ஞாயிறு, 7 ஜூன், 2026

அமெரிக்காவில் கல்யாணம்


 சிறுகதை : #அமெரிக்காவில் கல்யாணம் #

படைப்பு இரா. கலைச் செல்வி.

  ‌‌ ******
        சென்னை மயிலாப்பூரில், கபாலீஸ்வரர் கோயில் அருகில் ரங்கராஜன் அய்யரின் வீடு இருந்தது. ரங்கராஜன் அய்யர், ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். மிகவும் கண்டிப்பானவர், பாரம்பரிய பழக்கவழக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்று கொண்டவர். அவருடைய மனைவி ஜானகி மாமி, பாரம்பரியத்தில் பற்று கொண்டிருந்தாலும் அன்பானவர், ஆனால் கணவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர். 
        அவர்களின் ஒரே மகள் கௌரி, பி.இ. முடித்து ,ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் புத்திசாலிப் பெண். 28 வயது கௌரி இந்தக் காலத்து யுவதிகளைப் போல, நவீன எண்ணங்கள் கொண்டவளாக இருந்தாலும், பெற்றோருக்கு மிகவும் மரியாதை கொடுப்பவள். 
         தற்போது கௌரியின் திருமணம் தான் ரங்கராஜன் அய்யரின் ஒரே இலக்கு. தனது குலம், கோத்திரம், இவைதான் அவருடைய ஒரே கோட்பாடு. 
         "கௌரிக்கு 28 வயதாகிறது. எந்தப் பையனைப் பார்த்தாலும் பிடிக்க வில்லை என்கிறாளே. இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்..?" என்று ஒரு நாள் மாமியிடம் கோபமாகக் கேட்டார் ரங்கராஜன்.
         ஜானகி மாமி பயந்துகொண்டே, "அவளுக்கு நல்ல சம்பளத்தில், சென்னையில் செட்டில் ஆகும் மாப்பிள்ளை ஆக பாருங்கள் என்கிறாள் , அய்யர்வாள். வேறென்ன?" என்றார்.
         "நானும் ஒரு ஐம்பது வரன்களைப் பார்த்தாகிவிட்டது. என் நண்பர் மாதவனின் மகன், ராமச்சந்திரன் நல்ல பையன். அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறான். சம்பளம் மாதம் பதினைந்தாயிரம் டாலராம். ஜாதகம் அமோகமா பொருத்தி இருக்கு. அவனையும் போட்டோவை பார்த்தே , எனக்கு இவனைப் பிடிக்கவில்லை' என்கிறாள். இவளுக்கு என்னதான் வேண்டும்?" என்று மாமியிடம் சீறினார் அய்யர். 
         மூன்று மாதங்களுக்கு பின் , ஒருநாள் அய்யர் அவசரமாக வீட்டிற்கு வந்தார். "ஜானகி, ராமச்சந்திரன் இன்று அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டான்! அவன் குடும்பத்தினர் நாளை நம் வீட்டிற்குப் பெண் பார்க்க வருகிறார்கள். எல்லாம் முடிந்துவிட்டது, நீ எதுவும் பேசாதே! கௌரியும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதித்தாக வேண்டும்" என்று கண்டிப்புடன் கூறினார்.
        கௌரிக்கு அதிர்ச்சி. ஆனால், அப்பா இவ்வளவு உறுதியாகச் சொல்வதைப் பார்த்ததும், செய்வதறியாது திணறிப் போனாள். கௌரியால் ஏதும் எதிர்த்துப் பேச முடியவில்லை.
          மறுநாள், ராமச்சந்திரன் மற்றும் அவனது குடும்பத்தினர் கௌரியை பார்க்க வந்தனர். ராமச்சந்திரன், இதமான நிறத்தில் உடை உடுத்தியிருந்தான். பெரிய அதிகாரியின் தோரணை இருந்தது. அவன் குடும்பத்தார் பேசி முடித்ததும், ராமச்சந்திரன் கௌரியிடம் தனியாகப் பேச சம்மதம் கேட்டான். ரங்கராஜன் அய்யர் முழு மனதுடன் சம்மதித்தார். கௌரியும் ராமச்சந்திரனும் மொட்டை மாடிக்குப் பேசச் சென்றனர்.
