கலையின் சிறுகதைகள்
வானொலி, நாளிதழ், மாத இதழ் , மின்னிதழ்கள், இணையதளம் ஆகிய வற்றில் பிரசுரமான எனது சிறுகதைகள் மற்றும் கவிதைகளை இதில் பதிவிடுகிறேன். படித்து தங்களின் பொன்னான கருத்தினை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் விமர்சனங்கள் எனது எழுத்துப் பணிக்கு மேலும் மெருகூட்டும் என நம்புகிறேன். வணக்கத்துடனும் 🙏நன்றிகளுடனும், உங்கள் இரா. கலைச்செல்வி .
புதன், 25 பிப்ரவரி, 2026
ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்
திங்கள், 9 பிப்ரவரி, 2026
#சுதந்திர காற்று#
புதன், 28 ஜனவரி, 2026
தானத்தில் சிறந்த தானம்
திங்கள், 10 நவம்பர், 2025
அம்மா என்ற ஜக்கம்மா
#அம்மா என்ற ஜக்கம்மா # ( ஒரு பக்க கதை)
படைப்பு : எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
*******
அம்மா: பூஜை அறையில் நின்று கொண்டு, “ஜக்கம்மா சொல்றா , ரவி… இந்த வருஷம் கணக்கு பரிட்சை ரொம்ப கஷ்டமா இருக்குமாம். நீ நல்லா முயன்று படிக்கனும்”
ரவி: (யோசனையுடன்) “சரிம்மா. ஆனா பரிட்சைய பத்தி ஜக்கம்மா ஏன் சொல்றா”
அப்பா : (அவசரமாக) ஏதோ அவளுக்கு தெரிந்திருக்கும். பெரியவங்க சொன்னா கேட்கணும்.”
(சில நாட்கள் கழித்து, இரவில் கண் விழித்து படித்துக்கொண்டிருந்த ரவி, பாத்ரூமுக்கு செல்கிறான். திடீரென, அம்மா அப்பாவின் அறையில் இருந்து மெல்லிய குரல் கேட்கிறது .)
அம்மா : (குரலை மாற்றி) “ஜக்கம்மா சொல்றா ,இந்த முறை ரவிக்கு கணக்குல நூற்றுக்கு நூறு வரும். பயப்படாதீங்க. “
(ரவிக்கு தூக்கி வாரிப்போட்டது. அப்பா சிரிக்கிறார் )
அப்பா : (சிரித்தபடியே) “இனிமே ரவிக்கு பரீட்சை சமயத்துல உன்னை ஜக்கமான்னு தான் கூப்பிடனும். ஜக்கம்மான்னு சொல்லி, பையன நம்ப வச்சு, நல்ல படிக்க வச்சுட்ட. பேஸ் பேஸ்.”
(ரவி தலையில் கை வைத்து ,இந்த ஜக்கம்மா சாமி இல்லை .அது தன் அம்மா என்பதை புரிந்து கொண்டான்.)
இருந்தாலும் அம்மாவின் தந்திரத்தை நினைத்து வியந்து போனான். ஜக்கம்மா சொன்னாள் என்று கூறியதால் நானும் கஷ்டப்பட்டு படித்தேன் என்பது உண்மைதான். அம்மா சொன்னால் கேட்க மாட்டேன் என ஜக்கம்மா மீது பழி போட்டுள்ளார் .
பரீட்சை முடிந்து , ஓடி வந்த ரவி, அம்மாவை கட்டிப்பிடித்து , “ஜக்கம்மா நான் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கி விடுவேன்” என கூறினான்.
அம்மா என்ற ஜக்கம்மா திகைத்து நின்றாள்.
முற்றும்.
சனி, 13 செப்டம்பர், 2025
சுருட்டு தாத்தா
சிறுகதை. #சுருட்டு தாத்தா #
எழுத்தாளர் :
இரா. கலைச்செல்வி
*****
அது ஒரு மிகச் சிறிய பெட்டிக் கடை .சினிமா தியேட்டருக்கு நேர் எதிரில் இருந்தது. சினிமா துவங்கும் முன் சிகரெட், பிடி, முறுக்கு ,கடலை உருண்டை என நல்ல வியாபாரம் . சினிமா ஆரம்பிக்கும் நேரம் தவிர , மற்ற நேரங்களில் வியாபாரம் சுமார்தான். 20 வருடங்களாக அந்த கடையின் முதலாளி சுருட்டு தாத்தா. ஆம் அவரை அனைவரும் அப்படித்தான் அழைப்பர்.
ஒல்லியான கருத்த தேகம். நரைத்த வெள்ளை முடி. தலையில் ஒரு துண்டு. வெயில் காலம் என்றால் சட்டை போட்டிருக்க மாட்டார். வேஷ்டி மட்டும் தான். சிரித்த முகம் சிலரிடம். கண்டிப்பான முகம் சிலரிடம். . ஓய்வு நேரங்களில் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பார். பெட்டிக்கடை என்றாலும், ஓரளவு சகலவித பொருட்களும் அங்கு கிடைக்கும்.
"தாத்தா ... தாத்தா ஐம்பது காசுக்கு கடலை மிட்டாய்."
"இந்தா பேராண்டி எடுத்துக்கோ. " அன்போடு கன்னத்தில் ஒரு தட்டு தட்டி அனுப்புவார். இது சுருட்டு தாத்தாவின் கரிசனம்.
"என்ன தாத்தா . எப்படி இருக்கீங்க? .ஒரு சொக்கலால் பிடி கட்டு."
ம்..ம். நல்லா இருக்கேன் தம்பி.. நீ எப்படி இருக்கப்பா.? வயல்ல விவசாயம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? நல்ல மழை தானே. இந்த வருஷம் நல்ல விளைச்சலா.. ?ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளே காணோம். அப்பப்போ வந்து ,இந்த தாத்தாவை பார்த்திட்டு போ தம்பி. உரிமையோடு கூறுவார்.
சரிங்க அய்யா. வேலை இல்லையினா, இந்த பக்கம் தான் வருவேன் அய்யா. உங்களோட வந்து பேசினாலே நாட்டு நடப்பு எல்லாம் அத்துபடியா தெரிஞ்சுக்கலாம். . வரேன் அய்யா."
"போய் வா தம்பி."
"தாத்தா ... தாத்தா... எங்க அம்மா... கம்பெனியிலிருந்து வர லேட் ஆகும் . நாளைக்கு ...நான் ஸ்கூல் ஹோம் வொர்க் பண்ண வேண்டும். ஒரு என்பது பக்க, கோடு போட்ட நோட்டு கொடுங்க தாத்தா. அம்மா வந்தப்புறம் காசு கொண்டு வந்து கொடுத்துடறேன்."
"அதுக்கு என்ன பேராண்டி... எடுத்துட்டு போ .உனக்கு இல்லாததா.!!"
மகிழ்வோடு எடுத்துக் கொடுத்தார் சுருட்டு தாத்தா.
"அய்யா இரண்டு "கோல்டு பிளேக் " சிகரெட் பாக்கெட்."
தாத்தா கவனிக்காதது போல் வேறு வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும் கேட்டான் அய்யா ரெண்டு கோல்ட் பிளேக் சிகரெட். முகத்தைத் தூக்கிப் பார்த்து, ஒரு முறை முறைத்து விட்டு, கீழே குனிந்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து ... "பழைய பாக்கி என்ன ஆச்சு ." இது தாத்தாவின் கேள்வி.
அசடு வழிந்தவன்... "அடுத்த வாரம் தந்துடறேன்"
"இதே பதிலைத் தான் வாரம் வாரம் சொல்ற. சரி அப்போ அடுத்த வாரம் வந்து சிகரெட் வாங்கிக்கோ. இப்போ நடையை கட்டு... என்று கூறி தன் வேலையை பார்க்க துவங்கி விட்டார். அவன் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு கிளம்பினான்.
"வந்துட்டான் சிகரெட் வாங்க. காசு கொடுத்து வாங்க துப்பு இல்ல. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கான். 30 வயசு ஆகுது .ஒரு வேலைக்கும் போகல. ஊரை சுத்திகிட்டு சிகரெட் குடிக்க மட்டும் வந்துருவான். இவனுக்கு கோல்ட் பிளேக் கேக்குது. சொக்கலால் பீடிக்கே காசு இல்ல. கேட்கிறது கடன். வாய் கூசாம பொய் வேற.." தனக்குள் , ஆனால் அவனுக்கு கேட்கும் படி ,முணுமுணுத்துக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு சிறுவன் ஓடி வந்தான் . தாத்தா தாத்தா எனக்கு ரொம்ப தாகமா இருக்கு தாத்தா. மண்பானை தண்ணி இருந்தா குடுங்க தாத்தா.
தாத்தா அவனைப் பார்த்து விட்டு , தண்ணி தாகமா இல்ல பசியா..? சும்மா சொல்லு.
அவன் ஏதும் சொல்லவில்லை. மௌனமாய் நின்றான்.
தாத்தா நிலைமை புரிந்து , ஒரு மாம்பழ ஜூஸ் பாட்டிலும் ,ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டையும் எடுத்து கொடுத்தார்.
