்டு மக்கள் சுதந்திரம்
பெற்று விட்டதை  மறந்து.

#சுதந்திரத்தைப் பற்றி..
மாணவனை இரண்டு நிமிடங்கள் 
பேசச் சொல்கிறார் ஆசிரியர்.
கையில் பிரம்புடன்..


முற்றும். 

திங்கள், 10 நவம்பர், 2025

அம்மா என்ற ஜக்கம்மா

#அம்மா என்ற ஜக்கம்மா # ( ஒரு பக்க கதை)


படைப்பு : எழுத்தாளர் இரா. கலைச்செல்வி


              *******


அம்மா:  பூஜை அறையில் நின்று கொண்டு,   “ஜக்கம்மா சொல்றா , ரவி… இந்த வருஷம் கணக்கு  பரிட்சை ரொம்ப கஷ்டமா இருக்குமாம். நீ நல்லா  முயன்று படிக்கனும்”


ரவி: (யோசனையுடன்) “சரிம்மா. ஆனா பரிட்சைய பத்தி ஜக்கம்மா ஏன் சொல்றா”


அப்பா : (அவசரமாக) ஏதோ அவளுக்கு தெரிந்திருக்கும். பெரியவங்க சொன்னா கேட்கணும்.”


(சில நாட்கள் கழித்து, இரவில் கண் விழித்து படித்துக்கொண்டிருந்த  ரவி,   பாத்ரூமுக்கு செல்கிறான். திடீரென, அம்மா அப்பாவின் அறையில் இருந்து மெல்லிய குரல் கேட்கிறது .)


அம்மா : (குரலை மாற்றி)  “ஜக்கம்மா சொல்றா ,இந்த முறை ரவிக்கு கணக்குல நூற்றுக்கு நூறு வரும். பயப்படாதீங்க. “


(ரவிக்கு தூக்கி  வாரிப்போட்டது. அப்பா சிரிக்கிறார் )


அப்பா : (சிரித்தபடியே)  “இனிமே  ரவிக்கு பரீட்சை சமயத்துல உன்னை ஜக்கமான்னு தான் கூப்பிடனும்.  ஜக்கம்மான்னு சொல்லி, பையன நம்ப வச்சு, நல்ல படிக்க வச்சுட்ட.  பேஸ் பேஸ்.”


(ரவி தலையில் கை வைத்து ,இந்த ஜக்கம்மா  சாமி  இல்லை .அது தன் அம்மா என்பதை புரிந்து கொண்டான்.)


       இருந்தாலும் அம்மாவின் தந்திரத்தை நினைத்து வியந்து போனான். ஜக்கம்மா சொன்னாள்  என்று கூறியதால் நானும் கஷ்டப்பட்டு படித்தேன் என்பது  உண்மைதான். அம்மா சொன்னால் கேட்க மாட்டேன் என ஜக்கம்மா மீது பழி போட்டுள்ளார் .


        பரீட்சை முடிந்து , ஓடி வந்த ரவி, அம்மாவை கட்டிப்பிடித்து , “ஜக்கம்மா நான் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கி விடுவேன்” என கூறினான்.


       அம்மா என்ற ஜக்கம்மா திகைத்து நின்றாள்.


முற்றும்.

சனி, 13 செப்டம்பர், 2025

சுருட்டு தாத்தா


சிறுகதை.    #சுருட்டு தாத்தா #    


எழுத்தாளர் : 

இரா. கலைச்செல்வி


                                         *****


           அது ஒரு மிகச் சிறிய பெட்டிக் கடை .சினிமா தியேட்டருக்கு நேர் எதிரில் இருந்தது.  சினிமா துவங்கும் முன் சிகரெட், பிடி, முறுக்கு ,கடலை உருண்டை என  நல்ல வியாபாரம் . சினிமா ஆரம்பிக்கும் நேரம் தவிர , மற்ற நேரங்களில் வியாபாரம் சுமார்தான். 20 வருடங்களாக அந்த கடையின்  முதலாளி சுருட்டு தாத்தா.  ஆம் அவரை அனைவரும் அப்படித்தான் அழைப்பர். 