         கௌரி தயக்கத்துடன், "நான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்... அமெரிக்காவில் இருந்தாலும் நமது கலாச்சாரத்தை மிகவும் நேசிப்பவர் என்று . உண்மையா? நான் இக்காலத்து நவீன பெண். எனக்கு பாரம்பரியம், பழைய கலாச்சாரம் எதுவும் ஒத்து வராது. என் மனதிற்கு எது சரி எனப் படுகிறதோ அதைத்தான் செய்ய விரும்புவேன். பாரம்பரிய பழக்க வழக்கங்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க மாட்டேன். அதனால் நம் இருவருக்கும் ஒத்து வருமா என தெரியவில்லை. " என்று நேரடியாகக் கேட்டாள்.
          ராமச்சந்திரன் அமைதியாகச் சிரித்துவிட்டு, “ நானும் அப்படிப்பட்டவன் இல்லை. இருந்தாலும் எனது பெற்றோர் அப்படி கூறியிருப்பார்கள் .ஆனால் உங்களைப் பொறுத்தவரை உங்கள் மனதிற்கு வேறு ஒருவரை பிடிக்கும் போது இப்படித்தான் தோன்றும்” என்றான்.
         கௌரி அதிர்ச்சியாகி, " என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டாள்.
          அவன் சிரித்துக்கொண்டே, "உங்களுக்குப் பிடித்த பையன் யார் என்று எனக்குத் தெரியும். உங்களுடன் வேலை பார்க்கும் “ ஜான்” என்பவரைத் தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதும் , அவர் கிறிஸ்தவர் என்பதால் உங்கள் தந்தையிடம் கூறுவதற்கு தயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் தெரியும்.
           கௌரியின் முகம் வெளிறியது. அவள் அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்று நினைத்து நடுங்கினாள். "உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள்.
          ராமச்சந்திரன் ஒரு உண்மையை உடைத்தான். உங்க நிறுவனத்தில் வேலை பார்க்கும் மனோகர் எனது நண்பர். அவன் மூலம் நான் உங்களைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டேன்‌ கௌரி. மேலும் , நானும் உங்களைப் போலவே, ஒரு அமெரிக்கப் பெண்மணியை விரும்புகிறேன் என்றான் .
       கௌரிக்கு தலை சுற்றியது. "என்ன சொல்கிறீர்கள்?"
         " எனக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. ஆனால், என் குடும்பமும் உங்கள் குடும்பத்தைப் போலவே பாரம்பரியத்தைப் பிடித்துத் தொங்குகிறது. அதனால்தான், இந்தப் பொய் சம்பிரசாயத்திற்கு ஒத்துக்கொண்டேன். நான் வந்ததே, உங்களின் சம்மதத்தைப் பெறத்தான். நீங்கள் சம்மதித்தால், நாம் இருவரும் நம் விருப்பம் போல் ,அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டு, நமக்கு பிடித்த வாழ்க்கை வாழலாம். எனக் கூறி , தனது யோசனையையும் தெரிவித்தான். நான் உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டேன். உங்கள் வாழ்க்கையில் எந்த வகையிலும் தலையிட மாட்டேன். நல்ல நண்பனாக இருப்பேன். " என உறுதியுடன் தெரிவித்தான்.
         கௌரிக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்தது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் உணர்ந்தாள். ராமச்சந்திரனின் யோசனை மிகவும் பிடித்திருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! தான் விரும்பிய ஜானையும் இழக்கத் தேவையில்லை, அதேசமயம் தந்தையின் கோபத்திலிருந்தும் தப்பிக்கலாம்!. பெற்று வளர்த்தவர்களின் மனம் கஷ்டப்படக் கூடாது அல்லவா. பிறகு ஒரு குழந்தையை பெற்றுக் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். இது உலகறிந்த உண்மை. கௌரி தன் மனதை இவ்வாறு சமாதானம் செய்து கொண்டாள். 