அச்சிறுவன் வேண்டாம் தாத்தா... வேண்டாம். எனக்கு தண்ணி மட்டும் போதும்.
பரவாயில்ல பேராண்டி .சாப்பிடு நல்லா சாப்பிடு. சிரித்துக் கொண்டே அவனின் தலையை அன்போடு தடவி விட்டார்.
இட்டார் பெரியோர் . சிலருக்கு ,சில நேரங்களில் , இடாதோரும் பெரியோரே.
முற்றும்.
எழுத்தாளர் இரா.கலைச்செல்வி
வெள்ளி, 5 செப்டம்பர், 2025
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
படைப்பு :கவிஞர் இரா. கலைச்செல்வி
___
தாயின் கருணை பொழியும் தாய் மண்ணே ..!!
தன்னிகரற்ற உனக்கு அன்பு வணக்கங்கள்...!!
பரந்த கடல்களை முப்புறமும் கொண்டவளே..!!
பசுமை போர்த்திய மலைகளை கொண்டவளே..!!
இயற்கை அன்னையின் எழில் கொண்டவளே ..!!
இனிய பசும் வயல்வெளியை பரிசளித்தவளே.!!
துள்ளி விளையாடும் நதிகளை கொண்டவளே..!!
தூய தென்றல் காற்றின் அமைதி கொண்டவளே..,!!
வடக்கே இமயமும், தெற்கே குமரியும் கொண்டவளே..!!
பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள் கொண்டவளே..!!
வேற்றுமையில் ஒற்றுமை காண்பவளே..!!
உன் மடியில் பிறந்தோம், தவழ்ந்தோம் ,உயர்ந்தோம்...!!
பாரதத் தாயே உன் வளத்தால் வளர்ந்தோம்..!!
பாசக்கரம் நீட்டி , நீ சீராட்டி ,பாராட்டி வளர்த்தாய் ..!!
திருவள்ளுவரும், பாரதியும், பாரதிதாசனும்,
அன்னை தெரசாவும் ,பிறந்த புண்ணிய பூமி நீ..!!
புத்தரும், காந்தியும் பிறந்து வாழ்ந்த பூமி நீ!!
புண்ணிய நதிகளின் பிறப்பிடம் நீ..!!
பல்வேறு மக்கள், பல்வேறு இனங்கள் இருந்தும்,
பாரதமாதா நீ மட்டுமே எங்கள் தாய்..!!
இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறோம்.
இனிய பாரதத்தினை உலகஅரங்கில் உயர்த்துவோம்.
அன்பும் ,பண்பும், ஒற்றுமையும் நிறைந்து...
அமைதியாய் வாழ்ந்திடுவோம் உன் மடியில்..!!
முற்றும்.
கவிஞர் இரா. கலைச்செல்வி
ஞாயிறு, 27 ஜூலை, 2025
ருத்ர தாண்டவம்
சிறுகதை
#ருத்ர தாண்டவம் # :
படைப்பு:இரா. கலைச்செல்வி
—--------
(இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை எடுத்துச் சொல்கின்ற கதை)
“ஏங்க …இன்றைக்கு எப்படியாவது வாட்ச் வாங்கிறலாம் .எனக்கே வெட்கமா இருக்கு .ஆபீஸ்ல தினம் மத்தவங்க கிட்ட டைம் கேட்க .இந்த பழைய வாட்சில் 20 நிமிடம் லேட்டா போறது.”
“தினம் உனக்கு இதே வேலையாப் போச்சு .வாட்ச் வாங்கணும். வாட்ச் வாங்கணும்னு .நீயே போய் ஈவினிங் வாங்கிட்டு வந்தா என்ன?. ஏன் என்னைய தொந்தரவு பண்றே.?”
“இதைப் போனவாரமே சொல்லியிருக்கலாமே. நானும் வரேன் போகலாம்னு சொல்லிட்டு இன்னிக்கி ஏன் இப்படி கத்துறீங்க? .எட்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணத்தப்போ வாங்கியது . இப்பதான் இதை மாத்தணும்னு நினைக்கிறேன் .அதுக்கு கூட… உங்களுக்கு வர முடியாதா.?”
“சரி சரி விட்டா பேசிட்டே… போவ . இன்னிக்கு சாயங்காலம் பர்மிஷன் போட்டுட்டு நேர என் ஆஃபீஸ்க்கு வந்துரு. அங்கே இருந்து எச்.எம்.டி ஷோரூமுக்கு போகலாம்.”
ஒரு வழியா புவனாவும் , பாலுவும் ஷோரூமுக்குள் நுழைந்தனர். விதவித கைக்கடிகாரங்கள் புவனாவின் கண்ணைப் பறித்தது. ஏங்க…இது எப்படி இருக்கு ?.நல்லா இருக்கா. ?
“ஏய்…வாட்ச் கட்டிக்க போறது நீ .ஏன் என் உயிரை வாங்குற .எது உனக்கு பிடிக்குதோ அதை எடுத்துட்டு கிளம்பு. அரை மணி நேரமா பார்த்துட்டு இருக்க. இன்னும் செலக்ட் பண்ணல. “
“நான் தான் கட்டிக்க போறேன். அதுக்காக நல்லா இருக்கா இல்லையா என்று ஒரு வார்த்தை சொல்ல கூடாதா? அப்போ எதுக்கு வந்தீங்க.? “
பாலுவின் கண்களில் தீப்பொறி. புவனாவிற்கு மூடு அவுட். எதையோ எடுத்துக்கொண்டு கவுண்டரில் பணம் செலுத்தி விட்டு புறப்பட்டாள்.
“என்ன திருப்தியா” என்ற பாலுவின் கேள்விக்கு, “திருப்தி என வேண்டி கிடக்கு. ஏதோ மணி சரியா காட்டினாப் போதும். “
இருவரும் நடந்து பஸ் நிலையம் வந்தனர். பஸ்ஸில் ஏறியவுடன் உட்கார இடம் கிடைத்தது. அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டாள் புவனா.. பஸ்ஸில் இடம் கிடைத்து, ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, நிமிர்ந்து பஸ்ஸில் உள்ளவர்களை நோட்டமிட்டாள்.
இரண்டு சீட்டு தள்ளி ஒருவர். எங்கேயோ பார்த்த உணர்வு. யாரது என வெகுநேரம் யோசித்தாள். சரியாக நினைவு வரவில்லை. ஆனால் நன்கு தெரிந்த முகம். இறங்குவதற்கு இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தான் இருந்தன.
“ஒரு நிமிடம்…” என கணவரிடம் சொல்லிவிட்டு , எழுந்து சென்று அந்த மனிதரை பார்த்து “எக்ஸ்கியூஸ் மீ”என்றாள்.
சிரித்தாள் புவனா.
அந்த முகம் சற்று சுருங்கி, லேசாய் யோசித்து, புன்முறுவல் பூத்து, ரொம்ப ஆச்சரியப்பட்டு, “நீங்க புவனா. அமுதா ஃப்ரெண்ட். ஆம் ஐ கரெக்ட்.”
எஸ் .எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. எதிர்பராமல் உங்களை பார்த்தது. எத்தனை வருஷம் ஆச்சு, உங்களை பார்த்தது.? .எப்படி இருக்கீங்க?. அமுதா எப்படி இருக்கா?. மேரேஜ்க்கு அப்புறம் அவளை பார்க்கவே இல்ல. நீங்க எப்படி…இங்கே...?
இங்கே என் மாமா வீட்டுக்கு வந்தேன். ஒரு ஃபங்ஷனுக்காக.
அப்படியா? . நான் அடுத்த ஸ்டாப் இறங்கிடுவேன்.என்னோட வீட்டு அட்ரஸ் இது. ஒரு நாள் வாங்க எங்க வீட்டுக்கு. ஊருக்கு போறதுக்கு முன்னாடி.
நான் உங்கள பத்தி என் கணவர் கிட்ட சொல்லி வைக்கிறேன். அதோ அந்த கிரீன் சர்ட். அவுங்க தான்.
ஓகே என கூறியபடி ,அவளின் கணவரை பார்த்து சிரித்து, கை அசைத்தான். அவருக்கு எதுவும் புரியவில்லை.
அவரு என் காலேஜ் ஃப்ரெண்ட் அமுதாவோட அண்ணன்... எங்கே பார்த்த மாதிரி இருக்கேன்னு போனேன். அமுதா அண்ணனே தான். காலேஜ் படிக்கிற போது அவவீட்டுக்கு அடிக்கடி போவோம் பிரெண்ட்ஸ் எல்லாரும். அமுதாவும் மேரேஜ் ஆகி போயிட்டாளா. அவ அட்ரஸ் கூட இப்ப தெரியாது. இங்கே ஏதோ ஃபங்ஷனுக்கு வந்தாராம். அதனால நம்ம வீட்டு அட்ரஸ் கொடுத்து இருக்கேன். முடிஞ்சா வீட்டுக்கு வந்துட்டு போங்கன்னு சொல்லி இருக்கேன்.