ஒல்லியான கருத்த தேகம். நரைத்த வெள்ளை முடி.  தலையில் ஒரு துண்டு. வெயில் காலம் என்றால் சட்டை போட்டிருக்க மாட்டார். வேஷ்டி மட்டும் தான். சிரித்த முகம் சிலரிடம். கண்டிப்பான முகம்  சிலரிடம். . ஓய்வு  நேரங்களில் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பார்.  பெட்டிக்கடை என்றாலும், ஓரளவு சகலவித பொருட்களும் அங்கு கிடைக்கும்.


"தாத்தா ... தாத்தா  ஐம்பது காசுக்கு கடலை மிட்டாய்."


 "இந்தா பேராண்டி எடுத்துக்கோ. " அன்போடு  கன்னத்தில் ஒரு தட்டு தட்டி அனுப்புவார். இது சுருட்டு தாத்தாவின் கரிசனம்.


"என்ன தாத்தா  . எப்படி இருக்கீங்க? .ஒரு சொக்கலால் பிடி கட்டு."


ம்..ம். நல்லா இருக்கேன் தம்பி.. நீ எப்படி இருக்கப்பா.? வயல்ல விவசாயம்  எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? நல்ல மழை தானே. இந்த வருஷம் நல்ல விளைச்சலா.. ?ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளே காணோம். அப்பப்போ வந்து ,இந்த தாத்தாவை பார்த்திட்டு போ தம்பி.  உரிமையோடு கூறுவார். 


சரிங்க அய்யா.  வேலை இல்லையினா,  இந்த பக்கம்  தான் வருவேன் அய்யா. உங்களோட வந்து பேசினாலே நாட்டு நடப்பு எல்லாம் அத்துபடியா தெரிஞ்சுக்கலாம். . வரேன் அய்யா."


"போய் வா தம்பி."



"தாத்தா ... தாத்தா...  எங்க அம்மா... கம்பெனியிலிருந்து  வர லேட் ஆகும் . நாளைக்கு ...நான் ஸ்கூல் ஹோம் வொர்க் பண்ண வேண்டும். ஒரு என்பது பக்க,  கோடு போட்ட நோட்டு கொடுங்க தாத்தா. அம்மா வந்தப்புறம் காசு கொண்டு வந்து கொடுத்துடறேன்."


"அதுக்கு என்ன பேராண்டி... எடுத்துட்டு போ .உனக்கு இல்லாததா.!!"


மகிழ்வோடு எடுத்துக் கொடுத்தார் சுருட்டு தாத்தா. 



"அய்யா இரண்டு   "கோல்டு பிளேக் " சிகரெட் பாக்கெட்."


தாத்தா கவனிக்காதது போல் வேறு வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும் கேட்டான் அய்யா ரெண்டு கோல்ட் பிளேக் சிகரெட். முகத்தைத் தூக்கிப் பார்த்து, ஒரு முறை முறைத்து  விட்டு, கீழே குனிந்து கொண்டார்.


சிறிது நேரம் கழித்து ... "பழைய பாக்கி என்ன ஆச்சு ." இது தாத்தாவின் கேள்வி. 

அசடு வழிந்தவன்... "அடுத்த வாரம் தந்துடறேன்" 


"இதே பதிலைத் தான் வாரம் வாரம் சொல்ற. சரி அப்போ அடுத்த வாரம் வந்து சிகரெட் வாங்கிக்கோ.  இப்போ நடையை  கட்டு... என்று கூறி தன் வேலையை பார்க்க துவங்கி விட்டார். அவன் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு  கிளம்பினான்.


"வந்துட்டான் சிகரெட் வாங்க. காசு கொடுத்து  வாங்க  துப்பு இல்ல. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கான். 30 வயசு ஆகுது .ஒரு வேலைக்கும் போகல. ஊரை  சுத்திகிட்டு சிகரெட்   குடிக்க மட்டும் வந்துருவான். இவனுக்கு கோல்ட் பிளேக் கேக்குது. சொக்கலால் பீடிக்கே  காசு இல்ல. கேட்கிறது கடன். வாய் கூசாம பொய் வேற.." தனக்குள் , ஆனால் அவனுக்கு கேட்கும் படி ,முணுமுணுத்துக் கொண்டார். 