          இருவரும் கீழே இறங்கி வந்தனர். ரங்கராஜன் அய்யர் ஆவலுடன், "என்ன முடிவெடுத்தீர்கள்?" என்று கேட்டார். கௌரி அமைதியாக, ஆனால் உறுதியுடன் சொன்னாள்:
          "அப்பா, எனக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் இருப்பதால், இப்போதே நிச்சயதார்த்தம் உங்கள் விருப்பம் போல் செய்துவிடலாம். நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இவருடன் அமெரிக்கா போகிறேன். அங்கேயே எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியுள்ளார். அதனால் அங்கேயே பதிவு திருமணம் எளிய முறையில் செய்து கொள்கிறோம். அங்கேயே திருமணம் செய்து கொண்டால் சில சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் யாரும் வரவேண்டியதில்லை! அதனால் நிச்சயதார்த்தத்தை உங்களது விருப்பம் போல் இங்கே நடத்திக் கொள்ளுங்கள்" என்றாள்.
          ரங்கராஜன் அய்யருக்கு மகிழ்ச்சியில் கண்கலங்கிவிட்டது. "அடடா! எத்தனை நல்ல முடிவு! எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவெடுத்திருக்கிறாய்!" என்று மகளை உச்சி முகர்ந்தார். 
        ராமச்சந்திரனும், கௌரியும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டனர். கௌரி இந்தத் திட்டத்திற்கு, ஜானை எப்படி சம்மதிக்க வைப்பது என யோசிக்க தொடங்கி இருந்தாள். ஜானுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க வேண்டும். அவனுக்கு அங்கு வேலை கிடைத்துவிட்டால் ஜானை அங்கு திருமணம் செய்து கொள்ளலாம். இரண்டு மூன்று வருடங்கள் கழித்து உண்மை தெரிந்தால் பெற்றோர்கள் சமாதானம் ஆகி விடுவார்கள் என நம்பினாள். 
         ரங்கராஜன் அய்யர், 'தன் மகளின் நிச்சயதார்த்தத்தை ஒரு குட்டி திருமணம் போல் நடத்தினார். தனது மகளின் திருமணம் அமெரிக்காவில் நடக்கப் போவதாக பெருமையுடன் ஊரெங்கும் சொல்லிக்கொண்டார்.
         ஜானும் இந்தத் திட்டத்திற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்து இருந்ததால், அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்து, பதினைந்து நாட்களில் , இருவரும் விமானம் ஏறினர். ராமச்சந்திரனின் உதவியால் ஜானுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. கௌரியும் ,ராமச்சந்திரனும் தாங்கள் முடிவு செய்தது போல் அமெரிக்காவில் ,அவர்களின் மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்துகொண்டு, … ஆனந்தமாக வாழப் போகிறார்கள். 
         பெற்றோர்களின் விருப்பத்திற்காக , போலியான உறவினர்களுக்காக, மூடத்தனமான பாரம்பரியத்திற்காக , எங்கள் மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளாமல், பிடிக்காத திருமணத்தை செய்து கொண்டு , காலம் முழுவதும் நிம்மதி இழந்து வாழ வேண்டுமா..? என்பதே இந்த இளைய தலைமுறையினரின் நியாயமான கேள்வி.

முற்றும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவசமாஜ் மகளிர் மேடையின் சாதனை பெண் விருது வழங்கும் விழாவில் ஒரு விருது பெற்ற ஒரு மாணவியின் தந்தையின் கருத்து.

காலை வணக்கம் மேடம் 27/6/2026 வரலாற்று சிறப்புமிக்க அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் மகளிர் மேடை சாதனை பெ...