பஸ்சை விட்டு இறங்கி, வீட்டுக்கு வரும் வழியில், ஏண்டி அவனை வீட்டுக்கு வரச் சொன்னே. ?.
சும்மாதான். என்ன இப்போ? ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்திருக்கேன் .பஸ்ல என்னத்த பேசுவது? அமுதாவும் எப்படி இருக்கான்னு ஒன்னும் தெரியல .பார்த்ததால பார்மாலிட்டி வரச் சொன்னேன்.
இல்லை ..எதுக்கு தேவையில்லாம… வீட்டுக்கு வந்துகிட்டு.
ரொம்ப அலட்டிக்காதிங்க. அவர் வந்தாலும் தான் வருவார். எதுக்கு இத போய் பெருசா பேசிட்டு. உங்களுக்கு தெரிஞ்சவங்க மட்டும் தான் வீட்டுக்கு வரணுமா? எனக்கு தெரிஞ்சவங்க வரக்கூடாதா?
ஏய்.. நான் அப்படியா சொன்னேன்.?
வேற என்ன? ஏதாவது செலவு ஆகும்னா. வந்தா ஒரு கப் காபி கொடுப்பேன். வேறு ஒன்றும் கொடுக்க மாட்டேன். போதுமா? கவலைய விடுங்க.
வீடு வந்து இரவு வேலை முடித்து, தூங்கி, காலை மணி ஐந்திற்கு எழுந்து பம்பரமானாள் புவனா. சமைத்து, கிச்சன் கிளின் செய்து, எல்லாருக்கும் லஞ்ச் பேக் பண்ணி, தானும் ரெடியாகி ஒன்பது மணிக்கு பஸ் பிடித்து ஆபீஸ் போனாள். குழந்தைகள் பள்ளி சென்றனர். மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் யாரோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது. யாராயிருக்கும் என்று ஆச்சரியத்துடன் நுழைந்தாள் புவனா..
வந்திருப்பது அமுதாவின் அண்ணன் என்பது தெரிந்து கொஞ்சம் ஆச்சரியப்பட்டாள்.பரவாயில்லையே நான் சொன்னதை பொருட்படுத்தி வந்திருக்காரே.
“ஹலோ வாங்க. வந்து ரொம்ப நேரம் ஆச்சா.?”
சொல்லிவிட்டு கணவரை பார்த்தாள் புவனா. அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை.
“அம்மா அப்பா எப்படி இருக்காங்க? அமுதா எப்படி இருக்கா.? எங்க இருக்கா? அவ அட்ரஸ்சே தெரியாது.”
“சேலத்துல இருக்கா . உங்க அட்ரஸ்சை அவளிடம் கொடுக்கிறேன்.”
“சரி பேசிட்டு இருங்க. காபி கொண்டு வரேன்.” உள்ளே போனாள்.
காபி குடித்துக் கொண்டே, உங்களை எதிர்பார்க்காமல் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். அமுதாவிடம் சொல்கிறேன். அவளை உங்களுக்கு லெட்டர் போடச் சொல்கிறேன். இதுதான் அவ அட்ரஸ் .நீங்களும் லெட்டர் போடுங்க. கணவரிடம் கைகுலுக்கி எழுந்தார்.( அது கைபேசி வருவதற்கு முந்தைய காலம்)
நீ லெட்டர் போடு. அவளும் லெட்டர் போடுவா. எதுக்கு இந்த தேவையில்லாத உறவு எல்லாம். பெரிய ஃப்ரெண்ட்ஷிப். ஒரு கனல் பார்வையை வீசிவிட்டு ,போய் படுத்துக் கொண்டார் புவனாவின் கணவன்.
புவனா இரவு வேலைகளை முடித்து, குழந்தைகளை படிக்க வைத்து, சாப்பிட வைத்து விட்டு, இவரை சாப்பிட அழைத்தாள்.
எனக்கு வேண்டாம். ஒரே தலைவலி!!
தலைவலி தலையிலா? மனதிலா? வலி இருக்கட்டும் .வாங்க சாப்பிட.
வேண்டாம்ன்னு ஒரு தடவை சொன்னா புரியாதா. ?
இந்தா பாருங்க…சமைச்சதெல்லாம் வேஸ்ட்டா போயிடும். வாங்க.
அப்போ வேஸ்ட்டா போயிரும் என்றுதான் என்னை சாப்பிட கூப்பிடுறியா? ஏன் இப்ப வந்துட்டு போனானே தடியேன், அவனுக்கு சோறு போட்டு விருந்து வைத்து அனுப்பி இருக்க வேண்டியதுதானே? இவளுக்கு தெரியும் இவர் சாப்பிட வராததற்கு என்ன காரணம் என்று. எரிச்சலுடன் இருந்த புவனாவிற்கு கணவன் முனகியது இன்னும் ஆத்திரத்தை கிளப்பியது…
சும்மா பஸ்ல போனவனை கூப்பிட்டு, பேசி சிரிச்சு, வீட்டுக்கு வரச் சொல்லி, எதுக்கு இதெல்லாம்? யாரோ போறான். எதுக்கு தேவையில்லாத இந்த உறவெல்லாம். இப்படி கண்டவனை வீட்டிற்கு கூப்பிடுற வேலையெல்லாம் உன் அப்பன் வீட்டோட விட்டுட்டு வந்து இருக்கணும். இங்க கண்டவனும் வருவதை நான் அலோ பண்ண மாட்டேன். குடும்பப் பெண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கிறதை விட்டுட்டு பெத்து வளர்த்திருக்கான் பாரு. பொட்டச்சிய எவ்வளவு லட்சணமா.?
இந்தா பாருங்க, எங்க அப்பாவை பத்தி, ஏதாவது சொன்னீங்க எனக்கு கெட்ட கோபம் வரும்.
என்னடி கோவம் வரும்.. என்ன கோவம் வரும் ? உன் கோபம் என்னைய என்ன செய்யும் . அப்பனை பற்றி சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதோ. தெரியாது உங்க அப்பன பத்தி. உங்க குடும்பத்தை பத்தி .எல்லாம் மறந்துட்டேன்னு நினைச்சிட்டியா ?
விஷயம் எங்கோ திரும்புவதை உணர்த்தாள் புவனா. எனினும் கேட்டாள் என்ன சொல்ல வர்றீங்க..?
கல்யாண வீட்டிலேயே தெரிஞ்சுக்கிட்டேனே உங்க குடும்பத்தை பத்தி. கல்யாண வீட்டுல பார்த்தா ஒரே பசங்க கூட்டம் .யாருனு விசாரிச்சா புவனாவோட காலேஜ்ல படிச்ச பசங்கன்னு ரொம்பவும் சாதாரணமா சொல்லிட்டு போறான் உங்க அப்பா. எந்த அப்பனாவது இப்படி காலேஜ் பசங்களை எல்லாம் இப்படி பொண்ணோட கல்யாணத்துக்கு அழைப்பானா ? நீ தான் அவங்களை அழைத்து இருந்தாலும் உங்க அப்பா பெர்மிஷன் கொடுத்திருக்கானே. இது போதாது உன் குடும்ப இலட்சணத்தை காட்டுறதுக்கு.
புவனாவிற்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. மணி இரவு ஒன்பது மணி. இந்த நேரத்துல இவனோட என்ன வாக்குவாதம் பண்ணறது.?
இப்ப பாரு… இவன் வீட்டுக்கு வந்தாலும் தான் வருவான்னு சொன்னாய்.. வந்துட்டான். இன்னொரு தடவை மாமா வீட்டுக்கு வரும்போது வருவான். இது தேவையா.?
என்னவோ சொன்னேன் வந்துட்டேன். என்ன இப்போ குடி முழுகி போச்சு? போன வருஷம் உங்களோட காலேஜ்ல படிச்சவள்ன்னு சொல்லிட்டு எவளோ வந்து ரெண்டு மணி நேரம் கதை அளந்துட்டு போகல. ஏன் வந்தா அவ.? சும்மா தானே வந்தா .நான் ஏதாவது கேட்டேனா உங்கள.? ஆனால் இந்த ஆம்பளைங்களுக்கு மட்டும் ஏன் இப்படி புத்தி போகுதோ.!!
ஆம்பளை புத்தி எப்படியும் இருக்கட்டும் .பொம்பள புத்தி ஒழுங்கா இருந்தா தான் வீடு உருப்படும்.
இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி குதிக்கிறீங்க?
இப்ப பண்றது அப்போ பண்ணியது எல்லாம் சேர்த்து தான் கோபம் வருது. அன்றைக்கு என்னடானா, உன் ஆபீஸ்ல எவளுக்குகோ கல்யாணம்ன்னு 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அவள் ஊருக்கு போகணும் என ஒத்த கால்ல நிக்கிற நீ .எங்கே எவளுக்கு கல்யாணம், எவனுக்கு கருமாதி எல்லாம் உனக்கு நினைவிருக்கும் .வீட்ல எந்த பொருள் எங்கே வச்சோம்னு நினைவிருக்காது. பொம்பளைக்கு முழு கவனமும் புருஷன் மேலையும், புள்ள மேலையும் ,வீட்டு மேலயும் தாண்டி இருக்கணும்.