சிறிது நேரம் கழித்து,  ஒரு சிறுவன் ஓடி வந்தான் . தாத்தா தாத்தா எனக்கு ரொம்ப தாகமா இருக்கு தாத்தா. மண்பானை தண்ணி இருந்தா குடுங்க  தாத்தா.


தாத்தா அவனைப் பார்த்து விட்டு ,  தண்ணி தாகமா  இல்ல  பசியா..? சும்மா சொல்லு.


அவன் ஏதும் சொல்லவில்லை. மௌனமாய் நின்றான். 


தாத்தா நிலைமை  புரிந்து , ஒரு மாம்பழ  ஜூஸ் பாட்டிலும்  ,ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டையும் எடுத்து கொடுத்தார்.


அச்சிறுவன் வேண்டாம் தாத்தா... வேண்டாம். எனக்கு தண்ணி மட்டும் போதும். 


பரவாயில்ல பேராண்டி .சாப்பிடு நல்லா சாப்பிடு.  சிரித்துக் கொண்டே அவனின் தலையை அன்போடு தடவி விட்டார். 


இட்டார் பெரியோர் . சிலருக்கு ,சில நேரங்களில்  , இடாதோரும் பெரியோரே.


முற்றும்.


எழுத்தாளர் இரா.கலைச்செல்வி


 




வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம் 



படைப்பு :கவிஞர் இரா. கலைச்செல்வி


___


தாயின் கருணை பொழியும் தாய் மண்ணே ..!!

தன்னிகரற்ற உனக்கு அன்பு வணக்கங்கள்...!!


பரந்த   கடல்களை முப்புறமும் கொண்டவளே..!!

பசுமை போர்த்திய மலைகளை கொண்டவளே..!!


இயற்கை அன்னையின் எழில்  கொண்டவளே ..!!

இனிய பசும் வயல்வெளியை பரிசளித்தவளே.!!


துள்ளி விளையாடும் நதிகளை கொண்டவளே..!!

தூய  தென்றல் காற்றின் அமைதி  கொண்டவளே..,!!


வடக்கே இமயமும், தெற்கே குமரியும் கொண்டவளே..!!

பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள் கொண்டவளே..!!


வேற்றுமையில்  ஒற்றுமை காண்பவளே..!!

உன் மடியில்  பிறந்தோம், தவழ்ந்தோம் ,உயர்ந்தோம்...!!


பாரதத் தாயே உன் வளத்தால் வளர்ந்தோம்..!!

பாசக்கரம் நீட்டி  , நீ சீராட்டி ,பாராட்டி வளர்த்தாய் ..!!


திருவள்ளுவரும், பாரதியும், பாரதிதாசனும்,

அன்னை தெரசாவும்  ,பிறந்த புண்ணிய  பூமி நீ..!! 


புத்தரும், காந்தியும் பிறந்து வாழ்ந்த பூமி நீ!!

புண்ணிய நதிகளின் பிறப்பிடம் நீ..!!


பல்வேறு மக்கள், பல்வேறு இனங்கள் இருந்தும்,

பாரதமாதா நீ மட்டுமே எங்கள் தாய்..!!


இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறோம்.

இனிய பாரதத்தினை  உலகஅரங்கில் உயர்த்துவோம்.


அன்பும் ,பண்பும்,  ஒற்றுமையும்  நிறைந்து...

அமைதியாய்  வாழ்ந்திடுவோம் உன் மடியில்..!!



முற்றும்.


கவிஞர் இரா. கலைச்செல்வி 







அவனுக்குள் அவள்

 சிறுகதை #அவனுக்குள் அவள்..!! #  படைப்பு: எழுத்தாளர் இரா .கலைச்செல்வி,  E.mail.: rksindira@gmail.com                 —--- பேராச...