எதுக்கு இப்போ சம்பந்தமில்லாத விஷயங்களை இழுக்குறிங்க. ச்சீ.. வீடா இது. நீண்டா குற்றம், உக்காந்தா குற்றம் என்கிற கதையாவுல இருக்கு.
ஆமாண்டி நிண்ட குத்தம், உட்கார்ந்த குத்தம் தாண்டி. எல்லாத்துலயும் பொம்பளையா நடந்துக்க .நிக்கிறதுலயும் ஒரு பணிவு வேண்டும். உட்கார்வதிலும் ஒரு அடக்கம் வேணும். நானும் தான் எம். ஏ படிச்சிருக்கோம். சம்பாதிக்கிறோம் என்கிற திமிரு உனக்கு. அதுதான் இப்படி பேச வைக்குது. வேற என்ன.?
இதற்கு மேல் எந்தவிதமான பேச்சையும் கேட்கிற சக்தி புவனாவிற்கு இல்லை . பேச பேச வார்த்தை பரிமாற்றங்கள் நீண்டு கொண்டு தானே போகிறது. ராத்திரி நேரத்தில பக்கத்து வீட்டுக்கெல்லாம் கேட்க போகுது..ச் சே…”இப்போ சாப்பிட வர்ரீங்களா இல்லையா?” புவனாவின் இந்த கேள்விக்கு “எல்லாத்தையும் எடுத்து குப்பையில கொட்டு” என பதில் வந்தது .
பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தாள் புவனா. மணி இரவு 10. குழந்தைகள் அயர்ந்து தூங்கினர். பக்கத்து வீட்டில் எட்டு மாத பெண் குழந்தை அழுது ஓய்ந்தது .சில தொலைக்காட்சி ஒளிபரப்பு ஓசை தவிர , நல்ல நிசப்தம் . புவனாவின் மனது பலத்த சிந்தனையில் மூழ்கி விட்டது.
ஏன் இவர் இப்படி.? சிலபேர் இப்படித்தான். இவர்களுக்கு தன் மனைவி இப்படித் தான் இருக்கணும் என்ற ஆணவம். ? பெண்களுக்கென்று தனித்தன்மை, தனி சிந்தனை, தனி விருப்பம் இருக்கக் கூடாதா ?கணவர் சொல்வதற்கு ,தஞ்சாவூர் பொம்மையா தலையாட்டனுமா? கணவருக்கு அடங்கி, ஒடுங்கி, இருக்க வேண்டுமா? அப்போதுதான் குடும்பம் அமைதியா ,சந்தோசமா இருக்குமா ? சில ஆண்கள் மனது அப்போதுதான் அமைதி பெறுமா. ?
அப்போ நான் உயிருள்ள மனுஷியா இருக்கக் கூடாது. உயிரற்ற ஜடமா இல்ல இருக்கணும். ஜடமான பொண்ணைத்தான் பல ஆண்கள் விரும்புகிறார்களோ.? .ஆண்களை விட பெண்கள் எந்த வகையில் குறைச்சல். உடல் ரீதியாக அவர்களுக்கு பலம் இருக்கு என்கிற ஒரே ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு ,இப்படி ருத்ர தாண்டவம் ஆடுகிறார்களே. நமக்கு உள்ள மனித உணர்வுகள் தானே அவளுக்கும் இருக்கும் என்பதை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்ப்பார்களா?
அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டோடு இருந்தார்கள். கணவருக்கு எல்லாம் பார்த்து பார்த்து கவனிச்சாங்க. கணவனை ஏன் எதற்கு என்று ஒன்றும் கேட்க மாட்டார்கள்.அதனால ஆண்கள் தன் இஷ்டப்படி ருத்ர தாண்டவம் ஆடினர் .இப்போ பெண்கள் படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சு உலக விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது .மனரீதியா ஆண்களை விட பெண்கள் உறுதியாக இருக்காங்க .இப்போதுதான் உயிருள்ள மனுஷியாய் மாற ஆரம்பித்து உள்ளார்கள் .ஆனால் இந்த ஆண்கள் இப்போதும் அந்தக் காலத்து வீட்டுப் பெண்களைப் போல , தனக்கு அடக்கி போகும் தன்மையான பெண்களையே விரும்புகிறார்களே. ஆண்கள் இரத்தத்தில் ஊறிப்போன சுயநலம். ம்…இது எந்த வகையில் நியாயம்?
பாரதி படைத்த புதுமைப் பெண்ணைப் போல தன் மனைவி இருக்கணும் என எத்தனை ஆண்கள் ஆசைப்படுகிறார்கள்? ஆனால் பாரதியாரைப் பற்றி மணிக்கணக்கில் புகழ்ந்து பேசுவார்கள். மனைவியும் தன்னைப்போல் வேலைக்கு செல்லும் நிலையில் , வீட்டு வேலைகளை ஓரளவாவது பகிர்ந்து கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர்? எப்போது இவர்கள் மனைவியை புரிந்து கொண்டு , தான் என்ற ஆளுமை உணர்வைத் தவிர்த்து, அவர்களுக்கு நல்ல நண்பர்களாய் மாறுவார்களோ அப்போதுதான் குடும்பம் குதுகூலமாகும்.
ஆம்..இந்த இருபதாம் நூற்றாண்டில்.. பெண்கள் புள்ளைய கவனிக்கணும் .புருஷனை கவனிக்கணும். வீட்டை கவனிக்கணும். வீட்டுக்காரருக்கு சமமா சம்பாதிக்கணும் .அவருக்கு அடங்கியும் போகணும்.
இந்த நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்? சொல்ல முடியாது நாட்டை ஆளுகின்ற பொறுப்பும் இப்பவே பெண்கள் கைக்கு வந்தாச்சு.. இனி பெண்கள் எல்லாம் தன்னால்தான் முடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வுடன், பெண் சிங்கங்களாய், பிரியதர்ஷினிகளாய் வீறுநடை போடலாம். ஆண்கள் ஆடிய ருத்ர தாண்டவத்தின் விளைவு இதுவாக இருக்கலாம்.
இப்படியாக ஏதேதோ புவனாவின் மனதில் ஆயிரக்கணக்கான எண்ண அலைகள் வந்து மோதி , எதற்கும் பதில் கிடைக்காமல், அசதியில் கண்ணயர்ந்து விட்டாள்.
ஆழ்ந்த தூக்கத்தில் புவனா…. இது என்ன இப்படி.? நிஜமா? எங்கும் மகிழ்வான பெண்கள். மகிழ்வான குடும்பம் .நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வை ,நிமிர்ந்த ஞானச் செருக்கு கொண்ட பெண்கள். பெண்களை நிஜமாய் புரிந்து கொண்ட கணவன்மார்கள். பெண்ணை தனக்கு சமமாய் பாவிக்கும் ஆண்கள். உண்மையான நேசம் . என்ன இது எப்படி.? சொர்க்கமாய் தெரிகிறதே.
தூக்கத்தில் திடீரென்று எழுந்த புவனா, ச்சே இது கனவா? என பெருமூச்சு விட்டாள். ஆம் இந்த கனவு நனவாகும் நாள் நிச்சயம் வெகு தொலைவில் இல்லை என்ற உறுதியுடன் மீண்டும் தூங்கிப் போனாள் புவனா..
படைப்பு: இரா. கலைச்செல்வி **
செவ்வாய், 8 ஜூலை, 2025
காதலின் மறுபக்கம்
சிறுகதை:
காதலின் மறுபக்கம்
ஆக்கம் : இரா. கலைச்செல்வி
__________
(அந்த ஊர் பெரிய நகரமும் இல்லை .கிராமமும் இல்லை. இடைப்பட்ட ஒரு சிறு நகரம். செல்போன் வருவதற்கு முந்தைய காலம். ஆங்காங்கே எஸ் .டி .டி. பூத்துகள் மட்டும். )
அன்று அந்த ஊரின் நேரு தெரு முழுவதும், ஒரே பதட்டமாய் இருந்தது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா. எப்படியாவது உயிர் பிழைக்கனும் அந்த பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு. குனிந்த தலை நிமிராம காலேஜுக்கு போய் வரும். ஏன் இப்படி பண்ணுச்சுனே தெரியல. ?
பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிக்கிறாங்களே . இல்ல ... சரசு அக்கா உசுரு இருந்துச்சு . நான் பார்த்தேன். மகமாயி எப்படியாவது காப்பாத்தி கொடுத்திடனும்.
இந்து ...பிரியாவுக்கு போன் செய்தாள். பிரியா இன்னைக்கு காலேஜ்க்கு போகவேண்டாம். நீ அப்படியே பு,றப்பட்டு ஜி.ஹெச்..க்கு வந்துடு... விஷயம் தெரியுமா. ?
என்ன விஷயம் இந்து? எனக்கு ஒன்னும் தெரியாதே. !
ரொம்ப சோகமான விஷயம் நடந்துருச்சு பிரியா. நம்ம திலகா... நம்மள விட்டு போயிருவாளோன்னு தோணுது .
ஏய் ... என்னடி சொல்ற ..எனக்கு ஒன்னும் புரியல.
ஆமா பிரியா . திலகா சூசைடு அட்டென்ட் பண்ணிட்டா. கடைசி நேரத்தில் அவ அண்ணி பார்த்துட்டு ,காப்பாத்தி இருக்காங்க. உயிர் லேசா இருக்குன்னு சொல்றாங்க. ஜி.ஹெச் க்கு கொண்டு போய் இருக்காங்க .உடனே வா.. நம்ம ஜி.ஹெச்க்கு போகணும்.
"அய்யய்யோ... ஏண்டி... இவ இப்படி பண்ணினா ..அடிப்பாவி."
"சரி . நீ கிளம்பி வந்து ஜி.ஹெச் வாசலில் நில்லு. நானும் வந்துடறேன் . அங்கே பேசிக்கலாம்."
இந்துவும் பிரியாவும் சந்தித்து , திலகாவை பார்க்க சென்றனர்.
ஏதேதோ வாயிலும், மூக்கிலும் பொருத்தப்பட்டு ,குழாய்களும் பாட்டில்களுமாய் , அசைவின்றி திலகா கிடந்தாள். அவளின் அண்ணி பக்கத்தில்.
இந்துவும் பிரியாவும் அறைக்கு வெளியே நிற்பதை கவனித்து, திலகாவின் அண்ணி, வெளியே வந்தாள்..
என்ன அண்ணி... எப்படி நடந்துச்சு.? எங்களால் ஜீரணிக்கவே முடியல . டாக்டர் என்ன சொல்றாங்க..?
கலங்கிய கண்களோடு, திலகாவின் அண்ணி , நடந்தவைகளை விவரித்தாள். குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருந்தேன். திடீர்னு ஒரு சத்தம் திலகா ரூம்ல இருந்து. அதோட அவளோட வித்தியாசமான குரலும் கேட்டது . எனக்கு பதறிருச்சு . அப்படியே குழந்தையை தூக்கிட்டு, திலகா ரூமிற்குள் போனேன் .ஒரு கணம் என்ன செய்வது என்றே தெரியவில்லை .அவள் தூக்கில் தொங்கிட்டு இருந்தா . கால் உதறி கொண்டு இருந்தது .அப்படியே குழந்தையை கீழே போட்டுட்டு, அவளை தாங்கி பிடிச்சேன் .வீட்ல யாருமே இல்ல. ரொம்ப நேரமா கத்தி... கத்தி... யாரும் வரவே இல்லை. என்ன செய்றதுன்னே தெரியல. விட்டா அவளோட உயிர் போய்விடும். 10 நிமிஷம் பிடித்துக் கொண்டு நின்றேன். என்னால நிற்க முடியல. என்னோட பலம் கொண்ட மட்டும் கத்தினேன் . அவ அண்ணனும் வீட்டில இல்ல. ரோட்டுல போனவங்க என்னோட சத்தத்தை கேட்டு ,வீட்டுக்குள்ள வந்தாங்க . அப்புறம் என்னோட அலறல் சத்தத்தை கேட்டு ரூம் குள்ளே வந்து பார்த்து , வந்தவர் தான் ...பெரிய ஸ்டூல் எடுத்து போட்டு, அந்த கயிற்றை அறுத்து ,அவளை கீழே கிடக்கினார்.
உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி ,ஆம்புலன்ஸ் வந்து, கால் மணி நேரத்துல இங்க ஜி.ஹெச்க்கு வந்துட்டோம். அவ அண்ணனுக்கும் செய்தி போய் அவரும் வந்துட்டாரு. டாக்டர் பிழைக்கிறது கஷ்டம்னு சொல்றாங்க. குரல்வளை நல்லா நசுங்கிருச்சாம்.. இருந்தாலும் உயிர் இருக்கு .நாங்க முயற்சி பண்றோம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.
உங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அண்ணி. கடவுள் தான் காப்பாத்தணும். எப்படியும் பிழைச்சுடுவா . கவலைப்படாதீங்க அண்ணி. அவளோட நல்ல மனசுக்கு எதுவும் நடக்காது. நாங்க நாளைக்கு வர்றோம்.
சரி இந்து . திலகா என்னிடம் நாத்தனார் மாதிரியே பழக மாட்டா. சொந்த தங்கச்சி மாதிரி தான் பழகுவா. எப்படியும் பிழைத்து வந்துடனும். கண் கலங்கினார் அண்ணி.
இருவரும் மௌனமாய் விடை பெற்று ,வீடு வந்து சேர்ந்தனர். இருவர் மனதிற்குள்ளும் ஆயிரம் நினைவுகள்.
எல்லாமே அவ அண்ணனால் தான் . அவன் ஒரு முரடன். திலகா ...அவன் பிரண்டு சுந்தரை காதலிக்கிறாள்ன்னு தெரிஞ்ச உடனே, வீட்ல தினம் ரகளை தானாம். நிம்மதியே இல்லைன்னு சொல்லி... திலகா அப்படி கண் கலங்கினாள். இது பிரியாவின் மனசு.
ஏன் இவ இப்படி பண்ணுனா.? பெரிய காதல். மண்ணாங்கட்டி காதல். காதலிச்சு கல்யாணம் பண்ணவங்கெல்லாம் இப்ப எப்படி வாழ்றாங்கன்னு இவளுக்கு தெரியாதா என்ன? கல்யாணம் வரைக்கும் தான் காதல். கல்யாணம் முடிந்த பிறகு நான் ஆம்பளைன்னு காட்ட ஆரம்பிச்சுடுவாங்க. குடும்பம் ,குழந்தை, ஈகோ அப்படின்னு பிரச்சனை மேல் பிரச்சனை தான் . காதல் என்பது கானல் நீர் மாதிரி. இதுக்கு எதுக்கு பைத்தியக்காரத்தனமா இவ உயிரை போக்கிக்கணும். பிழைத்து வரட்டும். அப்புறம் பேசுகிறேன். இது இந்துவின் மனசு.
அன்று திலகா சொன்னது பிரியாவின் நினைவில் இன்று.
என்னவோ பிரியா... அவன் பாக்குற அந்த பார்வை என்னைய என்னவோ பண்ணுது. இதுவரை அவன் கிட்ட நான் எதுவும் பேசியதே கிடையாது. அவன் வீட்டுக்கு வந்தா.. எங்க அண்ணன் என்னைப் பார்த்து ஒரு முறை முறைப்பான். நான் ரூம்குள்ள போயிடுவேன். எப்பவாவது ஏதேச்சையாக அவனைப் பார்க்க நேர்ந்தால் அவன் ஒரு சிரிப்பு சிரிப்பான். நாள் பூராம் அந்த சிரிப்பையே நெனச்சுக்கிட்டு இருப்பேன். இதுவரை சௌக்கியமா ?... வரேன் ... கொஞ்சம் தண்ணி கொடுங்க ...என மூன்று வார்த்தை தான் பேசி இருக்கான். கண்ணால பல விஷயங்கள் பேசி இருக்கான். இது ஒரு தனி பீலிங்கா இருக்கு ப்ரியா.
இவளோட அண்ணன் , சுந்தரோடு இவளை சாதாரணமா பேச அனுமதிச்சிருந்தா கூட காதல் வந்திருக்காது. அவள் இந்த அளவிற்கு போய் இருக்க மாட்டாள். எப்பவுமே முறைச்சு முறைச்சு அவளை கண்ட்ரோல் பண்ணி தான், இவள் மனசு இப்படி ஆயிடுச்சு.. பிரியா பெருமூச்சு விட்டாள்.
அவளோட அண்ணன் அந்த பக்கம் இந்த பக்கம் போகும்போது , கண்ணால பார்த்து பேசியது தான். அப்பாவும் இல்ல. அம்மாவும் இல்ல. அண்ணன் மட்டும் தான் . அவனும் அன்பா பேசுவது கிடையாது . அந்த பாசத்துக்கான தவிப்பு சுந்தர் பார்வை பட்டதும் உருகி விட்டது. மனசுக்குள்ளே வச்சு வச்சு ,அழுத்தி அழுத்தி, அழுது செத்து இருக்கா. திலகா பக்கம் உள்ள நியாயத்தை பிரியா உணர்ந்திருந்தாள்.
ஒரு நாள் எப்படியோ அவனோடு பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போது, ஐ லவ் யூ என சுந்தர் சொல்லி விட்டானாம். இவளும் சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே வந்து விட்டாளாம்.
இந்த விஷயம் அவள் அண்ணாவுக்கு தெரிந்ததோ, இல்லையோ அன்றிலிருந்து இவள் காலேஜ் போவதை நிறுத்தி விட்டான் . சுந்தர் தனது வீட்டுக்கு வருவதையும் நிறுத்தி விட்டான் .வீடு ஜெயில் மாதிரி ஆகிவிட்டது என திலகா புலம்பியது , நேற்று பேசியது போல உள்ளது.
காலேஜுக்கும் போக முடியல . அவனையும் பார்க்க முடியல. ரூம்குள்ளேயே இருந்து இருந்து அவளுக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சாம். . நான் அப்பப்போ போய் அவளிடம் பேசிட்டு வருவேன் .என்ன செய்வது என்றே புரியவில்லை என சொல்லி அழுதா திலகா.
இரண்டு நாள் கழித்து ஜி .ஹெச் க்கு சென்ற போது, அவள் அண்ணி முகத்தில் சற்று மகிழ்ச்சி .என்ன அண்ணி டாக்டர் என்ன சொன்னாங்க.? உயிர் பிழைக்க 75% சான்ஸ் இருக்குன்னு சொல்றாங்க. இருவருக்கும் மனதிற்குள் சந்தோஷம்.
ஒரு வாரத்திற்கு பிறகு திலகா உயிர் பிழைத்து விட்டதாக தகவல்... இன்னும் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிற்கு செல்லலாம் என கூறி விட்டார்களாம்.
இரண்டு தடவை இந்துவும் ,பிரியாவும் போய் திலகாவை பார்த்துவிட்டு திரும்பினர். அவளால் எதுவும் பேச முடியவில்லை. தொண்டைக் குழாய் நசுங்கி விட்டதால். தோழிகள் கண்களால் மட்டுமே பேசிக்கொண்டனர். அவள் காதலைப் போலவே.
அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் ஆகி திலகா வீட்டிற்கு வந்தாயிற்று . அவள் அண்ணன் அவளைப் பார்த்து முறைத்ததோடு சரி. அண்ணி தான் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள். ஒரு மாதத்தில் பழைய திலகாவாய் மாறிவிட்டாள்.
இன்று திலகாவும், இந்துவும் தனியாய் பேசிக் கொள்கின்ற வாய்ப்பு .
"திலகா... நான் உனக்கு எவ்வளவு சொல்லி இருக்கேன் . அப்படி இருந்தும் நீ இப்படி பண்ணிட்டியே. எல்லாருக்கும் எவ்வளவு வேதனை..!!. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னா தற்கொலை தான் தீர்வா.? எத்தனை பேர்… காதலிச்சு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கொஞ்ச நாள்ல பிரிஞ்சு போறாங்க உலகத்துல . நீ பார்த்துகிட்டு தானே இருக்க. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்களா? சில பேர் தான் கடைசிவரை காதலோடு வாழ்கிறார்கள்"
"தெரியும் இந்து. ஆனால் முடியல . அந்த வலியை என் மனசால தாங்க முடியல."
கல்யாணம் வரைக்கும் தான் காதல் . கல்யாணம் ஆச்சு அவ்வளவுதான். இது சினிமா இல்லை. குடும்பம், குழந்தை, கடமை அப்படி.. போய்க்கிட்டே இருக்கும். அதுக்கு நடுவுல எத்தனையோ சண்டை , நீ பேசுற விதம் அவனுக்கு பிடிக்காது . அவன் பேசுற விதம் உனக்கு பிடிக்காது . இன்னும் எத்தனையோ . பெரும்பாலும் அடிமாட்டு வாழ்க்கை தான். போரடிக்க ஆரம்பிச்சிரும். இப்போ அவன் சிரிப்பை பாத்து உனக்கு வருகிற ஃபீலிங் அப்புறம் வராது . நீயா ஏதாவது கற்பனை பண்ணி, இப்ப அதுல சந்தோஷப்பட்டு இருப்பாய்.. அதுதான் உண்மை. உங்க அண்ணன் அண்ணி எப்படி இருக்காங்க .அது மாதிரி தான் இருக்கும் வாழ்க்கை. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். அவ்வளவுதான்."
"இதுக்காக போய்... இருபது வருடமா வளர்த்த இந்த உடலை, உன் உயிரை மாய்த்துக்கொள்ள போயிட்டியே. உன்னை இவ்வளவு தூரம் வளர்க்க , உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. பிளஸ் டூ..வில் 90% மார்க் வாங்க நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய். எல்லா உழைப்பையும் மறந்துட்டு இப்படி உலகை விட்டுப் போய் சேர முடிவெடுத்து விட்டாயே.இதையெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் உங்க அம்மா முன்னாடியே போய் சேர்ந்துட்டாஙக."
"நீ சொல்ற எல்லாமே என் மனசுல வந்து போச்சு இந்து.. ஆனா இங்க வீடே நரகமாய் இருக்கே. தினம் தினம் சாவதற்கு ஒரேடியா சாகலாம்னு தான். "
"சரி திலகா.இப்ப ஒன்னும் இல்ல. நான் உங்க அண்ணாவிடம் பேசி உன்னைய காலேஜுக்கு அனுப்ப சொல்றேன். கொஞ்ச நாள் அமைதியா இரு . உங்க அண்ணன் மனசும் மாறலாம் . இல்லாட்டினாலும் ஒன்னும் குடி முழுகாது.. அவனை பிரண்டாய் நினனச்சு மனசை தேத்திக்கோ. தப்பு இல்ல. அவன் தான் வாழ்க்கை என்று நீ முடிவு செய்து விடாதே. . அதெல்லாம் சும்மா பைத்தியக்காரத்தனம். இப்ப பிடிச்சிருக்கும். ஆனா இந்த காதல் பிடிப்பு ...கடைசி வரை இருக்கும் என்கிறது உண்மை இல்லை."
"என் அக்காவும் லவ் மேரேஜ் தான். எங்க அப்பா தொல்லை விட்டது என கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு .எங்க அக்கா அடிக்கடி சொல்லுவா .காதல் பண்ணும் போது பார்த்த பார்வைக்கும், கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பார்த்த பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று...கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பார்வையிலே காதலே பார்க்க முடியவில்லை, என்று அடிக்கடி சொல்லுவா. இப்படித்தான் பல பேரோட வாழ்க்கை."
உன் படிப்புல இப்போதைக்கு நீ கவனம் செலுத்து .காலம் எல்லாத்துக்கும் ஒரு தீர்வு கொடுக்கும். நாளைக்கு நான் உங்க அண்ணன் கூட பேசுறேன். சரியா திலகா.?
இந்து திலகாவின் அண்ணனிடம் பேசி, திலகாவை காலேஜுக்கு அனுப்ப சம்மதம் வாங்கினாள் . திலகாவிற்கு தான் முழு பொறுப்பு எடுப்பதாக சொல்லி, காலேஜுக்கு அனுப்ப கேட்டுக் கொண்டதின் பேரில், திலகாவின் அண்ணனும் வேறிவழியின்றி ஒப்புக்கொண்டான்.
திலகா படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாள். கல்லூரிக்கு சென்று, தோழிகளுடன் பேசியதில், அவள் கவலை மறந்து, சகஜ நிலைக்கு திருப்பினாள்.
இந்நிலையில் சுந்தருக்கு வங்கியில் நல்ல வேலை கிடைத்து விட்டது. அண்ணனும் சற்று மனம்மாறத் தொடங்கி இருந்தான் . சுந்தரின் அம்மா முறையாக, திலகாவின் அண்ணனிடம் வந்து பெண் கேட்டார். கல்லூரி படிப்பு முடித்ததும் திருமணம் செய்வதாக திலகாவின் அண்ணன் ஒப்புக்கொண்ட நிலையில், திலகாவின் மனசு லேசானது. முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினாள். பட்டம் பெற்றதும் திருமணம் என முடிவாயிற்று.
கல்லூரி முடித்து ,அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது. ஆறு மாதம் கழித்து இந்து ... திலகாவை சந்தித்தாள். என்ன திலகா... லைப் எப்படி போயிட்டு இருக்கு.?
போய்கிட்டு இருக்கு இந்து. .நீ சொன்ன மாதிரி தான். பெருசா ஒன்னும் இல்ல.
இந்த வாழ்க்கைக்கு தானா நான் என் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தேன் என நினைத்து, இப்போது உண்மையில் வெட்கப்படுகிறேன் இந்து.
முற்றும்
✒️ஆக்கம் : @இரா. கலைச்செல்வி

செவ்வாய், 10 ஜூன், 2025
வாடி என் வயிற்றுக்குள்ளே
சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! #
எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி
*****
அன்று வீடே ஒரே பரபரப்பாய் இருந்தது. நாளை வசந்திக்கு வளைகாப்பு. வசந்தியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஒருத்தி அவள் கைக்கு மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள். அத்தை மகள், வளைகாப்புக்கு வருகிறவர்களுக்காக தாம்பூலப் பை தயார் செய்து கொண்டிருந்தாள். வசந்தியின் கணவர், நாளை சமையலுக்கு வேண்டிய பொருட்கள் வாங்குவதில் மும்முரமாய் இருந்தார். மாமனார் எனக்கு பேரனோ, பேத்தியோ ...என்னோடு விளையாட விரைவில் வரப்போறாங்க ..என ஆனந்தமாய் யாருடனோ போன் பேசிக் கொண்டிருக்கிறார். அவள் மாமியாருக்கோ மனதிற்குள் அப்படி ஒரு சந்தோசம். மகிழ்ச்சி பொங்க வசந்தியை அடிக்கடி , அது சாப்பிடு ,இது சாப்பிடு , என கவனித்துக் கொண்டிருந்தாள்.
வசந்திக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. பலவித சிந்தனைகள் . நாளை நடக்கப் போகும் வளைகாப்பு நிகழ்வை, நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். கூடவே பழைய நினைவுகளும்.
இது எத்தனை வருட கனவு. திருமணமாகி இந்த பத்து வருடங்களில் நான் எவ்வளவு தவித்து இருப்பேன். ஒரு வருடமா? இரண்டு வருடமா ?பத்து வருடங்கள். ஒவ்வொரு மாதமும் கனவு காண்பேன். ஒரு சில நாட்கள் தள்ளிப் போனாலும் ,என் குழந்தை தான் வந்திருக்கிறாள் என சந்தோஷத்தில் புரித்துப் போவேன். வார இறுதியில் சோகம். அடிக்கடி வேண்டிக்கொள்வேன் .பராசக்தி நீயே வாடி என் வயிற்றுக்குள்ளே என.
உணவை சுமந்தது போதும் .உன்னை சுமக்க வேண்டும் .எங்கே இருக்கிறாய் நீ. வாடி என் செல்லமே... என வேண்டாத நாட்களே இல்லை.. பார்க்காத டாக்டர் இல்லை. சாப்பிடாத மருந்து இல்லை. 35 வயதை நெருங்கி விட்டேன். என் மனம், நாடி , நரம்பு எல்லாம் படபடக்கிறது. எப்போது என் மகள் எனக்கு கிடைப்பாள் என.
திருமணம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகு , நான் எந்த விழாவுக்கும் செல்வதை நிறுத்தி விட்டேன். விழாவில் எல்லோரும் கேட்கும் கேள்விகள் . ஏதேனும் விசேஷம் உண்டா..?? எப்போது நல்ல செய்தி கூறப் போகிறாய்..? வயிற்றில் புழு பூச்சி உண்டா..? இந்த விசாரிப்புகளை கேட்டு கேட்டு சலித்து விட்டது. வாழ்க்கையே வெறுமையாகி விட்டது. புழுவாய் துடிக்கும் என் மனசு. என்னை மலடி ஆக்கி விடாதே என இறைவனிடம் வேண்டாத நாள் இல்லை.
என் தாயின் மடியில் அழுது புரள்வேன். நான் என் தாய்க்கு இந்த சோகத்தை தரவில்லை. டாக்டரிடம் சென்றால்… இருவருக்கும் குறை ஒன்றும் இல்லை .நடக்கும். நம்பிக்கையோடு காத்திருங்கள்.. என்று கூறுவார்களே தவிர , தாமதத்திற்கு ஒரு காரணமும் அவர்களிடம் இருந்து கிடைக்காது. என் மனதிற்குள் மட்டும் ஏன் ஏன்..? என்ற கேள்வி துளைத்துக் கொண்டே இருக்கும். சிலர் எளிதாக எத்தனையோ குழந்தை பெற்றுக் கொள்கிறார்களே. நமக்கு மட்டும் ஏன் இப்படி..? என்ற கேள்விக்கு விடை காண முடியாது தவித்துக் கொண்டிருப்பேன்.
டெஸ்ட் டியூப் பேபி இருக்கிறது. இன்னும் ஏதேதோ முறைகள். பல லட்சங்கள் செலவாகும். மிகவும் மெனக்கிட வேண்டும் . உயிர் போகும் வலி, வேதனை வேறு... எங்களிடம் அத்தனை பணவசதி இல்லையே. பராசக்தியை வேண்டுவது மட்டுமே ஒரே வழி. நாங்கள் சொல்லவொண்ணா சோகத்தில் மூழ்கியிருந்தோம்.
எல்லா சோகத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டார் கடவுள். இதோ நாளை எனக்கு வளைகாப்பு. அடுத்த மாதம் என் கைகளில் என் குழந்தை. நினைவு அலைகளில் மூழ்கி ,அப்படியே தூங்கிப் போனாள் வசந்தி.
மறுநாள் வளைகாப்பு விழா . மகிழ்வாய், எளிமையாய் நடந்து முடிந்தது. அனைவரும் அக்கறையுடனும் அன்புடனும் விழாவின் ஒவ்வொரு வேலையையும் கவனித்துக் கொண்டார்கள். பார்க்க மகிழ்வாய் இருந்தது அவளுக்கு. மாத இறுதியில் அழகாய் பராசக்தியே அவள் குழந்தையாய் வந்திருந்தாள். குழந்தையை பார்க்கப் பார்க்க அவளுக்குள் சொல்ல முடியாத ஆனந்தம். இப்போதுதான் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாய் தோன்றியது வசந்திக்கு.
நாட்கள் வேகமாய் ஓடின. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் குழந்தை வளர்ந்து ... நான்கு வயது பெண்ணானாள். நல்ல அறிவு .நல்ல அழகு . கண் பட்டுவிடும் அழகு . பூரித்துப் போனாள் வசந்தி. குழந்தையை பக்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஆங்கில பள்ளியில் சேர்க்கலாம் என முடிவாகி சேர்த்தாகிவிட்டது. குழந்தையை பள்ளியில் சேர்த்த முதல் நாள் அனுபவம் ..அவள் கண் முன்னே.
என் மகளை முதல் நாள் ,அவள் பள்ளியில் விட்டு வரும்போது, அவளின் கயல் விழிகளில் இருந்து கண்ணீர் ததும்பியது. அம்மா அம்மா என அவள் தேம்பி அழுதது, என்னை என்னமோ செய்தது. வேறு வழியின்றி பள்ளிக்கு வெளியிலேயே நின்று , நானும் அழுது கொண்டிருக்கிறேன். அனைத்து பெற்றோர்களின் நிலையும் அப்படித்தான்.
பள்ளி அப்படி ஒன்றும் பெரிய பள்ளிஅல்ல. இட நெருக்கடி மிகுந்த பள்ளி. வசதிகள் மிக மிக குறைவு தான்.. ஆனால் என் வீட்டிற்கு மிக மிக அருகில் இருந்தது . குழந்தையை அழைத்து வருவது எளிது. குழந்தைகளுக்கு நன்றாக சொல்லித் தருகிறார்கள் என்று பெயர் பெற்ற பள்ளி, என்பதால் அப் பள்ளியில் சேர்த்தோம்.. கட்டணமும் கொஞ்சம் குறைவு தான்.
அவரின் சம்பாத்தியத்தில் எதும் பெரிதாய் சேர்த்து வைக்கவில்லை சேமிப்பு பணம் முழுவதும், என் குழந்தையின் வருகைக்காகவே , 10 வருடமாக ...பல மருத்துவமனையில் செலவிடப்பட்டு விட்டது. அதனாலேயே இந்த முடிவு.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் நல்ல பள்ளியாக என நினைத்து சேர்த்தோம். தினம் தினம் அவள் பள்ளி செல்லும் அழகை கண்டு ரசித்தேன். அகமகிழ்ந்து போனேன். ஆறு மாதங்கள் அவசரமாய் அழகாய் ஓடி விட்டன.
ஒரு நாள் அப்பள்ளியிலிருந்து ஒரே கூக்குரல். விகாரமான, சத்தங்கள். எட்டிப் பார்த்தால் ஒரே புகைமண்டலம். பதறிப்போனோம். அனைவரும் ஓடினோம். கண்டோம் அக் கோரக்காட்சியை. குலை நடுங்கும் கோர விபத்து. பள்ளி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. செய்வதரியாது திகைத்து நின்றோம். அழுது புலம்பினோம். ஆர்ப்பரித்தோம்.
ஒரு பயனும் இல்லை. தீயணைப்பு படை வந்தது. தீயை அணைக்க மிகவும் போராடினர் . பள்ளியினுள் நுழைய முடியவில்லை. ஒரே புகை மண்டலம். நெருப்பின் கோர தாண்டவம் உச்சத்தில் இருந்தது. அங்கே குழந்தைகள் அலறி துடிக்கும் சத்தம் கேட்கிறது..நான் உள்ளே ஓட முயன்றேன். தடுத்து பிடித்து இழுத்தனர். போனால் நானும் தான் கருகுவேன் என்பது தெரியும். ஆனால் அங்கே என் குழந்தை எப்படி இருக்கிறாளோ என்ற தாங்க முடியாத தவிப்பு என்னுள்.
நாங்களும் எத்தனையோ தடவை, அந்தப் பள்ளியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை வைத்தோம். எந்த பலனும் இல்லை. அரசாங்கத்திற்கு எழுதி இருக்கிறோம் என்பதே பதிலாக இருந்தது. மேலே கூரை வேய்ந்த கட்டிடம். வெயில் காலத்தில் நன்றாக இருந்தாலும் அது பாதுகாப்பு இல்லாததாகவே உணர்ந்தோம். கூரையை மாற்றுங்கள் என பலமுறை பெற்றோர்கள் மனு செய்வோம். அதை அரசாங்கம் செய்ய வேண்டுமா? அல்லது நிர்வாகம் செய்ய வேண்டுமா என எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதும் நடக்கவில்லை.
இப்போது அங்கு இந்த குலை நடுங்கும் சோகம் நடந்து விட்டதே. நூறு இளம் தளிர்கள் அப்பள்ளியின் உள்ளே. தீயணைப்பு படையின் உதவியால் தீயின் ஆக்ரோஷம் சற்று குறைந்த பிறகு, அனைவரும் ஓடினோம் .படிக்கட்டு குறுகலான படிக்கட்டு. முண்டி அடித்துக் கொண்டு ஓடினோம்.
அங்கே சென்று நாங்கள் கண்ட கோரக்காட்சி.... அப்பப்பா சொல்லி மாளாது. ஒரு பக்கம் டிபன் பாக்ஸ் கருகிய நிலையில்... ஒரு பக்கம் யூனிபார்ம் பாதி எரிந்த நிலையில்.... கருகிய நிலையில் பாடப் புத்தகங்கள். ஒரு பக்கம் எழும்பாய் போன குழந்தைகள். பார்த்த அந்த நொடியில் நான் என் சுயநினைவை இழந்தேன். தாங்கி கொள்ள முடியாத சோகம். அனைத்து பெற்றோர்களும் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுத அந்த கோரக்காட்சி , சொல்ல முடியாத நரக வேதனை.
காலையில் தலை பின்னி , பூச்சூடி, சீருடையுடன் , சாப்பாடு எடுத்துப் போன குழந்தைகள்... அழகு சிலைகள் ...இப்படி அலங்கோல எலும்பு துண்டுகளாய் கிடக்கிறார்களே. ஏன் நடந்தது ? எப்படி நடந்தது..? என பல கேள்விகள் பலரின் இதயத்திற்குள்.
இதற்கு யார் காரணம் ? ஆசிரியர்கள் என்ன செய்தார்கள்..? எங்கே போனார்கள்..?? யார் காரணமாய் இருந்தால் என்ன ? எங்கள் குழந்தைகள் போய் விட்டனவே !! யாரிடம் நியாயம் கேட்க..? யார் என் குழந்தையை திருப்பிக் கொடுப்பார்கள்? இறைவனே எங்களை தண்டித்து விட்டானே ..?யாரிடம் முறையிட.?
காலையில் புதிதாய் பூத்த மலர்களாய் பள்ளிக்கு சென்றவர்கள் ,சற்று நேரத்தில் சாம்பலாகிப் போனதை எப்படி ஜீரணிக்க முடியும்.. ? எப்படி நடந்தது ? தெரிந்து என்ன செய்ய ..? ஒரு பயனும் இல்லையே? என் குழந்தை திரும்பி வருவாளா.? நாங்கள் எங்கள் மனதை எப்படி தேற்றிக்கொள்ள போகிறோம் .தாங்க முடியவில்லையே . 100 பிஞ்சு குழந்தைகளை தீ காவு வாங்கி விட்டதே. சாம்பலாகி போய் விட்டார்களே .என்ன செய்ய முடியும்? யாரால் என்ன செய்ய முடியும் ? புலம்புவதை தவிர.
ஐயோ ...நான் என்ன செய்வேன் ..? அவள் என் வயிற்றில் இருக்கும் போது , பாவாடை நாடாவை கூட , அவளுக்கு வலிக்குமோ.. என தளர்வாய் கட்டி, வழுக்கிவிடாதபடி அவ்வப்பொழுது பிடித்துக் கொள்வேனே. இந்த வலியையும் வேதனையும் அவள் எப்படி தாங்கி இருப்பாள்.? .எப்படி துடிதுடித்துப் போயிருப்பாள்..? ஐயோ.... அந்த பிஞ்சு கைகள் ..பிஞ்சு கால்கள்.. இருந்த இடமே தெரியாமல் போய்விட்டனவே. தேம்பித் தேம்பி கதறிக் கொண்டிருந்தாள் வசந்தி.
இந்த விபத்து உலக செய்தியாகிவிட்டது. முதலமைச்சர் முதல் அனைத்து அரசியல் தலைவர்கள் வரை ஒரு வாரமாய் வருவதும் ,போவதும், ஆறுதல் சொல்வதுமாய். யார் வந்து என்ன பயன்..? எத்தனையோ தடவை அந்தப் பள்ளியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யக் கோரிக்கை வைத்தோமே. அரசிற்கு கூட எத்தனையோ விண்ணப்பங்கள் அனுப்ப பட்டன. ஏதும் நடக்கவில்லையே. இத்துனை இளம் தளிர்களின் உயிர் போன நிலையில் , இத்தனை பேர் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்களே.!!. யார் என் குழந்தையை திருப்பித் தருவார்கள். யாரால் முடியும்.. ?
போதுமான இடவசதி இல்லாத நிலையில், எப்படி அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. குழந்தைகளின் வகுப்புக்கு பக்கத்தில் சமையல் அறையில் பற்றிய தீ.. குழந்தைகளை பதம் பார்த்து விட்டதே. ஆசிரியர்கள் எங்கு போனார்கள்.? தெரியவில்லையே..ஆசிரியர்கள் குழந்தைகளை தனியே விட்டுவிட்டு எங்கே சென்றார்கள்..? பிரதம மந்திரி கூட வந்து பார்த்து சென்றாரே.. யார் வந்து பார்த்து … என்ன பயன்.. ? ஒரு பயனும் இல்லையே. எங்கள் மனசு தீயால் வெந்து கொண்டிருக்கிறது.
பத்து வருடம் தவமிருந்து பெற்ற என் செல்ல மகள், என் வீட்டு மகாலெட்சுமி போய்விட்டாளே.. ஐயோ யாரிடம் சொல்லி அழுவேன். காட்டன் புடவைகளை தவிர வேறு எதையும் கட்டுவதில்லை தெரியுமா..?? வெப்பத்தில் அவள் கலைந்து விடுவாளோ
என பயந்து...!! இப்போ இந்த வெப்பத்தை எப்படி தாங்கினாய் மகளே..?
வசந்திக்கு பைத்தியம் பிடிக்காத குறை. அழுது புலம்பினாள். சாப்பிட முடிய வில்லை. தூங்க முடியவில்லை. குழந்தை எப்படி துடிதுடித்து போயிருப்பாள் என்ற நினைவே அவளுள் எப்போதும். ஐயோ என் குழந்தை மட்டுமா... நூறு குழந்தைகளும் அல்லவா துடிதுடித்துப் போய்விட்டார்கள் . அந்தக் கோர நிகழ்வை நினைக்கும் போதே உடல் பற்றி எரிகிறது. மனசு தகதகவென தவிக்கிறது. எப்படியும் அவள் மனதினை சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. பராசக்தி.. மேலே கோபம் வந்தது. நீயே வந்தாயே .ஏன் என்னை இப்படி தவிக்க விட்டு விட்டு, போய்விட்டாய்..? என அழுது புலம்பினாள். உயிருள்ள பிணமானாள். அவள் கணவரும் எவ்வளவோ தேற்றிப் பார்த்தார். முடியவில்லை.
நான் இனி என்ன செய்வேன்..?. மீண்டும் வந்து விடு மகளே. .நீயே என் வயிற்றுக்குள்ளே. மறுபடியும் வந்துவிடு.... வாடி என் கண்மணியே...என் வயிற்றுக்குள்ளே..,!! உன் உடல் கருகி இருக்கலாம் .உன் உயிர்...? நான் உன்னை மீண்டும் சுமக்கிறேன்...வாடி என் செல்லமே. விரைவில் வந்து விடு தாயே. என் பிள்ளை தானே நீ . நீ இல்லாத வலியை உன் தாய்க்கு தந்து விடாதே. மீண்டும் வந்து விடுடி. புழம்பிக் கொண்டே இருந்தாள் வசந்தி.
சில மாதங்களில்… ஒரு மாதம் அவளுக்கு தள்ளிப்போனது. இனம் புரியாத ஒரு ஆனந்தம் மனதிற்குள். என் மகள் வந்து விட்டாள். என் மகள் வந்தே விட்டாள் என மனதிற்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாள் வசந்தி. பத்து நாட்கள் ஆனதும் சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டாள். நல்ல செய்தி. முடிவு அறிந்து வசந்தியின் முகத்தில் மகிழ்ச்சி பிரவாகம்..!!
முற்றும்
ஆக்கம் :எழுத்தாளர் :இரா.கலைச்செல்வி
(
வெள்ளி, 30 மே, 2025
உடல் எடையை குறைப்பது எப்படி?
திங்கள், 19 மே, 2025
மரம்
ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்
#ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்# மாலை அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்.. மா...
-
#அம்மா என்ற ஜக்கம்மா # ( ஒரு பக்க கதை) படைப்பு : எழுத்தாளர் இரா. கலைச்செல்வி ******* அம்மா: பூஜை அறையில் நின்று க...
-
உடல் எடை குறைய 12 மிக எளிய வழிமுறைகள் ஆக்கம் இரா. கலைச்செல்வி 1. காலையில் வெந்நீரில் லெமன் பிழிந்து, தேன் சேர்த்து லெமன் டீ அருந்துங்...
-
சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! # எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி ***** அன்று வீடே ஒரே பரபரப்பாய் இருந்த...